அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி நிர்வாகக் குழு 6 மாதங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
குழுவில் 75 சதவீதம் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் இடம்பெற வேண்டும். பொருளாதார, சமூக ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கும் குழுவில் வாய்ப்பளிக்க வேண்டும். மீதமுள்ள 25 சதவீத உறுப்பினர்கள் பின்வரும் விகிதத்தில் இடம்பெற வேண்டும்.
மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்தும், மற்றொரு பங்கு உறுப்பினர்கள் அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்தும், இன்னொரு பங்கு உறுப்பினர்கள் உள்ளூர் கல்வியாளர்களிலிருந்தும் நியமிக்கப்பட வேண்டும்.
பெற்றோர் உறுப்பினர்களில் இருந்து குழுவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர், அவர் இல்லாத பள்ளிகளில் பள்ளியின் மூத்த ஆசிரியர் இந்தக் குழுவின் பதவி வழி உறுப்பினராகவும், அமைப்பாளராகவும் செயல்படுவார்.
இந்தக் குழு மாதத்துக்கு ஒருமுறையாவது கூட வேண்டும். கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்களை பொதுமக்களின் பார்வைக்கும் வைக்க வேண்டும். குழுவில் மொத்தமாக 50 சதவீத பெண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். பள்ளி நிர்வாகக் குழுவில் 20 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
குழுவின் பணிகள்:
ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும். அருகில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்வதையும், அவர்கள் தொடர்ந்து கல்வி பயில்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் உரிமை மீறப்படும்போதோ, அவர்கள் துன்புறுத்தப்படும்போதோ, பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படும்போதோ உள்ளூர் கல்வி அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும். குழந்தைகள் கல்வி பயில்வதற்குத் தடையாக கல்விக் கட்டணம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சத்துணவு வழங்கும் திட்டத்தை மேற்பார்வையிட வேண்டும். பள்ளிகளில் கற்பித்தலைத் தவிர ஆசிரியர்கள் தனிப் பயிற்சி எடுக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி மேம்பாட்டுத் திட்டம்:
ஒவ்வொரு பள்ளி நிர்வாகக் குழுவும் ஒவ்வொரு ஆண்டுக்கும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். நிதியாண்டு முடிவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முன்னதாக இந்தத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் அல்லது துணைத் தலைவர், அமைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்பிடம் வழங்க வேண்டும்.
பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விப் பணிகள் தவிர வேறு பணிச் சுமைகள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் பணிகள் தவிர பிற பணிகளுக்கு அவர்களைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
பள்ளிச் செலவுக் கணக்குகளையும், உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து பெறப்படும் நிதி குறித்த கணக்குகளையும் தனியாகப் பராமரிக்க வேண்டும்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாகக் குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை திட்ட இயக்குநர் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் உத்தரவில் குறிபிடப்பட்டுள்ளது.
M. NIJAM
Source : காலை நாளிதழ்
No comments:
Post a Comment