Latest News

பை துபை —- ( ஏ.ஏ.ஹெச்.கே. கோரி )


ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த ஒரு வாரத்திலேயே கணக்குத் தீர்த்து ரிலீவிங் ஆர்டரைக் கையில் கொடுத்துவிட்டார்கள்.
அதைவிட முக்கியம், பத்து வருஷமாய் இந்தக் கம்பெனியின் பாதுகாப்பிலிருந்த விலை மதிக்க முடியாத என்னுடைய டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட் விடுதலையடைந்து என் கைக்கு வந்து சேர்ந்துவிட்டது.
டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட்டோடு அடுத்த வாரம் துபாய்க்குப் பறக்க வேண்டும். துபாயில் இதைவிடப் பல மடங்கு சம்பளம் கூடிய வேலையொன்று ஐயாவுக்காக காத்திருக்கிறது.
அந்த துபாய்க் கம்பெனியில் இந்த டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட்டைக் கைப்பற்றி வைத்துக்கொள்வார்கள். அதற்கு முன்னால் என்னுடைய பல வருஷ கனவொன்றை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். அதற்காக ஊட்டிக்குப் பயணப்படவேண்டும்.
ஊட்டிக்குப் போய், பட்டமளிப்பு அங்கியோடு, டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட்டை சுருட்டிக் கையில் பிடித்த படி, நான் படித்த உதகமண்டலம் அரசினர் கலைக்கல்லூரியில் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஊட்டி என்றதும் சீனிவாசன் நினைவுக்கு வந்தான்.
ஊட்டியில் என்னோடு படித்த சீனிவாசன்.
உடன் படித்த வகுப்புத் தோழர்களில் மற்றவர்களெல்லாம் காணாமல் போய்விட்ட பின்னும், தொடர்ந்து என்னோடு தொடர்பு கொண்டிருந்த ஒரே சிநேகிதனான சீனிவாசன்.
சீனிவாசனோடு சிநேகம் தொடர்ந்து கொண்டிருந்ததற்கு, என்னைப் போலவே அவனும் இப்போது சென்னையில் வசிக்கிறவன் என்பதும் ஒரு காரணமாயிருக்கலாம். ஆனாலும் என்ன காரணத்தாலோ கடந்த ஒரு வருஷமாய் அவனை சந்திக்கவுமில்லை. ஃபோனில் பேசிக் கொள்ளவுமில்லை. நான் தான் மெத்தனமாயிருந்துவிட்டேன். அவனும் என்னை சந்திக்கவோ, பேசவோ முயற்சி ஏன் எடுக்கவில்லை என்று யோசனையாயிருந்தது.
பரவாயில்லை. தொடர்பை இப்போது புதுப்பித்துக் கொள்ளலாம்.
அவனையும் இழுத்துக்கொண்டு ஊட்டிக்கு மலையேறலாம்.
நம்ம காலேஜுக்கு முன்னால் ரெண்டு பேரும் சேர்ந்து நின்று போஸ் கொடுத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
சீனிவாசன் செல்லுக்கு ஃபோன் செய்தபோது இந்த எண் உபயோகத்தில் இல்லை என்று கம்ப்யூட்டர் குரல் சொன்னது.
லாண்ட் லைனுக்கு அவனுடைய வீட்டுக்கு டயல் செய்தேன்.
“ஹலோ?”
“ஹலோ, சீனிவாசன் இருக்காருங்களா மேடம்?”
“எந்த சீனிவாசன்?”
“எஸ். சீனிவாசன்”.
“நீங்க யார் சார் பேசறீங்க?”
“அவரோட ஃப்ரண்டுங்க”.
“ஒங்களுக்கு விஷயம் தெரியாதா? அவர் எறந்து போய் ஆறு மாசம் ஆச்சே சார்”.
“என்னம்மா சொல்றீங்க? சீனிவாசன் செத்துப் போய்ட்டானா !”
“ஆமா சார், ஹார்ட் அட்டாக்ல போய்ட்டார்”.
பேரதிர்ச்சியான அந்த செய்தியைக் கேட்டு எனக்கும் ஹார்ட் அட்டாக் வரப்பார்த்தது. நான் சீனியோடு தொடர்பில்லாதிருந்த ஒரு வருஷத்தில் ஆறு மாச காலம் அவன் உயிரோடிருந்திருக்கிறான். அந்த ஆறு மாசத்தில் எத்தனை தரம் அவனை சந்தித்திருக்கலாம். எத்தனையெத்தனை தரம் ஃபோனில் பேசி மகிழ்ந்திருக்கலாம். என்னுடைய அசிரத்தையினால் பல பொன்னான கணங்களை இழந்துவிட்டது. நண்பனை இழந்த பின்னால்தான் உறைக்கிறது.
லைட்டான லக்கேஜை முதுகில் சுமந்துகொண்டு, சீனிவாசனைக் குறித்த சுமையான சோகங்களை நெஞ்சில் சுமந்து கொண்டு ஊட்டிக்குப் பயணமானேன்.
கல்லூரிக் காலத்தில் பார்த்த ஊட்டி இப்போது இல்லை. மலைவாசஸ்தலங்களுக்கே உரித்தான சம்பரதாயக் கட்டிடங்களெல்லாம் மாறி, அடுக்குமாடி கட்டிடங்கள் முளைத்துவிட்டன.
ஏ டி ஸி தியேட்டர் இருந்த மாடியில் வேறு ஏதோ விளம்பரக் கம்பெனி இருக்கிறது. தாஸப்ரகாஷ் வுட்லண்ட்ஸ் எல்லாம் செயல்பாடுகள் இழந்து கிடக்கின்றன.
ஸ்பென்ஸரை மூடிவிட்டார்கள். நானும் சீனிவாசனும் சாயங்காலங்களில் போய்ப் புத்தகங்களைப் புரட்டுகிற அரசாங்க லைப்ரரி இப்போது இல்லை.
அஸெம்ளிரூம்ஸ் தியேட்டர் லாலி இன்ஸ்ட்டிட்யூட், ஸிம்ஸன்ஸ், செல்லராம்ஸ் என்று சில புராதன சின்னங்கள் இன்னும் பிழைத்துக் கிடப்பது ரொம்ப ஆறுதலான விஷயம்.
அதைவிடப் பெரிய ஆறுதலும் சந்தோஷமும் கிட்டியது ஸ்டோன் ஹவுஸ் ஹில்லின் உச்சிக்குப் போன போது, குன்றின் உச்சியில் நான் படித்த அரசினர் கலைக் கல்லூரி கட்டிடம் அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருந்தது.
பிரிட்டிஷ் காலத்துப் புராதனக் கலைக் கட்டிடம்.
மெட்ராஸில் இது இருந்திருந்தால் கருணைக் கொலைக்கு நாள் குறித்திருப்பார்கள்.
கல்லூரிக் கட்டிடத்தைப் பரவசத்தோடு பார்த்தபடி நின்றேன். பக்கத்தில் சீனிவாசன் தான் இல்லை.
ஆனால், கம்பெனி கொடுக்க ஒரு போட்டோ கிராஃபர் இருந்தார்.
பொடானிக்கல் காடனிலிருந்து ரொம்ப பிரயத்தனப்பட்டு நான் கிளப்பிக் கொண்டுவந்த ஃபோட்டோ கிராஃபர் காடனை விட்டு வரவே மாட்டேனென்று அடம்பிடித்த மனிதர், பிறகு டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட் சகிதம் கல்லூரி முன்னால் நின்று ஃபோட்டோ பிடித்துக் கொள்கிற என்னுடைய அபிலாஷையைச் சொன்ன பிறகு என் மேல் இரக்கங்கொண்டு டபுள்ச் சார்ஜ் கொடுத்தால் வருகிறேன் என்று கேமராவோடு கிளம்பினார்.
‘என்ன சார் காலேஜ் சொவரையெல்லாம் தடவித் தடவிப் பார்க்கறீங்க?’ என்று ஆச்சர்யப்பட்ட ஃபோட்டோகிராஃபருக்கு பதில் சொல்ல முடியாத படிக்கு உணர்ச்சி வசப்பட்டிருந்தேன்.
சுவர்களை தடவித்தடவிப் பார்த்துப் பூரித்துப் போனதைத்தான் அவர் பார்த்தார். என் விழியோரங்களில் துளிர்த்திருந்த கண்ணீரைப் பார்க்கவில்லை.
கல்லூரிக் கட்டிடத்தையொட்டி ஸ்டோன் ஹவுஸ் ஹில்லின் சின்னஞ்சிறிய ஆஃபீஸ் அப்படியே இருந்ததைப் பார்க்க சந்தோஷமாய் இருந்தது.
ராஜபாளையத்திலிருந்து பெரியப்பா பையன் இக்பாலுக்கு வாரம் ஒரு தரம் நான் லெட்டர் எழுதிப் போஸ்ட் பண்ணுகிற போஸ்ட் ஆஃபீஸ்.
போஸ்ட் ஆஃபீஸுக்கு எதிர்த்தாற்போலக் கான்ட்டீன் கட்டிடமும் இடிபடாமல் இருந்தது.
என் ஸி ஸி பரேட் முடிகிற சாயங்காலங்களில் இந்தக் கான்ட்டீனிலிருந்து தான் ஆளுக்கு ரெண்டு ஸெட் பூரிக்கிழங்கு வரும். அந்த மாதிரி சுவையான பூரிக்கிழங்கை அதன்பிறகு சாப்பிட வாய்க்கவேயில்லை.
என் ஸி ஸி பரேடில் உடனிருக்கிற நண்பர்களின் பெயர்களையெல்லாம நினைவுபடுத்திப் பார்த்தேன். பாலசுப்பிரமணியம், அனந்தகிருஷ்ணன், சவேலால் கோச்சர், மதன்ராஜ், மதன் கோபால், பிஸ்வாஸ் ஜோகி, ஜஃப்ருல்லா, சேட் அலி, எல். கிருஷ்ணன் …
கல்லூரியின் உயரத்திலிருந்து ச்சேரிங் க்ராஸ்க்கு இறங்குகிற தார்ச் சாலையில் என்னுடைய ஒரு கையை பாலசுப்பிரமணியனும் மற்றதை சீனிவாசனும் பிடித்துக் கொண்டு ஓட, நான் பாதங்களின் மேல் உட்கார்ந்த நிலையில் வழுக்கிக்கொண்டே போவேன். லாடங்கள் பதித்த என் ஸி ஸி பூட்ஸ்களின் உராய்வில், சாலையில் நெருப்புப் பொறிகள் கிளம்புவதை ரசித்தபடியே ஸ்கேட்டிங் தொடரும், அடி வாரம் வரை.
அந்த ஆனந்தமான அனுபவத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது.
யாரிடம் பகிர்ந்து கொள்வது? இந்த ஃபோட்டோ கிராஃபருடன் தான்.
நான் விவரித்த அனுபவத்தை மனிதர் ரசித்துச் சிரித்தார்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு வேறு சில சங்கதிகளையும் அவரிடம் அவிழ்த்து விட்டேன்.
சீனிவாசனும் நானும் க்லாஸ் பட் பண்ணிவிட்டு காடனில் பார்த்த ஷுட்டிங்கள், நடிகர் நடிகைகளிடம் வாங்கின ஆட்டோகிராஃப்கள், ஆஃப்ஸீஸனில் அடிமாட்டு ரேட்டுக்குக் குதிரைச் சவாரி செய்தது, போட்டிங் போனது …
சீனிவாசனும் நானும் புளூ மவுன்ட்டன் தியேட்டர் ஓனரின் பதினஞ்சு வயசுப் பாப்பாவைக் கலை நயத்தோடு ரசித்து வம்பில் மாட்டிக் கொண்ட அந்தரங்கத்தைக் கூட நான் விட்டு வைக்கவில்லை.
அதைச் சொன்னபோது, ‘ஹ்ம். அவங்கல்லாம் இப்ப எங்க இருக்காங்களோ, புளூ மவுன்ட்டன் தியேட்டரெல்லாம் மூடி ரொம்ப நாளாச்சு’ என்று என்னை சோகப்படுத்தினார் ஃபோட்டோகிராஃபர்.
சீனிவாசனோடு நான் மேத்தா தியேட்டரில் பார்த்த படங்களைச் சொன்னபோது, ‘மேத்தா தியேட்டர் இப்ப கெம்பகவுடா தியேட்டராயிருச்சு’ என்று ஒரு தகவல் தந்தார்.
“அங்க என்ன படம் ஓடுது இப்ப?’’
‘’ஒரு படுகுப் படம். கவவ தேடி’’.
‘’அட, படுகு லாங்வேஜ்ல சினிமாவெல்லாம் கூட இப்ப எடுக்கறாங்களா?’’.
‘’நாலஞ்சு படம் வந்துருச்சு. இந்தப் படம் எடுத்தவர் ஒரு டாக்டர், டாக்டர் மகேஷ்பாபு பி ஹெச்டி’’.
’’அட, படுகாஸ்ல டாக்டரெல்லாம் கூட இருக்காங்களா இப்ப!’’.
‘’ஏன் இருக்கமாட்டாங்க? நாங்கூட படுகா தான். படுகாஸ்ல ஃபோட்டோகிராஃபர் இருக்கறப்ப டாக்டர்ஸ் ஏன் இருக்க மாட்டாங்க!’’.
போட்டாரே ஒரு போடு! அவர் போட்ட போட்டில் ஃபோட்டோகிராஃபரை எனக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.
எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டிருந்தவனை ‘சார்’ ஃபோட்டோ எடுக்கணும்னு சொன்னீங்களே?’ என்று உசுப்பி விட்டார்.
அட, வந்ததே அதுக்குத் தானே சார்.
கல்லூரி வளாகத்தில் ஆள் நடமாட்டமே இல்லை.
கோடை விடுமுறை ரொம்ப அனுகூலம்.
டிகிரியை சுருட்டிக் கையில் பிடித்தபடி மெய்ன் பில்டிங்கின் முன்னால் நின்று போஸ் கொடுத்தேன்.
‘’அது என்ன சார் கையில ஒரு பேப்பரச் சுருட்டி வச்சிருக்கீங்க?’’.
‘’பேப்பரா? இது தாங்க என்னோட டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட். என்னோட சொத்தே இது தான்’’.
’’சொத்துக்கறீங்க அஸால்ட்டாச் சுருட்டிக் கையில வச்சிருக்கீங்க? அந்த ஸர்ட்டிஃபிக்கேட்ட நெஞ்சோட அணச்சிப்புடிச்சிக்கிட்டுப் பெருமையாப் போஸ் குடுங்க சார் !’’.
இது எனக்குத் தோணாமலேயே போய் விட்டதே ! ஊர் உலகத்தில் எல்லாரும் செய்கிறது மாதிரி பாமரத்தனமாய்ப் போஸ் கொடுக்க முனைந்தது எவ்வளவு பெரியதப்பு !
தாங்ஸ் ஃபோட்டோகிராஃபர் சார்.
கல்லூரி கேட்டில் பிரின்ஸிபல் ரூமுக்கு முன்னால் ராதா நம்பியாருடைய ஆங்கில வகுப்பு நடக்கிற வகுப்பறைக்கு முன்னால் என்று பல இடங்களில் என்னை நிறுத்திப் புகைப்படமெடுத்துத் தள்ளி ஒரு ரோலைக் காலி செய்து ரோலை என் கையில் கொடுத்தார் ஃபோட்டோகிராஃபர் மெட்ராஸில் போய் தான் பிரின்ட் போட்டுக் கொள்ள வேண்டும்.
பணம் கொடுத்து விட்டுப் பிரியும் முன், அவரிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள ஆசையாயிருந்தது.
‘’போட்டோகிராஃபர் சார், நீங்க கோச்சுக்க மாட்டீங்கன்னா நா ஒரு விஷயம் சொல்லலாமா? ஒரு படுகா ஜோக்’’.
‘’நா கோச்சுக்க மாட்டேன் சார். சும்மா சொல்லுங்க’’.
‘’எங்க க்லாஸ்ல படிச்ச படுகாப் பசங்க காலைல வந்ததும் குட்மாணிங் சொல்ல மாட்டாங்க. படுகு லாங்வேஜ்ல ‘என் சுத்தி?’ ன்னு சொகம் விசாரிப்பாங்க. அதுக்கு என்னோட ஃப்ரண்ட் சீனிவாசன் என்ன பதில் சொல்லுவான் தெரியுமா? சுத்தியெல்லாம் கல்லு ஒடக்யப் போயிருக்கும்பான்’’.
போட்டோகிராஃபர் கேமரா குலுங்கச் சிரித்தார்.
சிரிப்பு மங்கியதும், வாக்கியத்துக்கு வாக்கியம் சீனிவாசன் சீனிவாசன்ங்கறீங்களே சார், அந்த சீனிவாசனையும் ஊட்டிக்கிக் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?’ என்று அவர் கேள்வி வைத்ததற்கு ‘ஆறு மாசத்துக்கு முந்தி சீனிவாசன் செத்துப் போய்ட்டான் சார்’ என்று நான் சொன்னதும், அவருடைய சிரிப்பு மறைந்து அவர் முகம் வாட்டங் கொண்டு விட்டது.
‘ரொம்ப சாரி சார், ரொம்ப சாரி’ என்று அவர் வருத்தப்பட்டது கூட குரல் கம்மி ஒரு முணுமுணுப்பாய்த் தான் வெளிவந்தது.
சில விநாடிகள் பரஸ்பர மவுனத்துக்குப்பின், சரி சார் நா கெளம்பட்டுமா’ என்றார்.
‘ரொம்பத் தாங்ஸ் போட்டோகிராஃபர் சார். பில் எவ்ளோ ஆச்சுன்னு சொல்லுங்க காஷ் தர்றேன் என்று நான் பான்ட் பாக்கெட்டிலிருந்து வாலட்டை வெளியே எடுத்த போது என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டார்.
‘’காஷ் வேண்டாம் சார்’’.
‘’காஷ் வேண்டாமா? டபுள்ச் சார்ஜ்னு சொன்னீங்க?’’.
‘’சிங்கிள்ச் சார்ஜ் கூட வேண்டாம்’’.
பணத்தை மறுத்துவிட்டுத் திரும்பி நடந்த அந்த போட்டோகிராஃபர் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றேன்.
வெறும் போட்டோகிராஃபர் இல்லை இந்த ஆள். மனிதநேயத்தில் டாக்டர்.
இதே போல ஒரு மனித நேயத்தை வெளிப்படுத்த எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடு ஆண்டவனே என்று கடவுளிடம் விண்ணப்பம் வைத்தபடி கல்லூரிக்கு பய் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.
அந்த மனிதநேய டாக்டரை வியந்து கொண்டே நடந்த போது, அவர் சொன்ன டாக்டர் மகேஷ் பாபுவுடைய படுகு மொழிப்படம் நினைவுக்கு வந்தது.
முதல் முதலாக ஒரு படுகு மொழிப்படம் பார்க்கிற ஆர்வத்தில் மேத்தாத் தியேட்டருக்கு நடந்தேன்.
வழியில் டூ வீலர்கள் வாடகைக்குக் கிடைக்கும் என்கிற அறிவிப்புப் பலகை ஒரு கடையில் கண்ணில் பட்டது. நான் ஊட்டிக்கு வந்து சேர்ந்த நேரத்துக்கு இதைப் பார்த்திருந்தால் ட்டூ வீலர் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, ஃபிங்கர் போஸ்ட், ஃபெண் ஹில், ரோஸ் காடன் என்று சுற்றி விட்டு வந்திருக்கலாம். ஏன் தொட்ட பெட்டா சிகரத்தைக் கூடத் தொட்டு விட்டு வந்திருக்கலாம்.
‘கவவ தேடி’ படத்தைப் பார்த்து விட்டு தியேட்டரை விட்டுக் கிளம்புகிற போது படம் எப்டி சார் இருந்தது? என்கிற குரலைக் கேட்டுத் திரும்பினால் ஒரே ஆச்சர்யம்.
சில நிமிடங்களுக்கு முன்னால் திரையில் பார்த்த முகம்.
படத்தயாரிப்பாளரும் டைரக்டருமான டாக்டர் மகேஷ் பாபு.
வீணை எஸ்.பாலச்சந்தர்தான் இப்படியெல்லாம் ரசிகர்களை அதிரடியாய் ஆச்சர்யப்படுத்துவார் என்று வாசித்திருக்கிறேன். அது இருபதாம் நூற்றாண்டில்.
பாலச்சந்தர் பாணியில் இந்த இருபத்தொண்ணாம் நூற்றாண்டில் என்னைப் புளகாங்கிதப்படுத்திய இந்த இயக்குநரை வாழ்த்தி விடைபெற்றுக் கொண்டு, சுகமான நினைவுகளோடு லாட்ஜை நோக்கி நடந்த போது வழியில் பஸ் ஸ்டாண்டில் ஒரு சோகம் காத்திருந்தது.
பத்துமணி ராத்திரியில் ஊட்டி பஸ் ஸ்டாண்ட் நிரம்பி வழிந்தது.
பஸ்ஸுக்குக் காத்திருக்கிற பயணிகளால் அல்ல பஸ் ஸ்டாண்டில் குளிரில் படுத்திருக்கிற பரிதாபப்பட்ட ஜீவன்களால்.
அறையில் வந்து இறைவனைத் தொழுதுவிட்டுப் படுத்தபோது கல்லூரி காலத்தின் மலரும் நினைவுகள் இன்றைக்கு சந்தித்த ரெண்டு வித்தியாசமான டாக்டர்கள், பஸ் ஸ்டாண்டில் பாவப்பட்ட மனிதர்கள் படுத்திருந்த பரிதாபம் இவற்றின் தாக்கத்தால் தூக்கம் பிடிக்க வெகு நேரம் ஆகிவிட்டது.
காலையில் கண் விழித்த போது மணி பத்தைத் தாண்டி விட்டது. பனிரெண்டு மணிக்கு லாட்ஜைக் காலி செய்ய வேண்டும்.
காலி செய்தேன்.
மூணு மணிக்குத்தான் குன்னூருக்கு ரயில்.
ஊட்டியிலிருந்து குன்னூருக்கு மூணே மூணு ரூபாய் டிக்கட்.
நம்ம ஊரில் ப்ளாட்ஃபாம் டிக்கட் காசு !
இயற்கை காட்சிகளை ரசித்தபடியே மலை ரயிலில் குன்னூர் போய்ச் சேர்ந்து ஸிம்ஸ் பார்க்கில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டுக் குன்னூரிலிருந்து பஸ் பிடித்து கோயம்புத்தூர் போய் ராத்திரி சேரன் எக்ஸ்ப்ரஸ்ஸில் ஏற வேண்டும்.
லைட் லக்கேஜ் ரொம்ப வசதி.
பள்ளிக்கூடப் பிள்ளைகள் மாதிரிப் பயணப் பையை முதுகில் மாட்டிக் கொண்டு நடந்தேன்.
பள்ளி வாசலுக்குப் பக்கத்துத் தெருவில் தான் சீனிவாசனுடைய வீடு இருந்தது. அதற்கடுத்த வீடு அவன் மதம் மாறிக் காதலித்த பீ பி ஜானுடைய வீடு.
ரெண்டு வீடுகளுமே சிதைக்கப்பட்டு அந்த இடத்தில் ஒரு லாட்ஜ் முளைத்து விட்டிருந்தது. அந்த லாட்ஜைப் பார்த்துப் பெருமூச்சொன்றை வெளிப்படுத்தி விட்டு காடனைப் பார்க்க நடந்தேன்.
மூணு மணி வரை நேரம் போக வேண்டும்.
நடந்து கொண்டிருந்த போது எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த உருவத்தைப் பார்க்கப் பாவமாயிருந்தது.
குறை விரல்களுடன் கூடிய ஒரு குஷ்டரோகி.
அவருடைய ரெண்டு கால்களில் ஒன்று மரத்தாலானது.
அந்த ஆள் என்னைக் கடக்கிற சமயத்தில் வாலட்டிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்டினேன்.
ஒரு குஷ்டரோகிக்கு யார் நூறு ரூபாய் பிச்சையிடுவார்கள் !
நேற்று நான் யோசித்த மனிதநேயத்துக்கான வாய்ப்பை இறைவன் எனக்கு அருளிட்டான் என்று நான் சந்தோஷப்பட நினைத்தபோது அந்த ஆள் சொன்ன வார்த்தைகளால் ஆச்சர்யமடைந்தேன்.
’’தம்பி, நா பிச்சைக்காரனில்ல தம்பி’’.
’’இது … அதனால் என்ன பெரியவரே இந்த நூறு ரூவா ஒங்களுக்கு ப்ரயோஜனப்படுமே … வாங்கிக்குங்க’’.
விரல்களில்லாத ரெண்டு உள்ளங்கைகளால் அந்த நூறு ரூபாய்த்தாளை அழுத்துயபடி அவர் லேசாய்ச் சிரித்தார்.
‘’நிச்சயமா ப்ரயோஜனப்படும் … இப்படித்தான் தம்பி, எல்லாரும் சேர்ந்து இந்த சீனிவாசனைப் பிச்சக்காரனாக்கிட்டாங்க’’.
என்னுடைய ஆச்சர்யம் விஸ்வரூபமெடுத்தது
‘’பெரியவரே, ஒங்க பேர் சீனிவாசனா?’’
‘’பேர் அழகா இருக்கே ஆள் அருவருப்பா இருக்கானேன்னு யோசிக்கறீங்க’’.
‘’அதில்ல பெரியவரே என்னோட ஃப்ரண்டோட பேரும் சீனிவாசன் தான்’’.
‘’ஆனா அவன் அழகாயிருப்பான். என்ன மாதிரிக் குஷ்டரோகியா இருக்க மாட்டான்’’.
‘’இல்ல பெரியவரே அவன் இப்ப இந்த ஒலகத்லேயே இல்ல. என்னோட சீனிவாசன் செத்துப் போய்ட்டான்’’
நம்ம சீனிவாசன் செத்துப்போன சோகத்துக்கு வருத்தப்பட்ட இந்த சீனிவாசன் பிறகு சிரித்தார்.
‘’எமதர்மனோட அஸிஸ்ட்டன்ட்ங்க ஒரு தப்புப் பண்ணிட்டாங்க தம்பி சீனிவாசனோட உசிரக் கொண்டு வரச் சொல்லியிருக்கான் எமதர்மன். அவனுங்க இந்த சீனிவாசனை வுட்டுட்டு ஒங்க ஃப்ரண்ட் சீனிவாசனக் கொண்டு போய்ட்டானுங்க’’.
அவருடைய விரக்தியான வசனமும், சீனிவாசன் என்கிற அவருடைய பெயரும் பரிதாப உணர்ச்சியை மீறி அவர்மேல ஒரு பரிவு ஏற்படக் காரணமாயின.
இந்த நபரின் மேலே மனித நேயத்தைப் பொழிய பெரிதாய் ஒரு வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தித் தரப் போகிறான் என்று மனசு குறுகுறுத்தது.
நூறு ரூபாய் தர்மம் எல்லாம் சும்மா கொசுறு.
‘’பிச்சைக்காரன் இல்லங்கறீங்களே சீனிவாசன் ஐயா அப்ப ஒங்களுக்கு வீடு வாசல் இருக்கா? குடும்பம் இருக்கா?’’.
‘’எல்லாம் இருக்கு தம்பி. மேட்டுப்பாளையம் தாண்டி காரமடையில எம் மக இருக்கா. நா ஊட்டியில இருக்கறது தெரிஞ்சா வந்துக் கூட்டிக்கிட்டுப் போய் வைத்யம் பாப்பா. அவ விலாசம் இருக்கு. லெட்டர் எழுதிப் போடத்தான் எனக்கு விரல் இல்ல. உதவி செய்யவும் ஆள் இல்ல. இந்த ஊர்ல நா ஒரு பிச்சக்காரனாத்தான் இருக்கேன் தம்பி. ஒங்கள மாதிரி நல்லவங்க குடுக்கறதத் தின்னுக்கிட்டு, பஸ் ஸ்டாண்ட் பக்கம் படுத்துத் தூங்கிக்கிட்டு’’.
‘’பஸ் ஸ்டாண்ட்லயா? அப்ப நேத்து நா ஒங்களப் பாத்திருக்கேன். சீனிவாசன் ஐயா பஸ் ஸ்டாண்ட்ல ஒங்களப் போல நெறய்ய பேர் படுத்துக் கிடந்தாங்க’’.
‘’என்னைப் போல இல்ல தம்பி. அவங்கள்ளாம் கை கால் நல்லா உள்ள மனுஷங்க. பஸ் ஸ்டாண்ட் கூரக்கிக் கீழ என்னப் படுக்க விட மாட்டாங்க. நா பஸ் ஸ்டாண்டுக்கு வெளிய ரோட்ல தான் படுப்பேன்.
‘’கடவுளே பயங்கரமாக் குளிருமே ஐயா !’’.
‘’அப்டியொண்ணும் குளிராது தம்பி அதுக்குத்தான் எம்மேல எரக்கப்பட்டு ஆண்டவன் என்னோட தோலெல்லாம் உணர்ச்சியக் கொறச்சிட்டான்’’.
‘’இப்டியே அவஸ்தப்பட்டிருக்காம நீங்க காரமடக்கிப் போய்ச் சேந்துரலாமே ஐயா. விலாசந்தான் தெரியுங்கறீங்களே’’.
‘’எப்டிப் போறது தம்பி? பஸ்ல ரயில்ல என்ன ஏத்த மாட்டாங்க. கால் நல்லா இருந்தா நா நடந்தே கூடப் போயிருவேன். கார்ல வர்ற சில டூரிஸ்ட்டுங்கட்டக் கூடக் கெஞ்சிப் பாத்தேன். ஐயா ஒங்க டிக்கில சுருண்டு படுத்துக்கறேங்க, என்னக் காரமடையில எறக்கி வுட்றுங்கன்னு’’.
’’அந்த அளவுக்குக் கூட மனிதாபிமானம் இல்லாத ஜனங்களா ஐயா இந்த ஒலகத்ல இருக்காங்க’’!
‘’இந்த ஒலகமே அப்டித்தான் தம்பி. மக்கள் எல்லாமே ஒரே மாதிரி தான். இப்ப ஒங்களயே எடுத்துக்குங்க. என்னப் பாத்துப் பரிதாபப்பட்டு நூறு ரூவா குடுத்தீங்க. ஒங்கக்கிட்ட ஒரு வண்டி இருந்தா டிக்கில போட்டு என்னக் கூட்டிட்டுப் போவீங்களா?’’
’’மாட்டேன்’’.
‘’நா சொன்னேன் பாத்தீங்களா!’’.
‘’தப்பு ஐயா நா ஒங்கள டிக்கில போட்டுக் கூட்டிட்டுப் போக மாட்டேன் எம் பக்கத்ல ஸீட்ல ஒக்கார வச்சுக் கூட்டிட்டிப் போவேன்.
’’ஒங்ககிட்ட வண்டி இல்லங்கற தைரியத்ல சொல்றீங்க தம்பி’’.
சீனிவாசன் சொன்னது சுருக்கென்று தைத்தது.
அந்தக் குத்தலே நான் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவும் காரணமாயிருந்தது.
’என்ட்டயும் வண்டி இருக்கு ஐயா’ என்றேன் அழுத்தந்திருத்தமாய்.
‘தம்பி நெஜம்மாவாச் சொல்றீங்க?’ என்று சீனிவாசன் கண்கள் பனிக்க என்னைப் பார்த்தார்.
‘’தம்பி என்னக் கூட்டிக்கிட்டுப் போவீங்களா தம்பி?’’
‘’நிச்சயமா சீனிவாசன் ஐயா. எம் பின்னாடியே வாங்க வந்து, ச்சேரிங் க்ராஸ்ல நில்லுங்க. நா வண்டியோட வர்றேன்.
நம்பிக்கையோடு பெரியவர் மரக்கால் என்பதையும் மறந்து எட்டி நடை போட்டார்.
ச்சேரிங் க்ராஸில், குன்னூர் போகிற பாதையில் அவரை இருக்கச் செய்து விட்டு நான் விரைவாய் நடந்தேன்.
டூ வீலர் வாடகைக்கு விடப்படும் என்கிற போர்டு என்னை வரவேற்றது.
‘’சார் பைக் வாடகக்கி வேணும்’’
’’எத்தன அவர் சார்?’’
‘’ம் ஒரு நாலு அவர் ஆகும்’’.
‘’டெபாஸிட் என்ன கட்றீங்க?’’
’’டெபாஸிட்டா?’’
‘’பின்ன அம்தாயிரம் ரூவா வண்டிய ஒங்கள நம்பி சும்மாவா தருவாங்க? காஷ் இல்லாட்டி பரவாயில்ல. டிரைவிங் லைஸன்ஸ் ஒரிஜினில் இருந்தாத் தந்துட்டு வண்டிய எடுத்துட்டுப் போங்க’’.
‘’டிரைவிங் லைஸன்ஸ் எடுத்துட்டு வரலியே சார்’’.
‘’பாஸ்போர்ட்?’’
‘’ஊட்டிக்கி வர்றதுக்குப் பாஸ்ப்போட் எடுத்துட்டா வருவாங்க?’’
‘’அப்ப என்ன தான் டெபாஸிட் பண்றீங்க?’’
ஒரே விநாடி யோசனையில் முதுகுப் பையின் ஸிப்பைத் திறந்து ஃபோல்டரை எடுத்து நீட்டினேன்.
‘’என்ன சார் ஃபைல எடுத்துத் தர்றீங்க?’’
’’இதுக்குள்ள என்னோட சொத்து இருக்கு’’.
’’சொத்துன்னா?’’
‘’என்னோட டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட்’’
( சமநிலைச் சமுதாயம் – ஜனவரி 2011 இதழிலிருந்து )

1 comment:

  1. இதனைப் படித்து முடித்ததும் எனது கண்ணில் நீர் சுரந்து மவுனமாய் அழுதே விட்டேன்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.