Latest News

  

சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஆங் சான் சூகி

நைப்பியித்தௌ: கடந்த புதன்கிழமை (25/07/2012) மியன்மார் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ "சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிகாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தித் தன்னுடைய கன்னி உரையை நிகழ்த்தினார்.

மியன்மாரின் 'மக்களாட்சிக்கான தேசிய லீக்' கட்சித் தலைவரும், 1991 ஆம் ஆண்டில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான சூகீ, இராணுவ அடக்குமுறை ஆட்சியாளர்களால் சுமார் 15 வருடகாலம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

2010 நவம்பர் 13 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட சூ கீ, "மியன்மாரில் வாழும் நிராயுதபாணிகளான சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பேணப்பட வேண்டும்" என்று தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் வலியுறுத்திப் பேசியுள்ளார்.
"மியன்மாரில் உண்மையான ஜனநாயகம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின், நாட்டில் வாழும் சகல இன மக்கள் மத்தியிலும் சம உரிமை, பரஸ்பர நன்மதிப்பு என்பன கட்டியெழுப்பப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சமான அத்துமீறல் நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்பான சட்டப் பிரேரணைகள் உருவாக்கப்படுவது தொடர்பில் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துரையாட முன்வர வேண்டும்" என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செயற்திறன் மிக்க வறுமையொழிப்பு நடவடிக்கைகள், இனங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லுறவு கட்டியெழுப்பப்படல், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படல் முதலான பல்வேறு விடயங்கள் குறித்து அவர் தனது உரையில் வலியுறுத்திப் பேசியுள்ளார்.
"இரும்புத்திரை நாடு" என்று பெயர்பெற்ற மியன்மாரில் அண்மைக் காலமாக முஸ்லிம் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான படுகொலை நடவடிக்கைகள் தொடர்பில் உலகெங்கிலும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது தொடர்பில் தன்னுடைய முதலாவது நாடாளுமன்ற உரையிலேயே எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ குரல் எழுப்பி இருக்கின்றமை ஒரு நல்ல திருப்பம் என அரசியல் அவதானிகள் கருத்துரைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.