Latest News

கை கொடுப்போமா…



நவ., 15ம் தேதி, ராமநாதபுரத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான முகாமில், ஊனமுற்றவர்கள் ஒவ்வொருவராக வந்து, தங்களது குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் சொல்லிக் கொண்டு இருந்தனர். அப்போது, பள்ளி சீரூடை அணிந்த மாணவி ஒருவர், மெதுவாக வந்து, அதிகாரிகளை பார்த்து அழுதபடி கையெடுத்து கும்பிட்டார்.

அந்த மாணவி கும்பிடுவதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி!
காரணம், மாணவியின் வலது கை முழங்கையுடன் துண்டிக்கப் பட்டு இருந்தது "வா தாயி...' என்று உட்கார வைத்து, "உனக்கு என்னம்மா வேணும்...' என்றதும், பொங்கி வந்த கண்ணீரை, தன் முழுமையற்ற கையால் துடைத்துக் கொண்டும், கேவிக் கொண்டும் அந்த மாணவி பேசலானார்...

எனக்கு சொந்த ஊர் கமுதி அருகே உள்ள எருமைக்குளம். அப்பா முத்துராமலிங்கம், அம்மா கிருஷ்ணம்மாள். எங்க அம்மாதான் காட்டிலே போய் விறகு பொறுக்கி வந்து, அதை விற்று வர்ற காசுலதான் கஞ்சி காய்ச்சி, சாப்பாடு போடுவாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. எனக்கு படிப்புன்னா ரொம்ப இஷ்டம். எங்க அப்பா எந்த வேலைக்கும் போனதில்ல. எப்பவும் குடிச்சுட்டு வந்து அம்மாகிட்ட தகராறு செய்து, அடிச்சுக்கிட்டே இருப்பாரு. ஒரு நாள் குடிவெறியால அம்மாவை அரிவாளால வெட்ட வந்தாரு. நான் குறுக்கே பாய்ந்து வலது கையால தடுத்தேன். கை துண்டாப் போனது மட்டு மில்லாமல், என் அம்மாவோட தலையிலும், தோள்லேயும் கூட வெட்டு விழுந்துச்சு. அப்பா ஓடிப் போயிட்டாரு.

அக்கம், பக்கம் இருந்தவங்க என்னையும், அம்மாவையும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாங்க. "முறைப்படி' கொண்டு வராததாலே, கையை திரும்ப சேர்க்க முடியாம போச்சுன்னு சொல்லிட்டாங்க. ஆனாலும், என் அம்மாவை காப்பாத்திட்டேன். இனியும், நல்லா காப்பாத்தணுங்கிறதுனால தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டேன்; ஆனால், கையில காசில்லை.

பிறகு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் வழிகாட்டியதில், இப்ப நான் ராமநாத புரத்தில் உள்ள ஆஞ்சலோ காப்பகத்தில் தங்கியிருக்கேன். இங்குள்ள புனித ஆந்திரேயா பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறேன்.

அம்மா, விறகு பொறுக்கி வர்ற காசுல என்னை படிக்க வைக்கிறாங்க. ஆஞ்சலோ காப்பகம் சதானந்தம் ஐயா, ஆசிரியர் செபாஸ்டின் ஐயா ஆகியோர் எனக்கு வேணுங்கிறதை செய்து தர்றாங்க.

எதிர்காலத்துல குடிக்கறவங்களே இருக்கக் கூடாது. அதுக்கான படிப்பு படிச்சு, எல்லாரரையும் திருத்துவேன். இப்ப என்னோட ஆசை, ஆரம்பத்துல இருந்தே கை இல்லாம இருந்தா பரவாயில்லை. கை இருந்துட்டு, திடீர்ன்னு இல்லைன்னு ஆயிட்டதாலே ரொம்ப சிரமமாயிருக்கு. செயற்கை கை பத்தி நிறைய சொல்றாங்க. அதுல ஓண்ணு இலவசமா மாட்டிவிட முடியுமாங்கய்யா? என்று சொல்லி முடித்த தனலட்சுமி யின் கேவலுக்கும், கேள்விக்கும் பதில் கொடுக்க விரும்பு பவர்கள், 

தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: சதானந்தம் - 9786713264, செபாஸ்டின்-94420 4856

நன்றி : http://www.islamicvision.info

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.