Latest News

  

எகிப்து குடியரசுத் தலைவராக முர்சி தேர்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் வேட்பாளரான முகமது முர்சி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபுலகின் மிகப்பெரும் சக்தியான எகிப்து நாட்டின் ஆட்சியாளராக இருந்த ஹோஸ்னி முபாரக் மக்கள் புரட்சியின் காரணமாக பதவியிலிருந்து விரட்டப்பட்டு சுமார் 500 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், எகிப்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவராக முர்சி அறிவிக்கப்பட்டுள்ளார்.

முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலின் முதல் சுற்றில் உறுதியான முடிவு கிடைக்காததைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றது. இதில் முபாரக்கின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் பிரதமராகப் பதவி வகித்து அகமது ஷபீக் மற்றும் முகமது முர்சி ஆகியோர் போட்டியிட்டனர்.

முபாரக்கின் ஆட்சிக் காலத்தின் போது ஏராளமான அடக்குமுறைகளைச் சந்தித்த முஸ்லிம் சகோதரர்கள் என்ற கட்சி முபாரக்கிற்குப் பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் (47 %) வெற்றி பெற்றது. தற்போது பதவியில் இருக்கும் இராணுவம் நாடாளுமன்றத்தைக் களைத்து அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில், இராணுவத்தின் ஆதரவாளராகக் கருதப்படும் ஷபீக்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகமது முர்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோர்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்தின் தலைவர் பாருக் சுல்தான் அறிவித்தார். நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 51.7 சதவிகித வாக்குகளைப் பெற்று மோர்ஸி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அஹமத் ஷபிக் 46.7 சதவிகித வாக்குகள் பெற்றார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது, எகிப்தின் விடுதலைச் சதுக்கத்தில் ஏராளமானோர் கூடி இருந்தனர். தேர்தல் ஆணையகத்தின் அலுவலகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கெய்ரோ முழுவதும் கலவரத் தடுப்புக் காவலர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

முஸ்லிம் சகோதரத்துவ கட்சிக்கும், ராணுவ கவுன்சிலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததால், மோர்ஸி வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தாமதம் ஏற்பட்டது. ஜனாதிபதிக்கு எவ்வாறான அதிகாரங்கள் இருக்கும் என்பது சம்பந்தமாக இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே அவரது வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. முர்சியின் வெற்றி எகிப்து மட்டுமின்றி பல அரபு நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடும்.

கட்சியைத் தொடங்கி 80 ஆண்டுகளுக்குப் பின் எகிப்தின் உயர் பதவியைப் பிடித்துள்ள முஸ்லிம் சகோதரர்கள் கட்சி பல்வேறு சவால்களை சமாளித்து வெற்றி பெற்றுவிட்டாலும் அக்கட்சி முன்பைவிட பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எகிப்தின் அதிகாரமிக்கப் பதவியாக அதன் குடியரசுத் தலைவர் பதவி இதுவரை இருந்து வந்தது. தற்போது அந்தப் பதவியின் அதிகாரத்தை இராணுவம் குறைத்துள்ளது.

ஜனாதிபதிக்கு எவ்வாறான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக ராணுவக் கவுன்சில் ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் பெருமளவு குறைக்கப்பட்டிருந்தது.

இராணுவம் உருவாக்கியுள்ள எகிப்தின் தற்காலிக அரசியல் சாசனத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும், கட்சியின் மீது சர்வதேச ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ள தீவிரவாத முத்திரையைக் களைய வேண்டும், அண்டை நாடான இஸ்ரேல் தான் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த முயல வேண்டும், பாலஸ்தீனின் காஸா பகுதியில் இருந்து பெருமளவில் பாலஸ்தீனியர்கள் வருவது போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் முஸ்லிம் சகோதரர்கள் கட்சியின் முன் உள்ளது

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.