கடந்த ( 08-06-2012 ) அன்று ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டத்தில் ஹஜ்ரத் பிலால் நகர், M.S.M. நகர், K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகளை அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சியுடன் இணைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இன்று மாவட்ட ஆட்சியரை AAMF’ன் சார்பாக சந்தித்து கோரிக்கை மனு ஒப்படைக்கப்பட்டது.
இக்கோரிக்கை மனு மீது ஆய்வுக்கு உட்படுத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
கோரிக்கை மனுவின் விவரம் :
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், 149 ஏரிபுறக்கரை கிராம நிர்வாகத்திற்கு உள்ளடக்கிய ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகள் ஆகும்.
இப்பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம் போன்றவை இல்லாத காரணத்தால் அருகில் உள்ள அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் உள்ளவற்றைச் சார்ந்து வாழ்கின்ற சூழல் உள்ளது. மேலும் இப்பகுதிகளில் சாலை வசதிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள், சுகாதாரம் போன்றவற்றில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகிறது. அரசால் பெறப்படுகிற நலத்திட்டங்கள் பலவும் இப்பகுதிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் இப்பகுதியில் வாழும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகளை அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு ஆவணம் செய்யும் படி தங்களை அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் கடந்த 23-03-2012 அன்று கீழத்தெரு சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நான்காவது கூட்டத்தில் அதிரை வர்த்தக சங்க செயலாளர் சகோ. N.A. முகமது யூசூப் அவர்களால் அதிரை ரயில் நிலையத்தில் கணினி முன் பதிவு அலுவலகம் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளவது தொடர்பாக கொடுக்கப்பட்ட மனுவை அடுத்து, இதற்காக சம்பந்தப்பட்ட தென் இந்திய ரயில்வே துறை – திருச்சி கோட்ட தலைமை அலுவலர்கள் ( DRM மற்றும் DCM ) ஆகியோர்களை வருகின்ற வாரங்களில் சந்தித்து மனு அளிப்பது என்றும், இதற்கு மேலும் வலுவூட்டும் விதமாக நமதூரைச் சேர்ந்த பொது நல அமைப்பான “அதிரை நல் வாழ்வு பேரவை”, சென்னை வாழ் அதிரை நலப் பேரவை” , அதிரை வர்த்தக சங்கம், மனித உரிமை கழகம் போன்றவைகள் ஒன்றாகச் திருச்சி சென்று மனுவை தனித்தனியே அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோரிக்கை மனுவின் விவரம் :
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் – இது சேது பெருவழிச்சாலையில் அமைந்திருக்கும் கடற்கரையோர ஊர். இங்கு சுமார் அறுபது ஆயிரம் பேர் வசிக்கக்கூடிய பரந்த பகுதியாகவும், அதிக விவசாயிகளைப் பெற்ற இக்கடைமடைப் பகுதியைச் சுற்றி கடற்கரையோர கிராமங்களான ஏரிபுறக்கரை, ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம், மீமிசல் போன்ற பகுதிகளும் உள்ளன.
இவ்வூரிலிருந்து ஏறக்குறைய பதினைந்து ஆம்னி பஸ்கள் தினமும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை செல்கின்றன, அதேபோல் சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் வருகின்றன. இதனால் ஆகக்கூடிய கூடுதலான செலவுகள் ஒரு பக்கம் இருந்தாலும், இதில் பயணம் செய்யும் பயணிகள் குறிப்பாக வயோதியர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் போன்றோர்கள் பெரும் அவதிக்கும், இன்னலுக்கும் உள்ளாகின்றனர். இதுபோன்றவற்றைக் கருத்தில் கொண்டு இவர்கள் அனைவரும் விரும்புவது ரயிலில் பயணங்கள் மேற்கொள்வதையே இதற்காக டிக்கட் முன்பதிவு செய்வதற்காக தொலைதூரத்திலுள்ள பட்டுக்கோட்டை,முத்துப்பேட்டை, திருத்துறைபூண்டி போன்ற ஊர்களுக்குச் சென்று தங்களுடைய நேரம், வீண் அலைச்சல் போன்றவற்றை செலவழிப்பதோடு அல்லாமல் நீண்ட வரிசையில் நின்று காத்துக்கிடக்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு தென் இந்திய ரயில்வே துறையிலிருந்து அதிராம்பட்டினம் ரயில்வே நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட முன் பதிவு செய்யும் உபகரணங்கள் அனைத்தும் இப்பணியை மேற்கொள்ள நிரந்தர ஊழியர் ஒருவர் இல்லாமல் பயனற்று முடங்கிபோய் கிடக்கின்றன.
ஆகையால் அதிராம்பட்டினம் மற்றும் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் படுகின்ற சிரமத்தைக் கருத்தில் கொண்டு, இதற்காக நிரந்தர ஊழியர் ஒருவரை பணி நியமனம் செய்து “டிக்கெட் முன் பதிவு” செய்யும் வசதியை துவக்க வேண்டுமாய் அதிகாரி அவர்களை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment