புதுடில்லி: போராட்டங்களின் போது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்தது.
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான பிரகாஷ் சிங், உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "அரசியல் கட்சிகள், போராட்டத்தில் ஈடுபடும் போது, பெரிய அளவில் வன்முறைகள் நிகழ்கின்றன. பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப் படுகின்றன. சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் மறியலில் ஈடுபடுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பெரிய அளவில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில், நடக்கும் போராட்டங்களை தடுக்க, வழிகாட்டிக் குறிப்புகளை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய, உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன், கடந்த 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, "வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும், அரசியல் கட்சிகளை, தற்போதைய சட்ட விதிகளின் கீழ், தடை செய்ய முடியுமா? அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா? இது தொடர்பாக, மத்திய அரசு, ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரோகின்டன் நாரிமன் கூறியதாவது:
போராட்டத்தில் ஈடுபடும் போது, அரசியல் கட்சியினர் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவதற்காக, குறிப்பிட்ட அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை, தேர்தல் கமிஷனோ அல்லது நீதிமன்றமோ ரத்து செய்ய முடியாது. உச்ச நீதிமன்றமே, இது தொடர்பாக வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளித்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment