Latest News

  

அதிரை(ப்) புலவர் “அண்ணாவியார்”


அதிரைப்பட்டினம் - இது, கத்தும் கடல் சூழ் நாகையிலிருந்து தெற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் சேது பெருவழிச் சாலையில் அமைந்திருக்கும் கடற்கரை ஊர். சுருக்கி அழைக்கப்படுவதோ அதிரை. தமிழகத்தில் இஸ்லாம் நுழைந்த காலத்திலிருந்தே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பயணிகள் அனைவரும் தங்கிச்செல்லும் பெருவழித் துறையாகவும் பழம்பெரும் துறைமுகப்பட்டினமாகவும் இலங்கியதாக அதிரை அறிஞர் தமிழ்மாமணி புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கு காதிர் முஹைதீன் கல்லூரியும், அரபி மதரஸாக்களும், வணிகப் பெருமக்களும் வாழுகின்ற ஊர் என்பது பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்குத் தெரியுமே தவிர சிறந்த இசுலாமியப் புலவர் பெருமக்களை தமிழுக்கு அளித்த ஊர் என்று ஒரு சிலரைத்தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அத்தகையோரில் அண்ணாவியார் ( ANNAVIYAR ) என்று அழைக்கப்படும் புலவரும் ஒருவர்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு முழுவதும் வாழ்ந்தவர்கள் ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்கள். இவர்கள் கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள். நவரத்தினகவி காதிர் முகைதீன் அண்ணாவியார் அவர்களின் பேரரும் ஹபீப் முஹம்மது அண்ணாவியார் அவர்களின் மூத்தமகனும் ஆவார். 1902’ல் பிறந்து 1992 வரை தொன்னூறு ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்கா. தம் முன்னோர்கள் எழுதி ஓலைச்சுவடிகளாக இருந்த பாடல்களை புத்தகவடிவில் ஆக்கியவர்கள். தம்முன்னோர்களைப் போலவே சிறந்த தமிழறிஞர், எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பண்பாளர்.

தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சீறிய எண்ணம் கொண்ட இம்மூதறிஞர் தம் முப்பாட்டனார் அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் மற்றும் அவர்கள் வழிதோன்றல் புலவர்கள் அனைவர்களது பாடல்களையும் ஓலைச்சுவடியிலிருந்து நூல் வடிவமாக மாற்றி நம் கையில் தவழவிட்டவர். "சந்தாதி அசுவகம்" - இது 4300 பாடல்களைக் கொண்ட தொகுப்பு இதை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மனமுவந்து பெற்று வெளியிட்டுள்ளது மட்டுமல்லாமல் பாட நூலாகவும் ஆக்கியுள்ளது. இவர்களது சேவையைப் பாராட்டி சென்னை சீதக்காதி அறக்கட்டளை பொற்கிழி அளித்து பெருமைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆய்வு தொடரும்...........

நன்றி : ஹமீத் ஜாஃபர்
தகவல் : N.K.M. அப்துல் வாஹித் அண்ணாவியார்
புகைப்படம் உதவி : N.K.M. அப்துல் வாஹித் அண்ணாவியார்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.