Latest News

  

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மரணம்: போராட்டத்திற்கு பலனில்லை

குட்காவுன்:
 
அரியானாவில், 70 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுமி மஹியை உயிருடன் மீட்க, மீட்புப் படையினர் மேற்கொண்ட, 85 மணி நேர போராட்டம் வீணானது.கிணற்றுக்குள் விழுந்த அடுத்த சில மணி நேரத்திலேயே, மஹி இறந்து விட்டதாகவும், இறந்து நான்கு நாள் ஆகிவிட்டதால், மஹியின் உடல் அழுகி விட்டதாகவும், டாக்டர்கள் தெரிவித்தனர்.
 
நாடு முழுவதும், மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை அடுத்து, இதுபோன்ற பாதுகாப்பற்ற ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள கோ என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி மஹிக்கு, கடந்த 20ம் தேதி, ஐந்தாவது பிறந்த நாள். அன்று மாலை, சிறுமியின் பெற்றோர், தங்களது வீட்டிலேயே பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சிறுமி மஹிக்கு புத்தாடை அணிவித்து, அருகில் உள்ளவர்களை எல்லாம் அழைத்து, கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடினர். மஹியும், மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். கேக் சாப்பிட்டு முடித்ததும், இரவு 11 மணி அளவில், வீட்டுக்கு அருகே, மஹி விளையாடிக் கொண்டிருந்தாள்.

70 அடி ஆழம்:

அப்போது, திடீரென மஹியின் அழுகுரல் கேட்டது. அவரின் பெற்றோர் ஓடிவந்து பார்த்தபோது, அங்கு இருந்த, 70 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள், மஹி விழுந்து விட்டது தெரியவந்தது. கைவிடப்பட்ட நிலையில் இருந்த அந்த ஆழ்துளைக் கிணற்றை மூடாமல், பாதுகாப்பற்ற நிலையில் வைத்திருந்ததால், இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நள்ளிரவில், போலீசாருடன், மீட்புக் குழுவினர் அங்கு வந்து, மீட்புப் பணிகளை துவக்கினர். சிறுமி மஹி சுவாசிப்பதற்காக, ஆழ்துளைக் கிணற்றுக்குள், டியூப் வழியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம், சிறுமியின் அசைவுகள் கண்காணிக்கப்பட்டன. மீட்புப் பணி மிகவும் சிரமமாக இருந்ததால், அடுத்த நாள் காலையில், ராணுவம் வரவழைக்கப்பட்டது.

கடும் போராட்டம்:

மஹி விழுந்த கிணற்றுக்கு அருகில், மிகப் பெரிய பள்ளம் தோண்டி, அங்கிருந்து, சிறுமி இருக்கும் இடத்தை அடைவதற்கு, சுரங்கப் பாதை அமைக்கும் முயற்சி, இரவு, பகலாக மேற்கொள்ளப்பட்டது. மருத்துவக் குழுவினரும், தயார் நிலையில் இருந்தனர்.

ஆனாலும், பள்ளம் தோண்டிய இடத்தில், பூமிக்கு அடியில் கடினமான பாறைகள் இருந்ததால், அவற்றை துளைத்து, சிறுமியை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. நேற்று காலையிலும் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்தன. சிறுமி விழுந்து, 80 மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டதால், அவளின் கதி என்னவென தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. சிறுமியின் பெற்றோருடன், அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், அங்கு குவிந்து, சிறுமி உயிருடன் மீட்கப்படுவாளா என, ஆர்வத்துடனும், கவலையுடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். நாடு முழுவதும், மக்களும், சிறுமி உயிருடன் மீட்கப்பட வேண்டும் என, கவலை தோய்ந்த முகங்களுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

மீட்பு:

இந்நிலையில், 85 மணி நேர கடும் போராட்டத்துக்கு பின், நேற்று மதியம் 1.30க்கு, சிறுமி இருக்கும் இடத்துக்கு சென்ற மீட்புக் குழுவினர், சிறுமியை மீட்டு, மேலே தூக்கி வந்தனர்.ஸ்ட்ரெட்ச்சரில் சிறுமியை படுக்க வைத்து, துணியால் மூடியபடி, தூக்கி வந்தனர். அடுத்த சில நிமிடங்களில், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ராணுவ ஆம்புலன்சில், சிறுமி மஹியை ஏற்றிக் கொண்டு, வேகமாக மருத்துவமனைக்கு சென்றனர். இதனால், சிறுமியின் நிலை என்ன ஆயிற்று என தெரியாமல், குழப்பம் ஏற்பட்டது.

பலனில்லை:

இதைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கு பின், சிறுமி மஹி இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் மீனாவும், இதை உறுதி செய்தார். டாக்டர்கள் கூறுகையில், "ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த அடுத்த சில மணி நேரத்திலேயே, மஹி உயிரிழந்திருக்கக் கூடும். இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டதால், உடல் அழுகிய நிலையில் தான் மீட்கப்பட்டுள்ளது' என்றனர். சிறுமியை உயிருடன் மீட்பதற்காக, மீட்புக் குழுவினர் நடத்திய, 85 மணி நேர கடும் போராட்டம், இறுதியில் தோல்வியில் முடிவடைந்தது, அரியானா மாநில மக்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மீட்புக் குழுவினரும், தங்களின் கடும் போராட்டத்துக்கு பலன் இல்லாமல் போய் விட்டதை நினைத்து, சோகத்தில் மூழ்கினர். இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலையில், ஆழ்துளைக் கிணறு அமைப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாடு முழுவதும் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய விபத்துகள்...:

இந்தியாவில் உள்ள ஆபத்தான, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுமாறு, 2010ல், சுப்ரீம் கோர்ட் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதை கடைபிடித்திருந்தால், பல குழந்தைகளை காப்பாற்றி இருக்கலாம். இதுவரை நடந்த முக்கிய ஆழ்துளைக் கிணறு விபத்துகள்:

2006 ஜூலை: அரியானாவில், குருக்ஷேத்ரா என்ற இடத்தில், பிரின்ஸ் என்ற ஐந்து வயது சிறுவன், 60 அடி ஆழ்துளைக் கிணற்றில், தவறி விழுந்தான். 48 மணி நேர போராட்டத்துக்கு பின், உயிருடன் மீட்கப்பட்டான்.
.
2008 அக்., 10: உ.பி., ஆக்ரா அருகே, டோக்ரா கிராமத்தில், சோனு என்ற இரண்டரை வயது குழந்தை, 150 அடி ஆழ கிணற்றில் விழுந்தாள். 98 மணி நேரத்துக்கு பின், இறந்த நிலையில் மீட்பு.
2009 ஜூன்: ராஜஸ்தானில், 4 வயதான அஞ்சு குஜரார், 70 அடி கிணற்றில் விழுந்தாள். 19 மணி நேரத்துக்குப் பின், உயிருடன் மீட்பு.
2010 ஜன.,: வாரங்கல்லில், தராவத் மகேஷ் என்ற, 18 மாத குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலி.
2011 மே: நாசிக்கில், ஓம் சந்தோஷ் என்ற ஒன்றரை வயது குழந்தை, 70 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து பலி.
2011 செப்.,: தமிழகத்தின் நெல்லையில், சுதர்சன் என்ற சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலி.
2012 மார்ச்: இந்தூரில், பயால் என்ற குழந்தை, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலி.
2012 ஜூன் 24: அரியானாவில், குர்கான் அருகே, கோ என்ற இடத்தில், ஐந்து
வயது சிறுமி மஹி, 70 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாள். 85 மணி நேர போராட்டத்துக்கு பின், சடலமாக மீட்கப்பட்டாள்.

*சிறுமி மஹியை மீட்கும் பணியில், ராணுவ வீரர்கள், அரியானா போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், நகராட்சி ஊழியர்கள், குர்காவுன் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியாளர்கள், ரிலையன்ஸ் தொழில் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள், இரவு, பகலாக கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
*மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கான தூண்களை அமைப்பதற்கு, துளையிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மூலம், சிறுமியை மீட்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டது.
*ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எண்ணெய் எடுக்கும் பணிக்காக பயன்படுத்தும், பூமியை ஊடுருவிப் பார்க்கும் ரேடார்களை கொண்டு வந்து, எத்தனை அடி ஆழத்தில் சிறுமி இருக்கிறாள் என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டது.
*சிறுமி விழுந்த ஆழ்துளைக் கிணறு, முன் அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக தோண்டப்பட்டதாகவும், கிணற்றை மூடாமல் வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பின், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.