பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவிகளான திவ்யா, துர்கா தேவி
‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்துடன் தாயகம் திரும்பியுள்ளனர் சென்னை கல்லூரி மாணவிகள்.
அமெரிக்க விண்வெளி மையமான ‘நாசா’ அறிவித்த போட்டியில் பங்கேற்று பலரது பாராட்டையும் பெற்றுத் திரும்பியுள்ளனர் சென்னை மைலம் பொறியியல் கல்லூரி மாணவிகள். பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவிகளான திவ்யா, துர்கா தேவி ஆகிய இருவரும்தான் அந்தப் பெருமைக்குரியவர்கள்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை, வளி மண்டலத்தில் உள்ள ஓசோனைப் பாதித்து, ஓசோனில் ஓட்டையை ஏற்படுத்துவதால், புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது. ‘வளி மண்டலத்தில் ஓசோனை அதிகரித்தால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும்’ என்ற ஐடியாவை சொல்லி நாசாவில் இருந்து தங்கப் பதக்கத்தை தட்டி வந்திருக்கிறார்கள் இந்த மாணவிகள்.
“பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சவுடனே, ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்தான் படிக்கணும்னு ஆசைப்பட்டோம். ஆனால், அந்த ஆசை நிறைவேறல. ஆனாலும் அந்த ஆசையை ஆசையாகவே நிறுத்தாமல், நாசாவின் இணையதளத்தில் எங்கள் பெயரை பதிவு செய்தோம். நாசாவைப் பற்றிய தகவல்கள் எங்கள் மெயிலுக்கு எப்போதும் வந்து சேரும்படி பார்த்துக் கொண்டோம்” என்கிறார் திவ்யா.
‘நாசா’விலிருந்து வந்து கொண்டிருந்த தகவல்கள் மூலமே தங்கள் அறிவை வளர்த்துக்கொண்ட இவர்கள், ‘நாசா’ விஞ்ஞானிகளுடன் அவ்வப்போது சாட் செய்து அவர்களுடன் நட்பை வளர்த்துக்கொள்ளவும் தவறவில்லை.
‘மாற்று சக்தி மூலம் ஒரு நாட்டை எப்படி முன்னேற்றலாம்’ என்ற தலைப்பில் ‘நாசா’ அறிவித்த போட்டியில் நாமும் பங்கேற்றால் என்ன என்ற ஆர்வம் எழுந்தது. நாங்கள் அனுப்பிய ஐடியாவைப் பார்த்து, எங்களை நெதர்லாந்துக்கு அழைத்தது ‘நாசா’. போட்டிக்கு வந்திருந்த இரண்டாயிரம் கட்டுரைகளில் இருந்து ‘நாசா’ சிறந்ததாகத் தேர்ந்தெடுத்த 15 கட்டுரைகளில் எங்களுடையதும் ஒன்று. அமெரிக்கா செல்ல விமான டிக்கெட், மூன்று நாட்கள் தங்கும் இடத்துக்கான செலவு, சாப்பாடு என்று எல்லா செலவும் அவர்களுடையதுதான்” என்று மகிழ்ச்சி விலகாதவராக விவரிக்கிறார் துர்கா தேவி.
‘நாசா’வுக்குச் சென்று இறங்கியதும் இவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. இவர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற போட்டியாளர்கள் அனைவருமே வானவியல் துறையில் பிஎச்.டி. படித்தவர்கள். இவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரி இளநிலைப் பட்டதாரி மாணவிகள்.
“வானத்தில் செயற்கை மழை உருவாக்கப் பயன்படுத்தும் அதே உத்தியைப் பயன்படுத்தி, திரவ நிலையில் உள்ள ஆக்ஸிஜனை உயர்வெப்பத்தில் வாயுவாக மாற்றி, வானில் தூவ வேண்டும். O2-வை தொடர்ச்சியாக ஆக்ஸிஜனுடன் மோதவிடும்போது, தொடர்ச்சியாக ஓசோன் வெளியாகும். அதாவது, அணுக்கரு பிளவின்போது நடக்கும் அதே விளைவை இதில் உபயோகிக்கவேண்டும். இது, நானோ டெக்னாலஜியில் ஒரு வகை” என்று விவரிக்கிறார்கள் இருவரும்.
இவர்களின் இந்த ஐடியா, ‘நாசா’ விஞ்ஞானிகளின் ஒட்டு மொத்தப் பாராட்டையும் பெற்று, முதல் பரிசு வென்றுள்ளது. அத்துடன் 13 ஆண்டுகளாக நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், ஆசியாவில் இருந்து கலந்துகொண்ட முதல் போட்டியாளர்கள் இவர்கள்தான்.
“இந்தப் போட்டியில் கலந்துகொண்டதன் மூலம் எங்களுக்கு நிறைய விஞ்ஞானிகள் நண்பர்களாகக் கிடைத்துள்ளனர். இனி ‘நாசா’தான் எங்கள் எதிர்காலமே” என்று தங்களுக்குக் கிடைத்த தங்கப்பதக்கத்துடன் புன்னகை பூத்தனர் திவ்யாவும், துர்காதேவியும்.
No comments:
Post a Comment