Latest News

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள


நாம் உலகில் வாழும் காலங்களில் ஆரோக்கியத்துடன் இருந்து அதே ஆரோக்கியத்துடன் எவருக்கும் எவ்வித தொந்தரவும் தொல்லைகளும் இல்லாமல் இறுதியில் இறைவனடி சேர ஒவ்வொருவருவரும் தம் வாழ்நாட்களில் ஐங்கால இறைவணக்கத்துடன் அணுதினமும் குறைந்தது அரை மணி நேரமாவது கண்டிப்பாக உடலுக்கும், வயதிற்கும் ஏற்ற உடற்பயிற்சி செய்ய கடமைப்பட்டுள்ளோம்.


இதற்கு நகரத்தில் தான் வசிக்க வேண்டுமென்றோ அல்லது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு காசு செலவழித்து செல்ல வேண்டுமென்ற அவசியமோ இல்லை. ஊரில் இருந்து கொண்டே, வீட்டில் இருந்து கொண்டே, அறையில் இருந்து கொண்டே எவரும் அறியாத வகையிலும் செய்யலாம். இது ஒன்றும் மார்க்கத்திற்கு புறம்பான செயல் அல்ல. (பிறகென்ன ஒரே யோசனெ? ஆரம்பிச்சிட வேண்டியது தானே?)

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி செய்வதால் வரும் இன்ன பிற நன்மைகள் பற்றியும் நம்மூர் பாஷையில் கொஞ்சம் இங்கு அலசுவோம் வாங்கஹாக்கா...
1. கை கால் கடுப்பு, இடுப்பு புடிப்பு கொறையும். (இதில் திட்டுமுட்டு செரவடி, கொடப்பெரட்டு, ஓங்காரம், ஒரு மாரியா வர்ரது, மசக்கம், பித்தம் எல்லாம் அடங்கும்)

2. கழுத்து சுலுக்கு வராது.(மொம்மானிவாக்கா கடையிலெ வீசக்கார தைலம் வியாபாரம் கொஞ்சம் கொறைய வாய்ப்புண்டு)

3. தலவாணிக்கு ஒறை போட்ட மாதிரி தொந்தி உழுவாது. (நெறையா பேரு ஊர்லெ நிண்டுக்கிட்டே தன் சொந்த பெரு விரலெ சின்னப்புள்ளையிலெ பாத்தது......)
4. வாய்வுக்கோளாறு கொறையும். (அங்கிட்டு, இங்கிட்டு காத்து கண்ணாப்பின்னாண்டு பிரியாது. அக்கம், பக்கம் திரும்பி பாத்துக்கிட்டு யாருமில்லாத நேரம் டீசண்ட்டா பிரியும்)
5. இனிப்பு நீரு, ரெத்தக்கொதிப்பு வராமல் தள்ளிப்போகும். அப்படியே வந்திருந்தாலும் கட்டுப்பாட்டோடு ஈக்கிம். (பகல்லெ களரிக்கார ஊட்டுக்கு போயிட்டு சாங்காலம் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி ஈக்காது)
6. ஒடம்புலெ தேவையில்லாமல் தொங்கும் ஊளைச்சதை வத்திப்போவும். (அதனாலெ சட்டெ, பேண்டு அளவு எப்பொழுதும் மாறாமல் ஒரேக்கணக்கா ஈக்கிம்)
7. தோலு சுருக்கம் சுருக்கன வராது. (அதுக்காக இன்னொரு கலியாணத்துக்கெல்லாம் ஆசப்படக்கூடாது)
8. ராத்திரி அசந்த நல்ல தூக்கம் வரும். (கள்ளன்வொலுக்கு வசதியாப்போயிடாமெ பாத்துக்கிட வேண்டியது ஆமாம்..)
9. சேர்மாவாடிக்கு போறதுக்கு கூட செத்த பைக்கு கடன்வாங்க அவசியம் ஈக்காது. (கடன் வாங்காம சொந்த கால்லேயே போயிட்டு வந்துர்லாம்)
10. மனசு சீராக பதஸ்ட்டமும், படபடப்பும் இல்லாமல் சாந்தமாக ஈக்கிம். (அதுக்குத்தானே ஒலகத்துலெ இவ்ளோவ் செரமப்படனுமா ஈக்கிது?)
11. ஒடம்புக்காக ஒன்னுமே செய்யாததாலெ வரும் ஏகப்பட்ட ப்ரச்செனைகள் கொறஞ்சி பட்டுக்கோட்டைக்கும், தஞ்சாவூருக்கும் ஆஸ்பத்திரி, ஊடுண்டு அலையிறது கொறஞ்சி போகும். நேரமும், காசும் மிஞ்சும். (அந்த காசெ சேத்தாலே காலப்போக்குலெ மனக்கட்டு வாங்கி போடலாம் எங்கையாச்சும்..)
12. ஒரு மூக்கு ஓட்டையிலெ மூச்செ புடிச்சி கொஞ்சம் நொடி உள்ளக்க வச்சி பொறகு இன்னொரு மூக்கு ஓட்டையிலெ மூச்செ உட்டு ஒவ்வொரு நாளும் இப்புடி பழகுனா நெஞ்சுக்குள்ள அடிக்கடி கறி, கோழி, குருவி சாப்புட்றதுனாலெ கொழுப்பு அடைச்சி மூச்சி பிரச்சினை, ஹார்ட்டு குழாயி அடப்பு பிரச்சினை இதெல்லாம் வராம தடுக்கலாம். (ஊட்டு சர்சராக்குழியிலெ கானு அடச்சி போயிட்டாலெ அதெ சுத்தம் பண்ண வ்ளோவ் காசு கேக்குறானுவோ? ஹார்ட்டுக்குள்ள அடப்பு வந்திரிச்சிண்டா ஊட்டு பத்திரத்தெயிலெ எழுதிக்கேப்பானுவோ டாக்டருமாருவொ?)
13. உடற்பயிற்சி செய்யிறதுனாலெ ஒடம்புலெ உள்ள கெட்ட நீரு/கிருமிகள் வேர்வை மூலமா வெளியாயிடும். ஒடம்பும், மனசும் ஃப்ரஸ்ஸா ஈக்கிம். ரத்த ஓட்டம் சீராக ஈக்கிம்.
14. மணிக்கணுக்குலெ காலைக்கடனுக்கு காத்துக்கெடக்க வேண்டிய அவசியம் ஈக்காது. அப்புறம் ஒடம்பு ரொம்ப ராஹத்தா ஈக்கிம்.
15. உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் பொழுது ரெண்டு, மூணு நாளெக்கி ஒடம்பு பூராவும் வலிக்கும். காச்சல் கூட வரும். பயந்துட கூடாது. காச்சல் உட்டதும் தொடரனும். அப்புறம் என்னா? சிக்ஸ் பேக்கு, எயிட் பேக்குண்டு வசதிக்கு தகுந்தமாரி வச்சிக்கிட வேண்டியது தானே? இதுக்கு அரசாங்க வரியா போடப்போவுது?
நம்ம ரத்தத்துலெ இனிப்பையும், கொழுப்பையும் கொறச்சிட்டா அல்லது கட்டுப்பாட்டுடன் வச்சிக்கிட்டாலே போதுங்க. ஏகப்பட்ட நோய்நொடிகள் நம்மை தாக்காமல் தடுக்கலாம். பெருவாரியான நோய்நொடிகளை நம்ம ஒடம்புக்குள்ள பந்தல் போட்டு வாசல்லெ பன்னீரு தெளிச்சி, சந்தனத்தெ ஒரு கோப்பையிலெ வச்சிக்கிட்டு வரவேற்கிறதே இந்த ரெண்டும் தாங்க (இனிப்பும், கொழுப்பும்). (சகன்லெயும் அது ரெண்டும் தானே நாட்டாமை பண்ணுது?)
எப்புடி பலமான இறையச்சம் (தக்வா) உள்ளவர்களை பார்த்து சைத்தான் அவர்களை வழிகெடுக்க நெருங்க முடியாமல் எரிச்சலடைந்து சோர்ந்துபோகிறானோ (சோந்துபோவான்) அது மாதிரி தாங்க நம்ம ஒடம்பெ ஆரோக்கியமா எப்போழும் வச்சிக்கிட்டா நோய்நொடிகள் எளிதில் நம்மை தாக்க முடியாமல் எரிச்சலாகி மாச்சப்பட்டு எங்கையாவது ஓடிப்போயிடும். அப்புறமென்ன நோய்நொடிகளும் அதை ஊக்குவிப்பவர்களும் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையம் போல் ஆரோக்கியமான மனிதர்களை எதிர்த்து போராட வேண்டியது தான். அதுக்கு ஒத்து ஊதுறதுக்கும் ஆளுவொ நாட்லெ ஈக்கத்தான் செய்வாங்க. அதெ பத்தி கவலைப்படாதியெ. நமக்கு நம்ம ஆரோக்கியம் தான் முக்கியம்ங்க.......
இன்னொரு விசயங்க, எங்க அப்பா காலத்துலெ எல்லாம் எல்லாப்பள்ளியாசல்லையும் ஒரு நாக்காலியெ கூட பாத்தது இல்லெ. எம்பது, தொன்னூறு வயசானவங்க கூட நின்டுக்கிட்டு இல்லாட்டி தரையிலெ உக்காந்துகிட்டு தான் தொழுவுவாங்க. இப்பொ என்னாண்டாக்கா ஒவ்வொரு பள்ளியாசல்லையும் பத்து நாக்காலிக்கு மேலெ வாங்கி போட்டு வச்சிக்கிறாஹ. சின்ன, சின்ன வயசுகாரவங்க கூட எதாவது ஒடம்பு சரியில்லாம நாக்காலியிலெ உக்காந்துக்கிட்டு தொழுவுறாங்க...காரணம் என்னாண்டாக்கா இப்பொ உள்ள மக்கள்ட்டெ ஆரோக்கியம் கொறஞ்சி போச்சிங்க

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.