தமிழகத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களை உள்ளடக்கிய 1,12,759 உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றிபெற்றுள்ள இவர்களின் தலையாயக் கடமை வரும் 5 ஆண்டுகள் மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதும், அவர்கள் நலனுக்காகச் சேவையாற்றுவதும் ஆகும்.
ஆனால், அரசியல் என்றாலே தற்போது லாப நட்டக்கணக்குப் பார்க்கப்படும் ஒரு தொழிலாக மாறிவரும் இச்சூழ்நிலையில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் மக்கள் பிரச்னைகளிலும், சேவையாற்றுவதிலும் கவனம் செலுத்துவார்களா என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஒரு தொழில் தொடங்கவேண்டுமென்றால் முதலில் அதற்குத் தேவையான முதலீடு செய்ய வேண்டும். அதேபோல்தான் அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் ஒரு கட்சி சார்பில் ஒருவர் போட்டியிட வேண்டுமென்றால் லட்சமோ, கோடியோ பணம் கொட்டினால்தான் "சீட்டு' கிடைக்கும் என்ற எழுதப்படாத வரலாறு நீடிக்கிறது. இதனால், அரசியலில் அர்ப்பணிப்புத்தன்மை என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
அந்தக் காலகட்டத்தில் அரசியல் என்ற உன்னதமான மேடையேறிய பலர் தங்களது வீடு, சொத்துகளை இழந்து, மக்களின் சேவை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர்.
அவர்கள் மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டத்தில் முன்நின்றனர். அதற்கான பிரதிபலனையும் அவர்கள் எப்போதுமே எதிர்பார்த்தது இல்லை. மேலும், புனிதமான அரசியல் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையோ, வாரிசுகளையோ வளப்படுத்திக்கொண்டதில்லை என்பதும் வரலாறு.
ஆனால், இப்போது ஏதாவது ஒரு கட்சியில் ஒன்றிய அளவில் கிடைக்கும் பதவி மூலம் அரசியலுக்கு வருபவர், சில மாதங்களிலேயே கார், பங்களா என்று பகட்டுடன் மக்கள் முன்னிலையில் வலம் வருவதைக் காண முடிகிறது.
சாதாரண நிலையில் இருக்கும்போது ஒரு கட்சி சார்பில் நகராட்சி அல்லது மாநகராட்சி கவுன்சிலராகத் தேர்வாகும் ஒருவர் சில மாதங்களில் பல கோடிகளுக்கு அதிபதியாகிவிடுகிறார்.
அரசியல் மூலம் அடுத்தடுத்து அவரது அசுர வளர்ச்சியை நேரடியாகப் பார்க்கும் மக்கள் இந்த அரசியல் தொழிலால் சம்பாதிக்கலாம் என்ற மனஓட்டத்துக்கு முழுவதுமாக மாறிவிட்டனர். இதனால், "அரசியல் புனிதம்' கெட்டுவிட்டது என்றே சொல்லலாம்.
இதற்கு முடிவு இல்லையா என்றால், எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு என்பதைக் காட்டும் வகையில்தான், முந்தைய காலத்தில் பொறுப்பில்லாமல், சொத்துச் சேர்ப்பதையே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்ட பெரும்பாலான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
வாக்காளர்கள் பல்வேறு கனவுகளுடன் தங்களின் விலை மதிப்பில்லாத வாக்குகளைச் செலுத்தி உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்துள்ளனர். அவர்களின் உணர்வுகளுக்கும், பிரச்னைகளுக்கும் முன்னுரிமை அளித்து ஒரு காவலனாகச் செயல்பட வேண்டியது வெற்றிபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தலையாயக் கடமையாகும்.
சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் பல்வேறு அடிப்படை வசதிகளான பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்டவற்றுக்காகஏங்கிக் கிடக்கும் கிராமங்கள் இன்னும் ஏராளம்.அதேபோல் நகர்ப்புறங்களை எடுத்துக்கொண்டால் மாநகராட்சிப் பகுதிகளிலேயேகூட பல இடங்களில் பள்ளிக் கட்டடங்களின் நிலைமை படுமோசமாகக் காட்சியளிக்கின்றன. நகரமைப்பு மற்றும் திட்டம் என்பது ஒருசிலருக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பயணிகளின் நிலைமை வெளியில் சொல்ல முடியவில்லை. மாநகராட்சிப் பகுதியிலேயே இப்படி என்றால் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளின் நிலைமையை விளக்கத் தேவையில்லை
.
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்' என்ற கீதையின் வரிகளுக்கு ஏற்ப தற்போது மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் தங்களின் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அடுத்த தலைமுறையினருக்கான இலக்கு என்ன என்பதை உணர்ந்து திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டவேண்டும். விலைமதிப்பில்லாத வாக்குகளை நம்பி அளித்த மக்களின் தேவையை உணர்ந்தும், அவர்களின் பிரச்னைகளுக்கு முன்நின்று சேவையாற்றுவதை ஒரு வரமாகக் கருதியும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகளின் செயல்பாடு அமைய வேண்டும்.
மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை உணர்ந்து அரசியல் வாழ்க்கையைச் சேவையாகக் கருதிச் செயல்படும் உண்மை உள்ளம் கொண்டவர்களாக தற்போது வெற்றிபெற்ற பிரதிநிதிகள் மாறும்பட்சத்தில் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் தோல்வி பயம் இல்லாமல் சந்திக்கலாம். யாரும் அசைக்க முடியாத வெற்றியையும் பெறலாம்.
எனவே, மக்கள் சேவையாற்றுவதற்காக இந்த வெற்றியை ஒரு வாய்ப்பாகக் கருதி வாக்களித்தவர்களுக்கு ஊழல், லஞ்சத்துக்கு அப்பாற்பட்டு உண்மையாகச் செயல்பட்டு அரசியலைப் புனிதமாக்குவதும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தலையாயக் கடமையாகும்.
No comments:
Post a Comment