Latest News

  

நோன்பின் மாண்பு!


நோன்பு,ஜகாத்
வாழ்க்கை அனைத்துத் துறைகளுக்கும் வழி காட்டக்கூடிய நெறிநூலாகிய அல்குர்ஆன் அருளப்பட்ட பாக்கியமுள்ள ரமழான் மாதத்தில் பகல் பொழுதில் உண்ணாமலும், பருகாமலும், நோன்பிற்கான விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நோன்பு நோற்று ஏக இறைவனின் கட்டளையை செயல்படுத்துவோம் அல்ஹம்துலில்லாஹ்!

பசி, தாகம், உடலிச்சை ஆகியவற்றை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத பலகீனர்களாக நாம் இருந்தும் அல்லாஹ் கட்டளையிட்டு விட்டான் என்பதற்காக கட்டுப்படுத்திக் கொள்கிறோம். நமது இயல்புக்கு மாற்றமாக இருந்தும் இறைவனுக்கு அஞ்சி உணவையும், தண்ணீரையும், உடலிச்சையையும் தியாகம் செய்கிறோம். இந்த அச்சம் நோன்புடன் நின்று விடாமல் மொத்த வாழ்க்கையிலும் பிரதிபலித்தால்தான் இறைவனுக்காக இவற்றை செய்ததாக பொருள். நோன்பை கடமையாக்கிய இறைவன்தான் தொழுகை, ஜகாத், ஹஜ் போன்றவற்றையும் கடமையாக்கியிருக்கிறான்! அவன்தான் கொலை, திருட்டு, மது, சூது, விபச்சாரம் போன்ற தீமைகளை விலக்கியிருக்கிறான். புறம், கோள், பொய், மோசடி, ஆணவம், மார்க்கத்தில் பிரிவினை போன்றவற்றைக் கூடாது என விலக்கியிருக்கிறான். பெற்றோருக்கும் உற்றாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை ஏற்படுத்தியவனும் அவன் தான்! இறையச்சத்தின் காரணமாகத்தான் நோன்பு நோற்கிறோம் என்பது உண்மையானால் அதே இறையச்சத்திற்காக இவற்றையும் பேணியாக வேண்டும். இறைவனின் அனைத்துக் கட்டளைகளையும் செயல்படுத்தி, அவனது அனைத்து விலக்கல்களையும் விட்டு விலகிக் கொள்வதாக முடிவு செய்பவர்களையே நோன்பு பக்குவப் படுத்துகிறது எனலாம். இந்தப் பக்குவத்தைப் பெற முயல்வோம்! நமது நோன்பை அர்த்த முள்ளதாக்குவோம்!

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தக் வாவுடையோர்களாக ஆகலாம். (அல்குர்ஆன்2:183)

தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான நெறிநூலாகிய அல்குர் ஆன் இறக்கியருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 2:185)

ரமழான் அல்லாஹ்வால் அருளப்பட்ட மாதமாகும்; எவர் ரமழானைப் பெறுகிறாரோ அவர் அம்மாதத்தின் கடமையான நோன்பு வைக்கட்டும்; அம்மாதத்தில் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நரகக் கதவுகள் மூடப்படுகின்றன; கொடிய ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன; இம்மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறப்பு மிக்க ஒரு நாள் இருக்கிறது; எவரொருவர் அந்நாளைப் பெறுகிறாரோ அவர் எல்லா அருட்கொடைகளையும் பெற்றவராவார்; எவர் இழக்கிறாரோ அவர் எல்லாவற்றையும் இழந்தவர் ஆவார். அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரழி) ஆதாரம்: நஸாஈ, முஸ்னத் அஹ்மத்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; அவ்விரவுகளில் தொழுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம் மாதத்தின் சிறப்பான “லைலத்துல் கத்ர்’ நாளை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: புகாரி,
முஸ்லிம், அபூதாவுத், நஸாஈ

நோன்பு வைத்தவர் இரு மகிழ்ச்சிகளை அடைகிறார்; ஒன்று நோன்பு திறக்கும் (இஃப் தார்) போது ஏற்படும் மகிழ்ச்சி. மற்றொன்று; மறுமையில் இறைவனை நேரில் (அவனிடமிருந்து கூலி பெற) காணும்போது ஏற்படும் மகிழ்ச்சி. அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம், நஸாஈ, திர்மிதி.

நோன்பு, தொழுகை, ஜகாத் போன்ற நற்செயல்கள் நாம் செய்த பாவங்களுக்கான பரிகாரமாக இருக்கின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரழி) ஆதாரம்:
புகாரி, முஸ்னத் அஹ்மத்.

மனிதனுடன் தொடர்பு கொண்டுள்ள அனைத்திற்கும் வரி உண்டு. உடலுக்கான வரி நோன்பு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத்.

நோன்பு: யா அல்லாஹ்! நான் இம்மனிதரை, அவரது ஊண், உணவு, ஆசாபாசங்களிலிருந்து தடுத்து வைத்திருந்தேன். எனவே எனது சிபாரிசை ஏற்பாயாக! என பிரார்த்தனை செய்யும்.

குர்ஆன்: இரவில் (உனது நெறிநூலாகிய) என்னை ஓதுவதன் மூலம் அவரை நான் தூக்கத் திலிருந்து தடுத்து வைத்திருந்தேன். எனவே எனது பரிந்துரையை ஏற்பாயாக! எனப் பிரார்த்தனை செய்யும். இப்பரிந்துரைகள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) ஆதாரம்:
முஸ்னத் அஹ்மத், பைஹகீ

காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது:
அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானில் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா

பொய் சொல்வதையும், அதன் அடிப்படை யில் செயல்படுவதையும் எவர் விட்டுவிடவில் லையோ அவர் உணவையும், குடிப்பையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையுமில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: புகாரி, அபூதாவூத், திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜா

நோன்பின் தற்காலிக சலுகைகள்:
நீங்கள் பயணத்திலோ, நோய்வாய்ப்பட்ட வர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 2:184)

பயணத்தில் உள்ளவன், கர்ப்பமாக உள்ளவள், பால் கொடுக்கும் தாய் ஆகியோருக்கு (பிரிதொரு நாளில் அதனை நோற்க) நபி(ஸல்) அவர்கள் சலுகை தந்திருந்தனர். அறிவிப்பவர்: அனஸ்(ரழி)
ஆதாரம்: அபூதாவூத், இப்னுமாஜா, நஸாஈ, திர்மிதி

எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற் கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழு கையை வேறு நாட்களில் நிறைவேற்றக் கூடாது என்றும் உத்திரவிடப்பட்டிருந்தது. அறிவிப்பவர்: அபூபினா(ரழி) ஆதாரம்: முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்கும் சக்தி எனக்கு உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகிறானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை.
அறிவிப்பவர்:ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.