டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரட்டிப்பாகியுள்ளது. ஆனால் அவரது அமைச்சர்கள் பலரின் சொத்துக்கள் பிரதமரை விட எங்கேயோ போய் விட்டார்கள். அதாவது பல மடங்கு பல்கிப் பெருகியுள்ளது அவர்களின் சொத்துக்கள்.
பிரதமரின் சொத்து மதிப்பு தற்போது ரூ. 10.73 கோடி ஆகும். அதில் ஒரு மாருதி 800 காரும் அடக்கமாகும்.
மத்திய அமைச்சர்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக பிரபுல் படேலுக்கு ரூ. 52 கோடி சொத்துக்கள் உள்ளன. அவரது கட்சித் தலைவரான சரத் பவாருக்கு ரூ. 22 கோடி சொத்துக்கள் உள்ளன.
பிரதமர் அலுவலக இணையதளத்தில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில்தான் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு ரூ. 55 லட்சம் சொத்து மட்டுமே உள்ளது. கேபினட் அமைச்சர்களிலேயே மிகவும் குறைந்த சொத்துக்களைக் கொண்டுள்ளவர் இவர் மட்டுமே.
மன்மோகன் சிங்கின் சொத்து விவரம்
மன்மோகன் சிங் தனது சொத்துக்கள் பட்டியலில் வீடுகள், வங்கி முதலீடுகள், மாருதி 800 கார் ஆகியவற்றைக் காட்டியுள்ளார்.
மன்மோகன் சிங்குக்கு டெல்லியிலும், சண்டிகரும் இரண்டு ஃபிளாட்டுகள் உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ. 7.27 கோடி ஆகும். ரூ. 3.46 கோடி மதிப்பில் வங்கியில் முதலீடுகள், பத்திரங்கள், வங்கிக் கணக்குகள் உள்ளன.
தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.10,73,88,730.81 என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிரதமரின் சொத்து மதிப்பு ரூ. 5.11 கோடியாக காட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு காட்டிய சொத்துக்களைத்தான் இப்போதும் பிரதமர் காட்டியுள்ளார். என்ற போதிலும், இந்த சொத்துக்களின் மதிப்பு இப்போது அதிகரித்திருப்பதால் பிரதமரின் சொத்து மதிப்பும் அதிகமாக காட்டப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங்கிடம் உள்ள மாருதி 800 காரின் மதிப்பு ரூ. 21,033 என்று காட்டப்பட்டுள்ளது. அவரிடம் 150.80 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் மதிப்பு சொத்து மதிப்புடன் காட்டப்படவில்லை.
அஸ்ஸாம் வங்கியில் ரூ. 6,515.78 மட்டுமே
இதுதவிர அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூரில் மன்மோகன் சிங்குக்கு ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் வெறும் ரூ. 6515.78 மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கும், அவரது மனைவி புரோமிளாவுக்கும் மொத்தமாக ரூ. 45.33 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்தின் சொத்து
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ. 11.96 கோடி என்று கூறப்பட்டுள்ளது. அவரது மனைவி நளினிக்கு உள்ள அசையாச் சொத்துக்களின் மதிப்பு ரூ. 4.82 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.அழகிரிக்கு ரூ. 9.50 கோடி சொத்து
மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தனக்கு ரூ.9.50 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment