சென்னை: அப்துல் கலாம் என்பது அவராக வைத்துக் கொண்ட பெயர் அல்ல. அவரது பெற்றோர், பெரியோர் வைத்த பெயர். அதை கருணாநிதி களங்கப்படுத்தியிருப்பது கண்டனத்துக்குரிய ஒன்று என்று கீழ் பவானி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கலாம் என்றால் கலகம் என்று கருணாநிதி கூறியதற்கு கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அப்துல் கலாம் என்ற பெயர் தனக்குத்தானே வைத்துக் கொண்ட பெயர் அல்ல. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்தபோது அவரது பெற்றோரும், பெரியோர்களும் வைத்த பெயர்.
அவர் முன்னாள் ஜனாதிபதி, மனித மாதிரியாக (ரோல் மாடல்) வாழ்ந்து வருபவர், எளிமைக்கு வலிமை சேர்த்தவர், பன்னாட்டு அளவில் நன்மதிப்பு பெற்றவர், பலராலும் மதிக்கப்படுபவர். இப்படிப்பட்டவரை கலாம் என்றால் கலகம் என்ற பொருளில் கூறுவதா!
தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கட்சிகளின் பெயர் பொதுவாக கழகம் என்றே முடிகிறது. அப்படி என்றால் கழகம் என்பதற்கு என்ன பொருள்? ``பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்'' என்ற திருக்குறளின்படி பார்த்தால், கழகத்திற்குள் (சூதாடும் இடம்) காலை வைத்துவிட்டால் பழமையால் வழி வழிவந்த பாரம்பரிய செல்வமும், பண்பாடும் கெட்டுப் போகும் என்று பொருளாகும்.
கழகம் என்பது சூதாடும் இடத்தைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. திமுக தலைவரும், வாழும் வள்ளுவர் என்று அழைக்கப்படுபவருமான கருணாநிதி இதை ஏற்றுக் கொள்வாரா? அப்துல்கலாமிற்கும் கலகத்திற்கும் என்ன தொடர்பு? அவர் வன்முறையை விரும்புபவரா? குற்றப்பின்னணி உள்ளவரா?
ஜனாதிபதி வேட்பாளராக ஏ.பி.ஜே.அப்துல்கலாமை ஏற்று ஆதரிப்பதும், எதிர்ப்பதும் கருணாநிதியின் முடிவு. இது அவரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டது. அல்லது அவரது கட்சியின் முடிவாகவும் இருக்கலாம்.
பெற்றோரால் வைக்கப்பட்ட பெயரைக் கொண்டு அப்துல்கலாமை விமர்சிப்பதும், பெயருக்கு களங்கம் கற்பிப்பதும் நியாயமாகப்படவில்லை. இதிலுமா சொல் விளையாட்டு? என்று கண்டித்துள்ளார் நல்லசாமி.
நன்றி : ஒன்இந்தியா
No comments:
Post a Comment