Latest News

  

'அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்' ஓர் அறிமுகம்



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்  கூறுகிறான்:
நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை எடுத்துரைப்பார்கள்.  தீமையைத்தடுப்பார்கள்.  தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும்  அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவார்கள். இத்தகையவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.  (அத்தவ்பா 9:71)

எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே!  இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்,  தோழர்கள்,  அவர்களைப் பின்பற்றும் அனைவருக்கும் உண்டாகட்டும்.

கண்ணியத்திற்குரிய அதிரை இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

அதிரையில் 1983 ஆம் ஆண்டு முதல் இன்று தோன்றியுள்ள எத்தனையோ இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே, அதாவது 1983-ல் 'தாருத் தவ்ஹீத்' மூலம் நமதூர் மக்களுக்குத்  தூய இஸ்லாமியப்  பிரச்சாரத்தை நோட்டீஸ், பொதுக்கூட்டம்,  அரங்க நிகழ்ச்சிகள்,  மாநாடு போன்றவற்றால் சமுதாயச் சீர்திருத்தப் பணிகளை நமதூர்  கொள்கைச் சகோதரர்கள் செய்து வந்தார்கள்.  காலப்போக்கில் தமிழகத்தில் பல சமுதாய இயக்கங்களின் வருகையால்,  கொள்கைச் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால்,  இந்தச் சீர்திருத்தப் பணிகளுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இன்று நமதூரில் ஊடுருவி இருக்கும் பல சீர்கேடுகளையும் அனாச்சாரங்களையும் களைய வேண்டிய அவசியத்தை உணர்ந்த இயக்கம் சாராத நமதூர் கொள்கைச்  சகோதரர்கள்,  தாருத் தவ்ஹீதின் சேவை தொடரவேண்டும் என்ற கருத்தில், கடந்த 05.11.2011 சனிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு தக்வாப்பள்ளியில் கூடி ஆலோசனை செய்தனர்.  இக்கூட்டதின் முடிவில், கடந்த காலங்களில் நமக்குள்  ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களைந்து, ந டந்தவற்றை அனுபவமாகப் பெற்று,  இன்ஷாஅல்லாஹ் வரும் காலங்களில் நமதூரில் சமுதாயச் சீர்திருத்தப் பணிகளை செய்ய,  தூய எண்ணத்தில் தொடங்கப்பட்ட தாய்ச் சபையான தாருத் தவ்ஹீதின் பெயரில் – அதாவது, 'அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட் ' என்று  –  செயல்படுவது என ஏகமனதாகத் தீர்மானமாயிற்று.

அதிரை தாருத் தவ்ஹீதை  அறிமுகம் செய்வதன் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம்.  இதில் அதிரை தாருத் தவ்ஹீதின்  நோக்கத்தையும் அதன் பணிகளையும் விவரிப்பதுடன், அதன் இன்றையத் தேவையையும் தங்கள் முன் வைக்கிறோம்.

அல்லாஹ்  கூறுகிறான்:
நன்மையை எடுத்துரைத்து, தீமையைத் தடுத்து, நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.  அவர்களே வெற்றி பெற்றோர்.  (ஆலு இம்ரான் 3:104)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால்,  அவர் அதைத் தனது கரத்தால் தடுக்கட்டும்.  முடியாவிட்டால், தனது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்).  அதுவும் முடியாவிட்டால், தனது உள்ளத்தால் (அதைத் தீயதென்று வெரறுத்து ஒதுக்கட்டும்).  இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.  அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம் 78

ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும் கருணை புரிவதிலும் பரிவு காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களின் நிலையானது, ஓர் உடலைப் போன்றதாகும்.  உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால், அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது. அறிவிப்பவர்: நுஉ மான் பின் பஷீர் (ரலி), நூல்: முஸ்லிம் 5044, புகாரி 6011

இன்று நமது சமுதாயத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை பெரும்பாலோர் சரியான மார்க்க ஞானத்திற்கும் முறையான வழிகாட்டலுக்கும் அதிகம் தேவையுள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்.  ஆகவே, மேற்கூறப்பட்ட இறை வசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கிணங்க, சமுதாயச் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடுவது மார்க்கக்  கடமை என்பதை உணர்ந்து, அல்குர்ஆன் மற்றும் நபிவிழியின் அடிப்படையில் அந்த உயர்ந்த பணியை நிறைவேற்றி இறை திருப்தியை அடைய வேண்டும் என்ற தூய எண்ணத்தில் மறு சீரமைப்புடன் செயல்படத் துவங்கியுள்ளதுதான்,  'அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்'.

இனி, நமக்கு முன்னால் உள்ள பணிகளும் சேவைகளும் பற்றிப் பார்ப்போம்:.

அழைப்புப் பணி :
இதுவே இஸ்லாமிய அடிப்படையாகும்.  உலகில் இப்பணி இறைத்தூதர்கள் வாயிலாக நிலைநிறுத்தப்பட்டது.  இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களுடைய சமுதாயத்தினர் அனைவரின் மீதும் இப்பணி கடமையாக்கப்பட்டது. மேன்மைமிகு குர்ஆனும்  சிறப்புமிகு நபிவழியும் இதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.  எனவே,  இயன்ற அளவு அனைத்து வழிகளிலும் மனித சமுதாயத்திற்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதும் அதன் உயர்வுகளை விளக்கிச் சொல்லி, அதன் பக்கம் அழைப்பதும் அதிரை தாருத் தவ்ஹீதின்  முதல் பணியாகும்.

கற்பித்தல்:
இஸ்லாத்தைப் பற்றி அறிய விரும்பும் சிறுவர்கள், வாலிபர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் மேன்மைமிகு குர்ஆன், சிறப்புமிகு நபிமொழிகளை அவரவர் தகுதிக்கேற்பக் கற்றுக் கொடுப்பது அதிரை தாருத் தவ்ஹீதின் இரண்டாவது பணியாகும்.

நூல் வெளியிடுதல்:
மேன்மைமிகு குர்ஆன், சிறப்புமிகு நபிமொழி இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு சமுதாய பேரறிஞர்களால் எழுதப்பட்ட நூல்களைச் சலுகை விலையில் மக்களுக்கு வழங்குவது அதிரை தாருத் தவ்ஹீதின்  மூன்றாவது பணியாகும்.

துயர் துடைப்புப் பணிகள்:
அல்லாஹ்வே அனைவரின் தேவைகள், துன்பங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்பவன்.  மிகப் பெரிய வள்ளலாகிய அல்லாஹ், தன் சார்பாக உலகில் ஏழை,  எளியோர்,  நலிந்தோர் ஆகியோரின் துயர் துடைக்கும் வள்ளல் பெருமக்களுக்கு மாபெரும் வெகுமதிகளை ஈருலகிலும் வழங்குவதாக வாக்களித்துள்ளான்.  பிறர் துன்பங்களில் பங்கெடுப்பது,  பிறர் தேவைகளை நிறைவேற்ற இயன்றவரை உதவுவது முஸ்லிம்களுடைய அடிப்படைப் பண்புகளாகும்.

இந்த உன்னதப் பணிக்காக  'அதிரைப் பொருளாதார மேம்பாட்டு நிதியகம்'  என்ற ஒன்றை நிறுவி, இரக்கச் சிந்தையும் மார்க்கப் பற்றும் கொண்ட வள்ளல் பெருமக்களிடமிருந்து கடமையான,  உபரியான தர்மங்களைப் பெற்று, அவற்றைத்  தேவையுடையவர்களுக்கு வழங்குதல்  அதிரை தாருத் தவ்ஹீதின் நான்காவது பணியாகும்.

இந்தப் பணிகள் மட்டுமின்றி,  இஸ்லாம் முழுமையாக ஒவ்வொருவரின் வாழ்விலும் வரவேண்டும் என்பதற்காகவும்,  நமதூர் மக்களுக்குள் நல்லுறவும் அன்பும் கருணையும் சமூகப் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இயன்றவரை அல்லாஹ்வுக்காகத் தொண்டாற்ற வேண்டும் என்பதுவும்  'அதிரை தாருத் தவ்ஹீதின் குறிக்கோளாகும்.

இப்பணிகள் அனைத்தும் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறவும்,  அவற்றை அல்லாஹ் அங்கீகரிக்கவும்,  தாங்கள் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்வதுடன்,  தங்களால் இயன்றவரை இப்பணிகளில் பங்குபெறுமாறும் அன்புடன் அழைக்கிறோம்.

மேற்கூறப்பட்ட பணிகளை விசாலப்படுத்தவும், மேன்மேலும் அவற்றைச் சிறப்புடன் நிறைவேற்றவும்  'அதிரை தாருத் தவ்ஹீதுக்காகச் சில அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன.

ஒரு மர்கஸ்,  பாட வகுப்பறைகள்,  நூலகம்,  நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் நடத்த வசதிகளுடன் கூடிய வளாகம்,  மார்க்கக் கல்விகள் முழுநேர வகுப்புகளாக நடத்துவதற்குத் தேவையான கல்வி நிலையம்,  மாணவர்களும் விருந்தாளிகளும் ஊழியர்களும் தங்குவதற்குரிய விடுதிகள்,  புத்தக விற்பனை நிலையம்,  மாதாந்திரச்  செலவுகளைப் பூர்த்தி செய்வதற்குரிய வசதிகள் போன்ற தேவைகள் உள்ளன.

நல்லுள்ளம் கொண்ட மேன்மையான அதிரைவாசிகளே! நீங்கள் கொடுக்கும் தர்மங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கு நிச்சயம் பேருதவியாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு பங்குகொண்டு, ஈருலக நற்பேறுகளை அடைந்து கொள்ளுங்கள்!  மார்க்கத்திற்காகக் கொடுக்கப்படும் தர்மங்களுக்குச் சிறப்புகளும் நன்மைகளும் ஏராளம் உள்ளன என்பது உங்களுக்குத் தெரிந்ததே!

.......எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகைiயை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்ததும் மகத்தான கூலியுமாகும்.  அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (அல் முத்தஸ்ஸிர் 73:20)

பேராற்றலுடைய அல்லாஹ் இந்த நல்ல திட்டங்களை நிறைவேற்றித்தரப்  போதுமானவன்!  அவனிடமே உதவி தேடுகிறோம்!  அவனையே முன்னோக்கி நிற்கிறோம்!  வஸ்ஸலாம்.

மிக்க அன்புடன்,
புத்தமைப்புச் செய்யப்பட்ட நிர்வாகக் குழு
'அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்'.

நன்மையான காரியங்களில் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு:
கண்ணியத்திற்கு சகோதரர்களே இச்செய்தி தங்களுக்கு அனுப்பப்பட்டதில் ஆட்சேபம் தெரிவிப்பவரா நீங்கள். தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள். இனி தங்களுக்கு இதுபோன்று செய்திகள் அனுப்ப வேண்டாம் என்றால். எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கொண்டு தகவல் அல்லது ஐயத் தெளிவு பெற விழைவோர்,
பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.       
adiraiahmad@gmail.com,aimuaeadirai@gmail.co

நன்றி : aimuaeadirai

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.