Latest News

விஸ்வரூபத்தை எந்த ரூபத்தில் புரிந்துக் கொள்வது




விஸ்ரூப களவானித்தனம்

ஜனவரி 25 அன்று திரையிட இருக்கின்ற கமலின் விஸ்வரூபம் படத்தைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எதிர்ப்புகள்! முன்னோட்ட காட்சி படிமங்களை பார்க்கும் போதே ஆழமாக ஒரு செய்தியை, ஒரு சமூகத்தை கொச்சைப்படுத்தி வட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. முன்னோட்ட காட்சிகளை வைத்து முடிவுக்கு வர முடியாது என்பதாலும் கமலஹாசன் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல, படத்தைப் பார்த்து விட்டு வருத்தப்பட போகிறீர்கள் என்பதாக எல்லாம் சொன்னார்.

 21.01.2013 அன்று இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாசன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியபோது, அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார்கள். கமல் "வருத்தப்படுவீர்கள்" என்று சொன்ன சரியான அர்த்தத்தை அன்றுதான் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

கமலின் விஸ்வரூபம் படங்களை பார்த்துதான் புரிந்துக் கொள்ள வேண்டுமா அவரின் முந்தைய போக்குகளை பார்த்தாலே புரிந்துக் கொள்ளலாமே? ஒவ்வொருவருக்கும் எதாவது வகையிலான கொள்கை இருக்கும். அது இயல்புதான். கமலுக்கும் கடவுள் மறுப்புக் கொள்கை இருப்பதாக காட்டிக் கொள்ளக் கூடியவர். அதையாவது என்றாவது நேர்மையாக வெளிப்படுத்தி இருக்கிறரா? கடவுள் இல்லையென்று சொல்லவில்லை இருந்தால் நல்லாயிருக்கும் என்று தான் சொல்கிறேன் என அசினிடம் வலிவது போல் காட்சிகளை தசாவதாரத்தில் வைக்கவில்லையா? அதுதான் கமலின் உண்மையான நேர்மையற்ற களவானித்தனம்.

விருமாண்டியில் விடிய விடிய மரணதண்டனை தவறு என்று பெரும் மனிதாபிமான அறிவுஜீவிபோல் பாடம் எடுத்தவர் அப்படியே அவருடைய அடுத்த படமான உன்னை போல் ஒருவனில் அந்தர் பல்டி அடித்து என்கவுண்டர்களையும் மரணதண்டனைகளையும் நியாயப்படுத்தினாரே? தான் சொல்ல விரும்பிய இக் கருத்தை கமலஹாசன் நேரடியாக, நேர்மையாகச் சொல்லவில்லை. டாக்டர் ராஜசேகர் நடித்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படம், இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் கம்பீரமாகவும் வெளியிட்டது. “கைதிகளை சித்திரவதை செய்துதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியுமேயன்றி சட்டபூர்வமான வழிகளில் விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது” என்று அந்தப்படம் ‘நேர்மையாக’ பிரகடனம் செய்தது. அப்படிப்பட்ட ‘நேர்மையான’ படங்கள் பல வந்துவிட்டன.
அப்பேர்ப்பட்ட ஒரு நேர்மை கமலஹாசனிடம் இல்லை. 

‘ஹே ராம்’திரைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது இந்து மதவெறியை அம்பலப்படுத்தும் படம் என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை.. படத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்ட இளைஞனின் பார்வையில்தான் பிரச்சினையைக் காட்டுகிறது. முஸ்லிம்கள் கலவரம் செய்யும் காட்சியுடன்தான் படமே தொடங்குகிறது. வசனங்கள் சில ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்துவது போல அமைத்திருக்கலாம். ஆனால் அவை ரசிகனைச் சென்றடையாது. காட்சிப் படிமங்கள்தான் திரைப்படம் என்பது உண்மையில் இது ஆர்.எஸ்.எஸ் திரைப்படம்.

“ இது குதர்க்க வாதம். முஸ்லிம் மக்களை, முதியவர்கள், குழந்தைகள் என்றும் பாராமல் இந்து வெறியர்கள் வேட்டையாடியதும் படத்தில் இடம் பெறத்தான் செய்கிறது. இறுதிக் காட்சியில் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் இந்து மதவெறிக் குண்டர்கள் புகுந்து கொலை வெறியாட்டம் நடத்துகின்றனர்.ஆர்.எஸ்.எஸ் காரனாக வரும் ஸ்ரீராம் அபயங்கர் முஸ்லிம் மக்களைக் கொலை செய்வதை ‘வேட்டை’ என்று ஒரு ஓநாய் ரத்த வெறியுடன் கூறுகிறான்.இவையனைத்திற்கும் மேலாக, மத நல்லிணக்கத்துக்காப் பாடுபட்டகாந்தியைக் கொன்றவன் யாரோ ஒரு இந்துவல்ல; பார்ப்பனந்தான் காந்தியைக் கொன்றான் என்ற உண்மையைத் தைரியமாக அம்பலப்படுத்தியிருக்கிறார் கமலஹாசன். 

இறுதியில் இந்து மதவெறி பிடித்த கமலஹாசனை அம்ஜத் (ஷாருக்கான்) என்கிற முஸ்லிம் நண்பன் தன் உயிர்த் தியாகத்தால் நெறிப்படுத்துகிறான். இந்த காட்சியும் முஸ்லிம்களை நியாயமாகவும், சரியாகவுமே சித்தரிக்கிறது. எனவே இது பார்ப்பன இந்து மதவெறியை அம்பலப்படுத்தும் படம் தான் என்றும் யாரையும் ஒரு முடிவுக்கு வரவிடமுடியாமல் காய் நகர்த்துவதில் கமல் கில்லாடி.ஹே ராமில் முஸ்லிம்களை வேட்டையாட வருமாறு ஆர்.எஸ்.எஸ்காரன் ஸ்ரீராம் அபயங்கர் அழைக்கும்போது “நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை” என்று மறுக்கிறான். இருப்பினும் சாவர்க்கரின் புத்தகத்தை வாங்கி, மேல் அட்டைப் போட்டு மறைத்து படிக்கிறான்.

’ஹே ராம்’ மகாராஷ்டிராவிலும் டில்லியிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டபோது காந்திக்கெதிரான வசனங்களை ஸ்ரீராம் அபயங்கர் பேசும்போது கைதட்டி பா.ஜ.க. ரசிகர்கள் வரவேற்ற அதேநேரத்தில் கம்யூனிஸ பத்திரிக்கைகள் பார்ப்பனக் கும்பலை அம்பலப்படுத்தும் இந்தப் படம் ஒருவேளை தடை செய்யப்படுமானால் அதற்குக் காரணம் சங்கர மடத்தின் சூழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று எச்சரித்தன.

கமலின் ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் உலகமயமாக்களை எதிர்க்கிற மார்க்சிய,கம்யூனிஸ, நாத்திகத்தை போதிக்கும் திரைப்படம் என்று கம்யூனிஸ பத்திரிக்கை தீக்கதிர் உச்சி மோந்திருந்த அதேவேளையில், உலகமயமாக்களின் ஒன்னாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதிய ஜனதாவின் தலைவர் இல.கணேசனும் சிறந்த ஆன்மீக படம் என்று பாராட்டினாரே? இதுதான் கமல்.

வெள்ளித்திரையில் சிவப்புநிறம் தெரிவதாகக் கேள்விப்பட்டு விரைந்து, சினிமாக் கொட்டகையில் 50,100 அபராதம் கட்டிய கம்யூனிஸ ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட நீயும் கடவுள், நானும் கடவுள் என்கிற அத்வைத ஆன்மீகக் கொள்கை கொண்ட திரைப்படம் காட்டப்பட்டது. உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். ஆனால்Rss கொள்கையை சொல்லும் இணையதளங்களிலும்,முகநூலிலும் முகமூடியாக, அடையாளப்படமாக உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் மொட்டை மாடியில் லேப்டாப் வைத்து உட்காந்திருக்கும் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள்.
தேவர்மகன் திரைப்படத்தில் தென்மாவட்ட அருவா கலாச்சாரத்தையும்,ஜாதி வெறியையும்,கலவரங்களையும் சாடுவதாக அவைகள் தவறு என்று சொல்லும் தோணியில் படம் துணிந்து எடுத்திருப்பதாக பத்திரிக்கைகள் அப்போது பாராட்டின. ஆனால் இன்றும் எனது தென்மாவட்ட ராமநாதபுர கிராமங்களில் நடக்கும் தேவர்சமூக திருமண பத்திரிக்கைகளிலும் டிஜிட்டல் கல்யாண பேனர்களிலும் தெருவில் ஒட்டப்படும் போஸ்ட்டர்களிலும் கமல் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அரிவாளோடு நிற்கிற தேவர்மகன் ஸ்டில்களைதான் போடுகிறார்கள். அவர்கள் திருவிழாக்களில்,கல்யாண பந்தல்களில் போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்ற பாடல்கள் ஒலிக்கிறது எனில்.இதில் கமல் பிராண்ட் களவாணித்தனம் தெரியவில்லையா?

விஸ்வரூபமும் அப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அமெரிக்காவிற்கு எதிரான காட்டமான வசனங்களும், அமெரிக்கா அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொல்வதாக காட்சிகளும் இருக்கும், அந்த தைரியத்தில் தான்  படத்தைப் பார்த்தால் எனக்கு பிரியாணி வாங்கி தருவீர்கள் என்றார், மறுபுறம் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்கிற காட்சி படிமங்களை மிக அழுத்தமாக பதியவைத்து இறுதியில் அமெரிக்கா செய்வது நியாயம் தான் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்பது போல் விடை பெறுவார்.

எல்லோரும் முட்டாள்கள், நான் சகலகலா வல்லவன் அவரவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள். என்கிற சாதுரிய நரித்தனம் விஸ்வரூபமாக வெளிவர இருக்கிறது. இம்முறை அனுமதிக்க மாட்டோம். இம்முறை கமலின் முகத்(சினிமாத்)திரை கிழியும்.

பின்குறிப்பு:
Auro 3 தேர்ந்த இசை, தேர்ந்த நடிகர்கள்,துல்லியமான ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு,பெரும் பொருட்செலவு... எல்லாம் சரிதான். பிச்சை எடுப்பதற்கு யானை வாங்க வேண்டுமா?
நன்றி : வலையுகம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.