Latest News

  

சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்​பு : முஸ்லிம்களி​ன் கவனத்திற்கு ……!

இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. 1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை.
சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.
இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
விகிதாச்சார இட ஒதுக்கீடு என்பது இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தபிறகு விகிதாச்சார இட ஒதுக்கீடுக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கும். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில்
 
 
1) தக்னி முஸ்லிம்
2) தூதுகோலா
3) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
4) மாப்பிள்ளா
என 4 சாதியினராக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது இந்த 4 சாதிகளில் ஒன்றை குறிப்பிட்டு, அது பள்ளி மாற்றுச் சான்றிதழில் இடம் பெற்றால் தான் அந்த குழந்தைக்கு வட்டாட்சியர் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழை வழங்குவார்.
இந்த சாதிச் சான்றிதழை வைத்து தான் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகைகளும் பெற முடியும்.
பல முஸ்லிம்கள் இந்த விபரம் தெரியாமல் பட்டாணி, சாஹிப், பரிமளம் போன்ற உட்பிரிவுகளையும், குடும்பப் பெயர்களையும் சாதி என்ற இடத்தில் குறித்து விடுகின்றனர்.
பெற்றோர்கள் தெரியாமல் செய்யும் இந்தத் தவறின் காரணமாக மாணவச் செல்வங்களின் எதிர்காலம் பாழ்பட்டு போய்விடுகிறது.
எனவே மதம் என்று குறிப்பிடப்படும் இடங்களில் "இஸ்லாம்" என்றும் சாதி என்று குறிப்பிடப்படும் இடங்களில் மேற்கண்ட 4 பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவை மட்டுமே முஸ்லிம்கள் குறிப்பிட வேண்டும்.
வேறு எந்த பெயரையும் குறிப்பிடக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் போதும் இதே வழிமுறையைத் தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சாதி வாரி கணக்கெடுப்போடு சேர்த்து பொருளாதார கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. சில முஸ்லிம் குடும்பங்களின் மாத வருமானம் 2 ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். ஆனால் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என கருதி மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று பொய்யாக சொல்கிறார்கள். இது மாதிரியான பொய்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்த ஆண்டு வரை மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை மாணவர்கள் அரசின் கல்வி உதவித் தொகையை பெற வேண்டுமெனில் குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த அளவுக்கு உண்மையிலேயே வருமானம் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத் தலைவர் கவுரவத்திற்காக மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று கொடுத்தால் ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாயாகி, இவர் ஏழை அல்ல என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு, இவருடைய பிள்ளைகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை கிடைக்காமல் போய்விடும்.
சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அடிப்படை கல்வி உரிமைச் சட்டத்தின் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் கூட 25 சதவீது இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் குடும்பம் வருமானத்தை அதிகப்படுத்தி காண்பித்தால் இந்த இடஒதுக்கீடும் கிடைக்காமல் போய்விடும். இப்படி முஸ்லிம்கள் சாதாரணமாக சொல்லும் சிறிய பொய் கூட எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு பொருளாதார நிலவரங்களை கேட்கும் போது பிள்ளைகளுக்கு கிடைக்கும் அரசின் கல்வி உதவித் தொகை பாதிக்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தில் சாதிப் பாகுபாடுகள் கிடையாது. அதனால் சாதி இல்லை என்று தான் நாங்கள் விபரம் தருவோம் என்று சிலர் அடம் பிடிக்கிறார்கள். இஸ்லாத்தில் சாதிகள் கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
இந்த உண்மை முஸ்லிமல்லாதவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணி அணியாக வருகிறார்கள். சில விஷயங்கள் நம்மை மீறி நடந்துவிடும். அதில் ஒன்றுதான் சாதி ரீதியான இட ஒதுக்கீடு. இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சாதிரிதீயில் தரப்படுகிறதே தவிர மத ரீதியில் தரப்படவில்லை. அப்படி இருக்கும் போது சாதி இல்லை என்று முஸ்லிம்கள் குறிப்பிட்டால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன் கிடைக்காமல் போய், அவர் தம் சந்ததியினர் கல்வி, வேலைவாய்ப்பில் அறவே ஒதுக்கப்பட்டு விடுவார்கள்.
அரசியல் சட்டம் வகுக்கப்படும் போது தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு சாதி ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதுபோல் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவும் வழி வகை செய்யப்பட்டது. அதோடு சேர்த்து இஸ்லாத்தில் சாதிகள் இல்லை. அதனால் முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இடஒதுக்கீடு கொடுப்பது சரிப்படாது. எனவே அவர்களுக்கு மத ரீதியில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் விதி செய்யப்பட்டிருந்தால் இஸ்லாத்தில் இல்லாத சாதிகளை குறிப்பிடும் அவசியம் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது. அதில் நம் முன்னோர்கள் கோட்டைவிட்டு விட்டனர். இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் தான் இருக்கவேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் உரத்து முழக்கமிட்ட காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் கூட முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு சரிப்படாது. மதரீதியான இட ஒதுக்கீடுதான் சாத்தியப்படும் என்று கொள்கை முழக்கம் செய்யத் தவறிவிட்டார்.
அதனால் இந்துக்களை சாதிரீதியாக பிரித்தது போல் முஸ்லிம்களையும் சாதிரீதியாக பிரித்து இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இதைமாற்ற வேண்டுமெனில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி திருத்தம் கொண்டு வந்த பிறகுதான் முஸ்லிம்கள் "சாதி இல்லை" என்று சொல்ல வேண்டும்.
அதற்கான கோரிக்கைகளையும், போராட்டங்களையும் முஸ்லிம்கள் முன்னெடுத்துச் சென்று வெல்ல வேண்டும். அந்த கோரிக்கையில் வென்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பே "சாதி இல்லை" என்று ஒரு முஸ்லிம் குறிப்பிட்டால் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீடுகளையும், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைஉள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பறி கொடுக்க நேரிடும். இதை கவனத்தில் கொண்டு சமூக, பொருளாதார சாதி கணக்கெடுப்பின் போது முஸ்லிம்கள் சரிவர நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
http://www.tntj.net/83802.html

1 comment:

  1. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    Best Regarding.

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.