Latest News

அணு மின் நிலையம் பாதுகாப்பானதென்று அப்துல் கலாம் கூறிய பிறகும் அச்சம் தேவையா?: கி.வீரமணி


சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் உறுதியாகத் தெரிவித்த பிறகும், எதிர்ப்பைத் தொடர்வது தேவையற்றது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கூடங்குளம் அணு மின் நிலையப் போராட்டம் மக்களின் வெறும் அச்ச உவுணர்வுக்காகவே என்றால் இதுவரை வல்லுநர்கள், உயர் நீதிமன்றங்கள், ஆட்சியாளர்கள் தந்த அறிவியல்பூர்வ விளக்கங்கள் மூலமே அவை தெளிவாகியிருக்க வேண்டும்.

இன்றைய மின் தட்டுப்பாட்டின் உச்சத்தில், அணு மின் சக்தி என்பது தவிர்க்க இயலாத தேவையாகும். நீர் மின்சாரம், அனல் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய வெப்ப மின்சாரம் என்பன இப்போதுள்ள சூழ்நிலையில் அவசரத் தேவைக்கேற்ப உதவக்கூடிய நிலையில் இல்லை. இதனால் அணு மின் சக்தி இன்றியமையாதது.

இதையொட்டி அணு மின் உற்பத்தி மக்களுக்குப் போதிய பாதுகாப்புடன் இயங்கும் என்ற உறுதியை ஆட்சியாளர் மட்டுமல்ல, அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளும் உறுதியாகத் தெரிவித்த பிறகும் எதிர்ப்பைத் தொடர்வது தேவையற்றது.

மீனவ சகோதரர்களின் அச்சத்தை அகற்றி, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என்ற உறுதியை மத்திய, மாநில அரசுகள் மீண்டும் வழங்கி போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலமும் முயற்சிக்க வேண்டும்.

கூடங்குளத்தில் 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பல்லாயிரவர் திரண்டுள்ளனர். காவல்துறை தொலைநோக்கோடு செயல்பட்டு இருக்க வேண்டாமா? முதல்வர் என்ன செய்ய வேண்டும்? முதல்வர் இப்போது விட்ட அறிக்கையை, ஒரு நாள் முன்பாகவோ, அவர்கள் விரும்பியபடி தொலைக்காட்சி மூலமாகவோ, காணொலி மூலமோ கூட விளக்கிக் கூறி அவர்களின் போராட்டத்தைக் கைவிட வழிவகை கண்டிருக்க வேண்டும்.

முதல்வர் உறுதி கொடுக்க வேண்டும் என்று போராட்டக்குழு தலைவர் கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது இந்த நிலையை முதல்வர் பயன்படுத்திக் கொண்டு இருக்க வேண்டாமா? நாட்டு நலன்தான் முக்கியம். இப்பொழுது கூட அந்த முயற்சியை முதல்வர் தொடரலாமே. கண்ணீர்ப் புகை குண்டு, தடியடி என்பது போன்றவை தேவையற்ற எதிர் விளைவுகளையும் ஏற்படுத்திவிட்டது.

இந்த போராட்டம் பல இடங்களில் பரவி, ஒரு மீனவச் சகோதரர் துப்பாக்கிச்சூட்டிற்குப் பலியாகியுள்ளது வேதனைக்குரியது. அதைச் சாக்காக வைத்து எரியும் தீயை அணைக்காமல், அதில் நெய்யூற்றி விசிறிவிடும் அரசியல் சித்து விளையாட்டு ஒரு பக்கம். மறு பக்கம் மின்வெட்டு 12 மணி நேரம் என்று மிரட்டிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் இந்த வேதனை நீடிக்கலாமா? சிலரது விளம்பர வெளிச்சம் பிரச்சினைக்குத் தீர்வாகிவிடுமா? ஜனநாயகத்தில் போராட உரிமை உண்டு. வன்முறைக்கு உரிமம் கொடுத்தால் பிறகு தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற தகாத நிலையே உருவாகும். எல்லா தரப்பு மக்களும் பொது நலனைக் கருதி முடிவுகளை எடுப்பது அவசியம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.