புதுவை மாநிலம் காரைக்கால் அருகே உள்ள அம்பகரத்தூர் காளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த இஸ்லாமிய தம்பதியரை, அப்பகுதி இஸ்லாமிய இளைஞர்கள் கடுமையாகத் தாக்கிய சம்பவம்... பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யதையடுத்து, அந்த இஸ்லாமிய தம்பதியர் யார்? எதனால் இஸ்லாமிய இளைஞர்களால் தாக்கப் பட்டனர் என்பதை அறிய அந்த தம்பதியரை சந்திக்கச் சென்றோம்.
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்தவர் "ஸ்ரீ அப்துல்ஹமீது' (பெயரிலேயே நம்மை கிறுகிறுக்க வைக்கிறார்) அவரது மனைவி சுரையா பானு. இருவருமே அந்தத் தாக்குதல் சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீளாமல் இருந்தனர்.
ஸ்ரீ அப்துல்ஹமீது முதலில் பேச ஆரம்பித்தார். ""சார், நாங்க ரெண்டுபேருமே பிறப்பால் முஸ்லிம்தான். 20 வருஷம் முந்தி ஒருநாள் என் கனவுல வந்த சமயபுரம் மாரியம்மனின் சக்தியால் என் உடலே குலுங்கி என் உடம்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்ட அதே அதிர்வு... என் மனைவிக்கும் ஏற்பட்டிருந்தது. அன்று முதல் இருவருமே அம்மனை வழிபட ஆரம்பித்தோம். என் மனைவி மேலுக்கு புர்கா போட்டிருந்தாலும், கழுத்தில் "ஓம்' டாலரும், உத்திராட்சக் கொட்டையும் போட்டிருப்பா. அதேபோல நானும் காவி வேட்டி கட்டி, உத்திராட்ச மாலை போட்டுக்க ஆரம்பிச்சேன்.
இப்ப நாங்க ரெண்டுபேருமே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் போக மாலை போட்டிருக்கோம். அம்மன் அருளால நான் மத்தவங்களுக்கு குறி சொல்ல ஆரம்பிச்சேன். அப்துல் ஹமீதுங்கிற என் பேருக்கு முன்னால "ஸ்ரீ' போட ஆரம்பிச்சதே மக்கள்தான். ஆரம்பத்துல இலவசமாதான் குறி சொல்லிட்டு இருந்தேன். அப்புறம் கூட்டம் அதிகமா வர ஆரம்பிச்சதும் 50, 100 வாங்க ஆரம்பிச்சேன். இப்போ அந்த வருமானத்துலதான் குடும்பமே நடக்குது.
அம்மன் மட்டும் இல்லாம எல்லா இந்து கடவுளையும் நாங்க வழிபடுவோம். சுமார் 13 வருஷமா பால்குடம், காவடி எடுத்து வழிபட்டுக்கிட்டு வர்றோம். முஸ்லிமா இருந்துக்கிட்டு இந்து தெய்வங்களை குடும்புடுறதுக்கு எங்க ஊர் இஸ்லாமியர்கள் யாரும் இதுவரைக்கும் எதிர்ப்பு தெரிவிச்சதே இல்லை. ஆனா அம்பகரத்தூர் காளியம் மன் கோயில்ல நடந்த அந்த மோசமான தாக்குதல் சம்பவம் எங்களோட பக்திக்கு வந்த பெரும் சோதனை'' என்று கண்கலங்கிய ஸ்ரீஅப்துல்ஹமீதுவிடம்..
.""காளியம்மன் கோயிலில் உங்களை யாரும் தடுத்தார்களா? எதனால் தாக்குதல் நடந்தது?'' என்றதும் ஸ்ரீ அப்துல்ஹமீது... கண்களைத் துடைத்துக்கொண்டு, ""வழக்கமா எல்லா கோயில்களுக்கும் போறது மாதிரி தான் அம்பகரத்தூர் காளி கோயிலுக்கும் சாமி கும்பிடப் போனோம். அப்போ அந்தப் பகுதி முஸ்லிம் இளைஞர்கள் கூட்டமா வந்து, புர்கா போட்டிருந்த என் மனைவியையும், காவி வேட்டி கட்டியிருந்த என்னையும் மாறி மாறி பாத்துட்டு நான் கட்டியிருந்த காவி வேட்டிய உருவி என்னை அம்மணமாக்கி "சுன்னத்' பண்ணியிருக்கான்னு சோதனை போட்டாங்க. "சுன்னத்' பண்ணியிருந்தது கன்ஃபார்ம் ஆனதும், "ஒரு முஸ்லிமா இருந்துக்கிட்டு சாமி கும்பிட வந்தியா?'ன்னு கேட்டுக் கிட்டே ஆளாளுக்கு என்னை அடிச்சு காலால உதைச்சாங்க.
நான் அம்மணமா ஒருபக்கம் ஓட... என் மனைவியை சோதிக்கணும்னு அவள ஒருபக்கம் தரதரன்னு இழுத்துக்கிட்டுப் போயி அவளோட புர்காவை கழற்றி அசிங்கப்படுத்தினாங்க. கோயிலுக்கு வெளியில வந்தும் எங்கள விடல. கொல்லுமாங்குடிங்கிற இடத்துல எங்கள சுத்தி வளைச்சி உதைச்சாங்க. அவங்க அடிச்ச அடியால விழுந்த காயம் இன்னும் மாறல. முஸ்லிம்னா இந்து சாமியை கும்பிடக்கூடாதுன்னு சட்டமா இருக்கு?'' என்று ஸ்ரீ அப்துல் ஹமீது தன் குமுறலைவெளிப்படுத்த...
உடனிருந்த சுரையாபானு, ""எப்போ என் புருஷனோட வேட்டியை உருவி அம்மணமா ஆக்கினாங்களோ... அந்த நிமிஷமே இனி புர்கா வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டேன்...'' என்றார் கோபமாக.
""அப்புறம் யாரோ போலீசுக்கு தகவல் கொடுத்திருப்பாங்கபோல... அம்பகரத்தூர் போலீஸ்காரங்க வந்து, வன்முறை வெறியாட்டம் நடத்திய அந்த முரட்டு இஸ்லாமிய இளைஞர் கூட்டத்துக்கிட்டேயிருந்து எங்களைக் காப்பாத்தி, தமிழ்நாட்டு பார்டர்ல கொண்டுவந்து பாதுகாப்பா இறக்கிவிட்டுட்டுப் போனாங்க'' என்றார் வலியுடன் ஸ்ரீ அப்துல்ஹமீது.
இவ்வளவு மோசமாக தாக்குதல் நடத்திய அந்த வன்முறை கும்பல் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? அம்பகரத்தூர் காவல் நிலையத்தில் பேசினோம். அங்கிருந்த ஆய்வாளர், "இந்த கேஸை பேரளம் போலீஸ்தான் பதிவு செஞ்சிருக்கு' என்றதும், பேரளம் காவல் நிலைய ஆய்வாளரை தொடர்புகொண்டோம்.
அவர், ""காளி கோயிலுக்கு சாமி கும்பிட அவர்கள் இஸ்லாமியர்களாக வந்திருக்கணும்... இல்லை இந்துக்களாக வந்திருக்கணும். தோற்ற குழப்பம்தான் தாக்குதலுக்கு முக்கிய காரணம். அதுவுமில்லாமல் அப்துல்ஹமீதை மாந்த்ரீக சாமியார் என்றும் அவர் முஸ்லிம் பெண்ணை மயக்கி கடத்தி வந்திருப்பதாகவும் அந்த இளைஞர்கள் எண்ணிக்கொண்டு அடித்து உதைத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அப்துல்ஹமீது-சுரையாபானு இருவரும் கொடுத்த புகாரின்படி பத்துபேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். ஒருவர் பிடிபட்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் மற்ற வாலிபர்களைத் தேடி வருகிறோம்'' என்றார்.
"இஸ்லாமியராக இருந்துகொண்டு இந்து கடவுளை வழிபடுவது குற்றமா?' என்று கேள்வி கேட்கும் அப்துல்ஹமீதுவின் நிலைமை குறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தமீம் அன்சாரியிடம் நாம் கருத்து கேட்டபோது... ""இஸ்லாம் மார்க்கம் என்பது உருவ மற்ற ஓர் இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்ற அடிப்படை கொள்கையைக் கொண்டது.
நபிகள் நாயகத்தைக்கூட இறைவனின் தூதுவராக மட்டுமே போற்றுகிறோம். அவரை இஸ்லாமியர்கள் கடவுளாக வழிபடுவதில்லை. இந்த நிலையில், ஒரு இஸ்லாமியர் சிலைகளை வழிபடத் துவங்கிவிட்டால், அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்றுதான் அர்த்தம். அவரோ, அவரது மனைவியோ... "தாங்கள் இஸ்லாமியர்கள்' என்று கூறிக் கொள்வதை இஸ்லாம் அனுமதிக்காது. திருக்குரானில் இறைவன், "இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை' என்று சொல்கிறார். அதனால், இந்து கோயில்களுக்கு அவர்கள் செல்வதாக இருந்தால், இந்துக்களின் அடையாளத்துடன் செல்லவேண்டும். இஸ்லாமிய அடையாளத்துடன் செல்வது தவறு. அது, இதுபோன்ற தேவையற்ற குழப்பங்களைத்தான் உருவாக்கும். அதேசமயம், நிதானமாக அணுகியிருக்க வேண்டிய ஒரு விவகாரத்தில் அந்த இஸ்லாமிய இளைஞர்கள் வன்முறைத் தனத்தை கையில் எடுத்தது கண்டிக்கத்தக்கது'' என்றார்.
நன்றி: நக்கீரன்
நன்றி : அதிரை முஜீப்.காம்

No comments:
Post a Comment