Latest News

  

குஜராத் பெண் அமைச்சரின் கொடூரம்


2002 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் இந்தியாவின் புகழுக்குத் தீராத களங்கம் விளைந்த ஆண்டு. எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி வெளிநாடுகளுக்குச் செல்வேன் என பாரதப் பிரதமரே கவலைப்பட்ட ஆண்டு  அது.

கோத்ரா கலவரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற குஜராத் இனப்படுகொலையை இந்தியா ஒளிர்கிறது; VIBRANT GUJARAT என என்னதான் வளர்ச்சித் திட்டங்களைக் காட்டி, வாய்மாலம் பேசி மறைக்க முயன்றாலும் அது என்றுமே மறைந்து போகாத பாவக் கறை படிந்த சோக வரலாறு என்பது தெளிவாகிக் கொண்டே இருக்கின்றது.

இந்த இனப்படுகொலைக்குத் தலைமை தாங்கி, முன்பு தலைமறைவாகிவிட்ட முக்கியக் குற்றவாளிகளான குஜராத் அரசின் குழந்தைகள், பெண்கள் நலத்துறை அமைச்சர் மாயாபென் கோட்னானி, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் ஜெய்தீப் பட்டேல் ஆகியோர் சிறப்பு விசாரணைக் குழுவிடம் சரணைடைந்து இதற்கான ஆதாரம். குஜராத் கலவரம் என்பது ஓர் எதிர்வினையன்று. குஜராத் அரசு திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை என்பது இந்த நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இந்தியாவின் அன்மைக்கால வரலாற்றில் மிகக் கொடூரமானன் முறையில் நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலை அரசு பயங்கரவாதத்திற்கு ஒரு வலுவான ஆதாரம். 2002 இல் நரோதாபாட்டியா,நரோதாகாம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரத்தில் 106 பேர்
கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையில்,அன்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாயாபென் கோட்னானிக்கு நேரடித் தொடர்பு உள்ளது என சாட்சிகள் தெரிவித்திருந்தும்கூட மாநிலக் காவல் துறை இவர்களை வேண்டுமென்றே குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. மாயாவைப் பாதுகாக்க அனைத்துவிதமான உதவிகளையும் நரேந்திர மோடி அரசு செய்து கொடுத்தது. அதுமட்டுமல்ல அதற்குப் பின்னர் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டும் மாயாவின் தண்ணிகரற்ற ’சேவைகளுக்கு’ மதிப்பளித்தார் நரேந்திர மோடி.
எந்தவிதமான விசாரணையையும் மேற்கொள்ளாமல் மாயாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்ற தன்னிச்சையான முடிவுக்கு வந்தது குஜராத் மாநிலக் காவல் துறை. நரோதாபாட்டியாவில் வன்முறை நடைபெற்றபோது அங்கு மாயா காரில் வந்து இறங்கினார். கூரிய வாள்கள்,தாடி போன்ற பயங்கர ஆயுதங்களை விநியோகித்தார். பெண்கள், குழந்தைகள் உள்பட சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரை நெருப்பிலிட்டுக் கொல்ல வன்முறை வெறி பிடித்த கயவர் கூட்டத்துக்குக் கட்டளை பிறப்பித்தார். இதனை நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் இருந்தும் கூட காவல் துறை அதனைப் பொருட்படுத்தவே இல்லை. ஏராளமான பெண்களை மானபங்கப்படுத்திய பிறகே தீயிலிட்டுக் கொளுத்தினார்.

உச்ச நீதிமனறம் இதில் தலையிட்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த பிறகுதான் இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வரத் துவங்கின. குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடும் ’ஜன சங்கர்ஷ் மன்ச்’ எனும் அமைப்பு, சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்த ஆதாரங்கள் மாயாவுக்கு எதிரான வலுவான ஆதாரமாகத் திகழ்ந்தது. முன்னாள் குற்றப் புலானாய்வுத்துறை அதிகாரி ராகுல் சர்மா சேகரித்த இரண்டு செல்பேசி நிறுவனங்களின் அறிக்கைகளை ஆதாரமாக்கி, ஜன சங்கர்ஷ் மன்ச்சின் வழக்குரைஞர் முகுல் சர்மா சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்த ஆதாரங்களின் முலம், சம்பவம் நடைபெற்றபோது நான் காந்தி நகரில் இருந்தேன் என்ற மாயாவின் வாக்குமூலம் பொய்யானது.

முன்பு மாயாபென் கோட்னானிக்கும் ஜெய்தீப் பட்டேலுக்கும் சிறப்பு விசாரணைக் குழு நேரில் வரும்படி அறிவிக்கை அனுப்பியும்கூட அவர்கள் நேரில் வராமல் தலைமறைவானார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் தேடப்படும் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசில் அமைச்சராக உள்ள ஒருவர் மாநிலத்தில் எங்கு பதுங்கி உள்ளார் என்பது கூட ஓர் அரசுக்குத் தெரியமலா இருக்கும்? ஒரு போதும் இல்லை. அவர்கள் அரசின் பாதுகாப்பில்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் முன் பிணை கேட்டு அஹமதாபத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அவர்கள் அணுக வேண்டிய கட்டாயம் வந்தது.

சிறப்பு விசாரணைக் குழுவின் நேர்மையான விசாரணைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது எனும் நிபந்தனையுடன் அஹமதாபத் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த முன் பிணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த காரணத்தால் வேறு எந்த வழியும் இல்லை என்ற நிலையில்தான் அவர்கள் சரணடைந்தார்கள் என்பது தெளிவு. தலைமறைவாக இருந்த காலம் முழுவதும் அவர்கள் மோடியின் அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பெற்று வந்தனர். தாமாகப் பதவி விலகவும் இல்லை; குற்றம் சாட்டப்பட்டவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க நரேந்திர மோடியும் நடவடிக்கை எடுக்கவில்லை. செஷன்ஸ் நீதிமனறம் வழங்கிய முன் பிணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னர்தான் அமைச்சரவையிலிருந்து அவர்கள் விலகினர்.

குஜராத் இனப்படுகொலை குறித்த விசாரணைகலை திசை திருப்பும் நடவடிக்கைகளை மட்டுமே மோடி அரசு தொடர்ந்து செய்து கொண்டிருந்தது. ஜன சங்கர்ஷ் மன்ச் சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்த அதே ஆவணங்களைத்தான் குஜராத் அரசி நியமித்த நானாவதி - கே.ஜி.ஷா - அக்‌ஷய் மேத்தா விசாரணை ஆணையத்திடமும் அளித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆவணங்களை கணக்கில் கொள்ளாமல் மோடி அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது நானாவதி குழு.

அக்‌ஷய் மேத்தா குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தபோது, நரோதாபாட்டியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எந்தவித ஆதாரங்களையும் ஆவ்ணங்களையும் பார்க்காமலேயே பிணை வழங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.இதனைத் தெஹல்கா புலனாய்வுக் குழு நடத்திய இரகசிய விசாரனையின்போது முக்கியக் குற்றவாளியான பாபு பஜ்ரங்கியே ஒப்புக் கொண்டுள்ளார். நீதிபதி ஷா மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட காலி இடத்துக்கு மாநில அரசு மேத்தாவை நியமித்தபோது இவர் அரசுக்குச் சாதகமானவர்; ஒருதலைப்பட்சமானவர்; இவரிடம் நீதி கிடைக்காது; வேறு ஒரு நடுநிலையான நீதிபதியை நியமிக்க வேண்டும் எனக்கூறி இதனை ஜனசங்கர்ஷ் மன்ச் எதிர்த்தது. ஜனசங்கர்ஷ் மன்ச் பரிந்துரைத்த ஒருவரைக்கூட நீதிபதியாக நியமிக்க மோடி அரசு ஒத்துக் கொள்ளவில்லை.

தொழில் ரீதியாக பார்த்தால் மாயா ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். அவர் ஒரு பெண்; பல பெண்களுக்குப் பிரசவம் பார்த்தவர் எனும் நிலையில் அவரிடமிருந்து பூவினும் மெல்லிய மென்மையை நாடு எதிர்பார்த்தது. ஆனால் பாசிச எண்ணங்களும் வகுப்புவாத வெறி உணர்வும் அவரைக் கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து சிசுக்களை வெளியே தூக்கி வீசுகின்ற ஈவு இரக்கமற்ற கொடுங்கோலர்களுக்குத் தலைமை தாங்குகின்ற சூத்திரதாரியாக மாற்றி விட்டன.


இன்று இவர் தப்பிக்க முயற்சித்து நடத்திய நாடங்கங்களும், அனைத்து சட்ட ஓட்டைகளும் அடைபட "மாயா கோட்னானி"க்கு ஒட்டு மொத்தமாக 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள் அமைப்பின் தலைவன் "பாபு பஜ்ரங்கி"க்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நன்றி : வலையுகம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.