Latest News

சூனா வீட்டு பள்ளிக்கூடம் – ஓர் பார்வை !!!



பள்ளிக்கூடம் என்றாலே சற்றென்று நினைவு கொள்வது நாம் கல்வி பயின்ற தொடக்கப்பள்ளிகளே ! காரணம் நெஞ்சம் நெகிழும் அந்த மலரும் நினைவுகள் பசுமரத்து ஆணி போல் பளிச்சென்று நம் மனதில் ஒவ்வொன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

அந்தவகையில் நமதூர் மேலத்தெருவில் கடந்த 1921 ஆண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இன்று நடுநிலைப் பள்ளி என்ற அந்தஸ்தைப் பெற்று அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய ஏழை எளியோர் வீட்டு மாணவ மாணவிகள் கல்வியை பயிலும் சிறப்பை வழங்கி வருகின்றது. மேலும் பரப்பளவில் மிகப்பெரும் இடத்தைக் கொண்டுள்ள பள்ளிகளில் இதுவும் ஒன்று.

என்னுடைய ஆரம்பக் கல்வியை இப்பள்ளியில் பயின்றதால் இப்பள்ளி மீது எனது கவனம் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். இப்பள்ளியின் சாலை வழியே பலமுறை நான் கடந்து சென்றிருந்தாலும் தேர்தல் நேரத்தில் ஓட்டு போடுவதற்காக மட்டும் சென்று வந்ததை தவிர்த்தால் மற்ற நேரங்களில் அங்கே செல்வதற்குரிய வாய்ப்பு எனக்கு அமையாமலேயே போய்விட்டது.

இன்று காலை எனது நண்பர் ஒருவர் மூலம் எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இருவரும் ஒன்றாக சென்றோம். பள்ளியை சென்றடைந்தவுடன் பள்ளியை முழுவதுமாக பார்வையிட்டுக் கொண்டே எங்களின் நினைவுகள் ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துவாறு பார்வையிட்டோம். அப்போது அங்கே கண்ட காட்சிகள் எங்களை அதிர்ச்சியடைய வைத்தன...

மாணாக்கர்களின் எண்ணிக்கை விகிதம் :
மிகுந்த ஜனத்தொகை இருக்கும் குடியிருப்பு பகுதியின் அருகே பள்ளி இருந்தும் மாணாக்கர்கள் எண்ணிக்கை என்னவோ !? இரண்டு இலக்க எண்ணைத் தாண்டாமல் இருந்தது எங்களுக்கு வேதனையைத் தந்தன. அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி பாட திட்டமே நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன என்பதை மறந்து விட்டு கட்டணத்தை செலுத்தி கல்வியை கற்க அனுப்பி வைத்துவிடும் பெற்றோர்கள் நம் முன்னோர்கள் பலர் இதுபோன்ற பள்ளிக்கூடங்களில் கல்வி பயின்று பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறந்து விட்டதேக் காரணமாக இருக்கும்.

வகுப்பு அறை !?
வகுப்பறையின் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருந்தது. காரணம் நாங்கள் கல்வி பயின்ற காலக்கட்டத்திற்கு முன்பே கட்டப்பட்டிருந்த இக்கூடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்து இருப்பதைக் கண்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. மீதமுள்ள பகுதியும் இடிந்து விழுந்து ஆசிரியர், மாணாக்கர் போன்றோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு இதில் கவனம் செலுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை.



அடுத்த அடுத்தக் கட்டங்களின் மீது எங்கள் பார்வை பட்டாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பது எங்களுக்கு மேலும் அதிர்ச்சியைத்தந்தன.

கழிப்பறை வசதி :
அதேபோல் கழிப்பறைகள் எழுதுவதற்கே கூசுகின்றன அந்தளவு மிகவும் அசுத்தமாக காணப்பட்டன. ஆசிரியப் பெருமக்கள் மாணாக்கர்கள் இவற்றை எப்படி பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைத்து போது எங்களின் மனது மிகவும் வேதனையடைந்தது.

அரசின் விதியின் படி...
1. 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை மற்றும் 50 மாணவர்களுக்கு 1 மலக் கழிப்பறை என்ற அளவில், போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம் / போதிய வெளிச்சத்துடன் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வகுப்பறையை ஒட்டிய கடைசியாக அமைக்கப்படவேண்டும். தனியே மைதானத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ அமைதல் கூடாது. கட்டிட உறுதி / உரிமச் சான்றுகள் கழிப்பறைகளுக்கும் அவசியம்.

2. கழிப்பறைகள் தண்ணீர் குழாய் வசதியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும்.

உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. இப்பிரச்சனைகளை பெற்றோர் – ஆசிரியர் கழகம் மூலம் சம்பத்தப்பட்ட கல்வித்துறையின் கவனத்துக்கு எடுத்துச்செல்வது...

2. மஹல்லா நிர்வாகிகளின் சார்பாக பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய கல்விக்குழு, உள்ளாட்சியினர் ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வது...

3. மேலே குறிப்பிட்ட இருவரின் கவனத்துக்கு எடுத்துச்சென்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட விலை என்றால் தமிழக முதல்வருக்கு கோரிக்கையை அனுப்பி வைப்பது...

4. பொது மக்களின் ஒத்துழைப்போடு நமது பேரூராட்சியின் அனுமதியோடு தமிழக அரசின் “தன்னிறைவுத் திட்டம்“ மூலமாக பாதுகாப்பானக் பள்ளி அறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்...

அதென்ன தன்னிறைவுத் திட்டம் ?
தன்னிறைவுத் திட்டம் : - [ முந்தைய ஆட்சியில் ‘நமக்கு நாமே திட்டம்’  ]
கிராமங்கள், நகரங்களில் மக்கள் விரும்பும் திட்டங்களை தன்னிறைவுத் திட்டம் மூலம் மேற்கொள்ளலாம். திட்ட மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் செலுத்த வேண்டும்.  [ உதாரணமாக நாம் அரசுக்கு ரூபாய் ஒரு லட்சம் செலுத்தினால் அரசு சார்பில் கூடுதலாக இரண்டு லட்சங்கள் பெற்று நமக்கு வேண்டிய திட்டங்களை நாமே செயல் படுத்திக்கொள்ளலாம் ]

அரசுப் பள்ளிக் கட்டடங்கள், ஆய்வுக்கூடங்கள், பள்ளிக் கழிவறைகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கும் அரசு விடுதிகள் கட்டுதல், அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள், கால்நடை வளர்ப்பு மையங்கள், நூலகங்கள், அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், ரேஷன் கடைகள் ஆகியவற்றை கட்டுவதற்கு இத்திட்டத்தை பயன்படுத்தலாம்.

சமுதாய சொத்துக்களை உருவாக்குதல், குடிநீர் ஆதாரம் உருவாக்குதல், சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், தானியகளம் அமைத்தல், ஊரக குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார வளாகங்களை பராமரித்தல், பாலங்கள் அல்லது சிறுபாலங்கள் கட்டுதல், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அமைத்தல்  உள்ளிட்ட பல்வேறு பணிகளை இத்திட்டம் மூலம் மேற்கொள்ள முடியும்.

அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடி நீர், உணவுக் கூடங்கள் மற்றும் வகுப்பறைகளின் தரம், கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி நமது பள்ளிகளை நாமே தரத்திலும் சேவையிலும் உயர்ந்து நிற்க துணை புரிவோம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! பார்வைகள் தொடரும்...

சரி அதென்ன சூனா வீட்டு பள்ளிக்கூடம் !?
எனது வாப்புச்சா வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருந்த வாய்க்கால்தெரு [ நடுத்தெரு ] பள்ளிக்கூடத்தில் எனது தகப்பனார் ஆரம்பக் கல்வியைக் கற்றிருந்ததால் இப்பள்ளியில் தொடக்கக் கல்வியை கற்ற எனது தாயாரிடம் ‘சூனா வீட்டு பள்ளிக்கூடம்’ என்ற பெயர் எப்படி வந்தன ? என்ற கேள்வியை கேட்டேன்.

ஓ அதுவா ! நம்ம தெருவிலே ஆரம்பத்திலே பள்ளிக்கூடம் இல்லை. முதன் முதலா நம்ம சூனா வீட்டு ‘கவ்வா ராத்தா’ வீட்டிலுள்ள மிகப்பெரிய திண்ணையில் தான் படிப்பை சொல்லித்தந்து பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து வைத்தனர். அன்றிலிருந்து இன்று வரை இப்பள்ளியை ‘சூனா வீட்டு பள்ளிக்கூடம்’ என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது என்ற தகவலைத் தந்து வியக்கவைத்தார்.

1 comment:

  1. நானும் இதே பள்ளியில் தான் என் ஆரம்ப கல்வியை நான் தொடங்கினேன் அன்று நான் பார்த்த அதே கட்டிடங்கள் தான் இன்றுவரை உள்ளது அதுவும் நான் நான்காம் வகுப்பு படித்த கட்டிம் தான் இன்று உரு மாரி நிர்கிறேதே என்று பார்க்கும் போது மனதை வருத்தப்பட வைக்கிறது நான் அந்த பள்ளியில் படித்த மாணவன் மற்றும் அல்ல அந்த பள்ளி இருக்கும் முஹல்லாவாசி என்ற முறையிலும் இதை நினைத்து நான் வெக்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.தம்பி சேக்கனா M. நிஜாம் அவர்கள் இந்த பதிவை உலகிற்க்கு அறிய செய்தமைக்கு நான் முதலில் நன்றி சொல்கிறேன். ஜமால் காக்கா அவர்கள் சொல்லியது போன்று நமது முஹல்லாவில் உள்ள பள்ளிக்கும் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் ஜமால் காக்கா தங்கள் ஈமெயில் அட்ரஸ் தரவும் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன் இந்த பள்ளி விசைமாக ஒத்துழைக்க தயார்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.