இந்தியக் குடிமக்களுள் நெற்றியில் நாமம் தீட்டிய அல்லது நீறு பூசிய எவரும் தீவிரவாத இந்து அல்லர்; நெஞ்சில் சிலுவை அணிந்த எவரும் கிருத்துவ தீவிரவாதி அல்லர். ஆனால், தொப்பி அணிந்து தாடி வளர்த்திருந்தால் அவர் 'முஸ்லிம் தீவிரவாதி' என்பதை நமது தொலைக்காட்சி/அச்சு ஊடகங்கள் தீர்மானித்து வைத்திருக்கின்றன. குறைந்த பட்சம் முஸ்லிம் பெயர் ஒருவருக்கு இருந்தால் மட்டும் போதும்; அவர் தீவிரவாதி என அடையாளப்படுத்துவதற்கு எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன என்பதுபோல் நமது பெரும்பாலான ஊடகங்கள் செயல்படுகின்றன.
பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் 'அதிபயங்கரமான ஐம்பது முஸ்லிம் தீவிரவாதிகள்' பட்டியல் ஒன்றை அண்மையில் நமது உள்துறை அமைச்சகம் தயாரித்தது. அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து, "இவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டது.
நமது ஊடகங்களுக்கு இதைவிட வேறு தீனி வேண்டுமா? பேனைப் பெருச்சாளியாக்கி, நம் நாட்டின் எல்லா மொழி ஊடகங்களும் அதை எழுதித் தள்ளின
பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருந்த வாஜுல் கமர் கான் என்பவர், இந்தியாவின் மும்பையை அடுத்துள்ள தானேவில்தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை சில நடுநிலை ஊடகங்கள் மூலம் வெளிவந்தது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "... சிறிய தவறு நடந்துவிட்டது. இத்தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்" என்று பெருந்தன்மையாக அறிவித்தார்.
அடுத்த சில நாட்களில் இரண்டாவது 'சிறிய தவறு' வெளிவந்தது. அதே 'அதிபயங்கரமானவர்களின் பட்டியலில்' 24ஆவது ஆளாக இருக்கும் இன்னொரு தீவிரவாதியான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில்தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமானது. முதல் தீவிரவாதியான வாஜுல் கமர் கான் என்பவராவது தானேவில் வசிக்கும் சாதாரண இந்திய முஸ்லிம். இரண்டாமவரான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் என்பவர் ஏற்கனவே 1993இல் மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு வழக்கில் 'சேர்க்கப்பட்டு'க் கடந்த 2010 பிப்ரவரி மாதம் கைதாகிச் சிறையில் இருப்பவர். http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/india/29563936_1_arthur-road-jail-mumbai-jail-special-tada-court
மும்பை (ஆர்தர் சாலை) சிறையில் இருக்கும் ஃபெரோஸ் கானுக்கு எதிராக இண்டர்போலில் புகார் செய்து "தேடப்படும் குற்றவாளி" ஃபெரோஸ் கானுக்கு எதிராக ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு ஏறத்தாழ இரண்டாண்டுக்கும் மேலாக உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது நமது புலனாய்வுத்துறை. அது மட்டுமின்றி, மும்பைச் சிறையிலிருக்கும் ஃபெரோஸைப் பாகிஸ்தானில் 'பதுங்கி'க் கொண்டிருப்பதாகவும், இந்தத் தீவிரவாதியைப் பிடிப்பதற்குப் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சுமத்தியும் வந்தது.
நமது நடு(!)நிலை ஊடகங்கள் பலவும் 'தேடப்படும் முஸ்லிம் தீவிரவாதி'களைப் பற்றித் தலைப்புச் செய்தி போட்டுத் தங்களது சேவையைச் செவ்வனே செய்தன.
ஏறத்தாழ இதேபோன்று ஒரு செய்தியை, சன் குழுமத்தின் நம்பர் ஒன்(?) மாலை இதழான 'தமிழ் முரசு' கடந்த 23.11.2011இல் தலைப்பாக்கி வெளியிட்டது.
தலைப்பு: "8 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த தீவிரவாத இயக்கத் தலைவர் கைது!" http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943
அதிரையைச் சேர்ந்த, தவ்ஃபீக்கைக் காவல்துறை 8 ஆண்டுகளாகத் தேடி வந்ததாகத் தலைப்பில் மட்டுமின்றி செய்தியின் உள்ளேயும் அழுத்தம் திருத்தமாக தமிழ் முரசு நாளிதழ் கூறியுள்ளது. காணொளியாக சன் தொலைக்காட்சியில் செய்தியும் சொல்லப்பட்டது.
தமிழ் முரசு நாளிதழின் இதே செய்தியை அதே "8 ஆண்டுகள் ..." தலைப்பிட்டு நெல்லை ஆன்லைன், தன் செய்தியைப் போன்று அப்படியே வாந்தி எடுத்துப் பதித்துள்ளது. http://nellaionline.net/view/32_24021/20111123164224.html
இதே செய்தியை தி ஹிண்டுவும் ஆங்கிலத்தில் செய்தி வெளியிட்டது. http://www.thehindu.com/news/states/other-states/article2651009.ece?homepage=true பொடா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் இந்து நாளிதழ் மற்றொரு இடத்தில் 2008ஆம் ஆண்டு தவ்ஃபீக் பிணையில் வெளிவந்ததாகவும் கூறுகிறது. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் பிணையில் வெளிவருவது சுலபம் அல்ல என்பது இந்து நாளிதழுக்குத் தெரியாததன்று. பின் எந்த வழக்கில் அவர் பிணையில் வந்தார் என்பதையும், அவர்மீது போடப்பட்ட பொடா சட்டத்தின் நிலை என்னவாயிற்று என்பதையும் இந்து நாளிதழ் அறிந்து கொள்ள விரும்பவில்லை.
8 ஆண்டுகள் தவ்ஃபீக்கைத் தேடியதில் என்னதான் சிக்கல்?
கடந்த 2.12.2002இல் மும்பையின் அம்ருத் நகரிலிருந்து காட்கோபர் இரயில் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் வெடிகுண்டு வெடித்து இருவர் பலியாயினர்; 49 பேர் காயமடைந்தனர். சுறுசுறு(!)ப்புக்குப் பேர்போன மும்பைக் காவல்துறை உடனடியாக, மும்பை ஜேஜே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் முஹம்மது அப்துல் மத்தீன், ஷேக் முஹம்மது முஸம்மில், ஸாஹிர் அஹ்மது, இம்ரான் அஹ்மது கான், முஹம்மது அல்தாஃப் இஸ்மாயீல் ஆகிய ஐவரை மேற்காணும் வெடிகுண்டு வழக்கில் 'சேர்த்து' வழக்குப் பதிந்தது. ஆறாவது விசாரணைக் கைதியான ஸையித் காஜா யூனுஸ், காவல்துறை கஸ்ட்-அடியில் மரணமடைந்தார். பதறிப்போன மும்பைக் காவல்துறை, ஹைதராபாத் என்கவுண்ட்டரில் நவம்பர் 2002இல் போட்டுத் தள்ளப்பட்ட ஸையித் அஸீஸ் (எ) இம்ரானையும் தமிழ்நாட்டின் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தவ்ஃபீக்கையும் இந்த வழக்கில் 'சேர்த்து' அடுத்த வாரம் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தது. மேலும், இவர்கள் அனைவரும் ஜெய்ஷே முஹம்மது, அல் காயிதா, லஷ்கரே தொய்பா, சிமி ஆகிய தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் என்பதாக வழக்கை ஜோடித்தது மும்பை காவல்துறை. http://articles.timesofindia.indiatimes.com/2003-04-10/mumbai/27270630_1_imran-rehman-khan-supplementary-chargesheet-mohammed-abdul-mateen
பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது.
குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும், 11.6.2005இல் 'அப்பாவிகள்' எனத் தீர்ப்பளித்து நீதிமன்றம் விடுதலை செய்தது. அத்துடன் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிபதி அஷோக் பங்காலே, "இந்த வழக்கு அரசுத் தரப்பால் கட்டியெழுப்பப்பட்டது" என்று குட்டும் வைத்தார். http://www.milligazette.com/Archives/2005/01-15July05-Print-Edition/011507200529.htm
இந்த வழக்கில் தவ்ஃபீக்கின் தொடர்பு என்ன?
கடந்த 2002ஆம் ஆண்டு கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்பது டெட்டனேட்டர்களைக் காவல்துறையினர் 'கண்டு' எடுத்தனர். அவற்றை மறைத்து வைத்திருந்ததாகக் கூறி, தவ்ஃபீக்கை 26 நவம்பர் 2002இல் கைது செய்து சிறையில் அடைத்து, மூன்று நாள்கள் கழித்து, 29 நவம்பர் 2002இல் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் தவ்ஃபீக்கைக் காவல்துறை விசாரணைக் கைதியாக (வழக்கு எண் 681/2002) சிறையில் அடைத்தது. இச்செய்தியும் வழக்கம்போல் எல்லா ஊடகங்களிலும் வெளியானது.
நவம்பர் 26இல் சென்னைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருந்த தவ்ஃபீக்கை, டிஸம்பர் 2இல் நடந்த காட்கோபர் பேருந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக மும்பைக் காவல் துறை குற்றம் சுமத்தி, தன் வழக்கில் புத்திசாலித் தனமாகச் 'சேர்த்து'க் கொண்டது.
2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தவ்ஃபீக், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டார். http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/SE/179/AC179CANDIDATE.htm
பின்னர், கொடுங்கையூர் வழக்கு பிசுபிசுத்துப்போய் பிணையில் வெளிவந்தார் தவ்ஃபீக். என்றாலும் அவ்வப்போது முக்கிய அரசியல் தலைவர்கள் சென்னைக்கு வரும்போது தவ்ஃபீக்கைக் காவல்துறையினர் அழைத்துப் போய் சிறையில் வைத்திருந்து வெளியே விடுவது 2008வரை வழக்கமாகவே இருந்து வந்தது.
அவ்வப்போது நமது புலனாய்வு(!) எழுத்தாளர்கள் சிலர், தவ்ஃபீக்கை சர்வதேச பயங்கரவாதி என்பதுபோல் சித்தரிப்பது தொடர்ந்தது.
இரா. சரவணன் என்பவர் ஜூவியின் 25.5.2008 பதிப்பில் "டென்ஷனில் தமிழகம்! டேஞ்சரஸ் தவ்பீக்..." என்று தலைப்பிட்டு நல்ல கற்பனை வளத்துடன் ஒரு கட்டுரை எழுதினார்.
அவருடைய கற்பனை வளத்துக்குச் சான்றான பகுதி:
"ஜெய்ப்பூரிலும், சென்னையிலும் ஒரே சமயத்தில் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் சென்னை தப்பியிருக்கிறது. ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புக்கும் தவ்பீக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினரின் மெயில் மிரட்டலில் 'டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களையும் தகர்ப்போம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் தன் மீது கண் பதித்திருந்ததால்தான் தவ்பீக்கால் சென்னையைத் தகர்க்கும் அசைன்மென்ட்டை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. (ஜூனியர் விகடன் 25-5-2008 இதழிலிருந்து).
இந்தப் பதிவுக்குப் பின்னர் ஜூவியைத் தொடர்பு கொண்டு தவ்ஃபீக்கைப் பற்றி உண்மைக்கு மாற்றமாக எழுதியதை அவருடைய குடும்பத்தார் விசாரித்தபோது, தவ்ஃபீக்கின் குடும்பத்தினரின் கருத்துகளையும் உண்மை அறியும் குழுத் தலைவரும் வழக்கறிஞருமான மனோகரனின் கருத்துகளைப் பெற்று, மூன்று மாதத்துக்குப் பின்னர் ஜூவி வெளியிட்டது. அதில், சர்வதேச மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகிறார்:
'என்னை என்கவுன்ட்டர் செய்ய முயன்றால், தமிழகத்தையே குண்டு வைத்துத் தகர்ப்பேன்' என்று தவுபீக் சொன்னதாகச் சொல்கிறார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தப் பட்ட தவுபீக், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தார். உளவுத்துறை, அவரைத் தங்களின் உளவாளியாக மாறச்சொல்லி நெருக்கடி கொடுத்தது. இதை எதிர்த்த காரணத்துக்காக, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் அவரை சம்பந்தப்படுத்தியதுடன், இந்துத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், சுற்றி வளைத்தபோது தப்பிவிட்டதாகவும் கதை கட்டியிருக்கிறார்கள். http://adiraixpress.blogspot.com/2008/08/blog-post_4794.html
கடந்த 2008 மே மாதம் 17இல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் 13.5.2008இல் ஜெய்ப்பூரின் 9 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. பத்தாவது குண்டைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்புகளில் அப்பாவிகள் 63 பலியாயினர்; 216 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக மும்பையைச் சேர்ந்த விஜய் என்பவனை முதன்முதலாகக் காவல் துறை கைது செய்தது. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=1618&Itemid=54
வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தால் தனக்கு 1 லட்சம் ரூபாய் தருவதாக ஆசைகாட்டி மீனா எனும் பெயருடைய பெண் கூறியதாகக் காவல்துறையினர் விஜயிடமிருந்து வாக்குமூலம் 'வாங்கினர்'. தொடர்ந்து மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர். http://tamil.oneindia.in/news/2008/05/14/india-60-killed-150-injured-as-terror-strikes-raja.html
ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புக்கு ஆர் டி எக்ஸ் எனும் சக்தி வாய்ந்த வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆர் டி எக்ஸ் என்பது இராணுவத்தில் பயன்படுத்தப்படுவது. நமது இராணுவத்துக்குச் சொந்தமான ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளில் பெரும்பகுதி, முன்னாள் இராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் மூலம் கடத்தப்பட்டு சங் பரிவாருக்கு சப்ளை செய்யப்பட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். http://www.satyamargam.com/1096
மும்பை மாலேகான் ஸ்கூட்டர் குண்டு வெடிப்பில் சங் பரிவாரின் சாமியாரிணி சாத்வீ ப்ரக்யா சிங் தாகூரோடு முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப்பட்டனர். http://www.satyamargam.com/1078
இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு மூலகாரணமாக சங்பரிவாரங்களும் சாதுக்களும் சாமியார்களுமே இருக்கிறார்கள் என்று நிரூபனமான பிறகும் ஊடகங்களுக்கு மட்டும் இந்திய முஸ்லிம்கள் மீதான வன்மம் ஓயவில்லை! காவல்துறைக்கும் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து இன்ஃபர்மர்களாக மாற்றும் திட்டம் மாறவில்லை.
சென்னையில் தங்கியிருந்து கொண்டு 2008 மே மாத இறுதியில் குமுதம் ரிப்போர்ட்டருக்குப் பேட்டி கொடுத்த தவ்ஃபீக், ஜெய்ப்பூருக்குப் போய் குண்டு வைத்ததாகத் தமிழகக் காவல்துறை கதை புனைந்தது. பின்னர், அவரைத் தங்களுக்கு உளவு சொல்பவராக மாற்ற முயற்சி செய்தது. அவர் மறுக்கவே, என்கவுண்டரில் போட்டுத் தள்ள அப்போதைய காவல்துறை முயன்றது. இதை தவ்ஃபீக் கூறுகிறார்:
எனது வக்கீல் சந்திரசேகரின் பெசண்ட் நகர் வீட்டுக்கு இரவு ஏழு மணிக்குப் போனேன். அவர் வீட்டில் நான் போய்ச் சேர்ந்த பத்து நிமிடத்தில் அவருக்கு ஒரு போலீஸ் நண்பர் போன் செய்திருக்கிறார். வழக்குரைஞரின் முகமே வியர்த்துவிட்டது. என்னிடம் திரும்பியவர், `ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷல் டீம் எனது வீட்டை நோட்டம் விடுவதாகச் சொல்கிறார். யாரைச் சொல்கிறார்?' என்று கேட்டார். நான் இரண்டு நாளைக்கு முன்பு நடந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரும் தனது ஜூனியர்களை வெளியில் அனுப்பி பார்த்து வரச் சொன்னார். ஒரு ஆம்னி வேன், பைக் ஆகியவற்றில் மஃப்டி போலீஸார் இருந்தனர். அந்த நேரத்தில் தெருவில் லைட் ஆஃப் ஆனது. வக்கீல் வீட்டில் மட்டும் லைட் எரிந்தது. உடனே எனது இயக்கத்தவர்களுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் ஒரு முப்பது பேர், ஜூனியர் வக்கீல்கள் எனத் திரண்டு வந்து என்னைத் தப்ப வைத்தனர். http://adiraixpress.blogspot.com/2008/05/blog-post_2465.html / http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-25/pg4.php
"எங்களுக்கு உளவு சொல்; இல்லையென்றால் நீ காலி" என மிரட்டிய காவல்துறையிடமிருந்து தப்பி, கடந்த மூன்றாண்டு காலமாக தலைமறைவு வாழ்க்கை நடத்திய தவ்ஃபீக் பட்ட துன்பங்கள் போதும்.
தவ்ஃபீக்கின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு முறையான நேர்மையான விசாரணை நடைபெறவேண்டும். அதுவும் விரைந்து நடைபெறவேண்டும். அப்போது நீதி நிலைபெறும். அதுவரை, "8 ஆண்டுகள் தேடப்பட்ட..." கதை சொல்லும் ஊடகங்கள் அடக்கி வாசிக்கட்டும்.
2003ஆம் ஆண்டு காட்கோபரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை 1999ஆம் ஆண்டு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டு தமிழ் முரசு நாளிதழ் தன்னுடைய அரைவேக்காட்டுத் தனத்தை வெளிப்படுத்தியது.
ஊடகங்களில் செயல்பாடுகளை அண்மையில்தான் பிரஸ் கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கண்டித்திருந்தார். பதவியில் இருக்கும் நீதிபதிகளின் தீர்ப்பையே மதிக்காத ஊடகங்கள் வழக்கம் போலவே கட்ஜுவின் கண்டிப்பை பெரிதுபடுத்தவில்லை.
குடிமக்களே செய்தியாளர்களாக மாறியுள்ள சூழலில் இத்தகைய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தால் மக்களின் நம்பிக்கையை இவை இழக்க நேரிடும் என்பதைச் சொல்லி வைக்கிறோம்.
முன்பு தௌபீக் மீது புனையப்பட்ட பல கேஸ்களில் மும்பை காட்கோபர்-ல் பஸ்ஸில் குண்டு வைத்ததாக புனையப்பட்ட கேசும் ஓன்று. அதில் முக்கிய சாட்சி அந்த பஸ்ஸின் கண்டக்டர். அவரிடம் குறுக்கு விசாரணை செய்த டிபென்ஸ் லாயர் திரு மஜீத் மேமன் : "நீங்கள் தௌபீக் -ஐ எங்கு கண்டீர்கள்?
கண்டக்டர் : "ஒரு பையை வைத்துவிட்டு அவசரமாக வெளியே இறங்கினார்"
திரு மஜீத் மேமன் "எப்பொழுது வெடித்தது"
கண்டக்டர் : "ஒரு சில நொடிகளில்"
இப்பொழுது ஜட்ஜின் பக்கம் திரும்பிய திரு மஜீத் மேமன் : "யூஆர் ஆனர், இங்கு கண்டக்டர் குறிப்பிட்ட நாள், நேரம் மாதத்திற்கு பல வாரங்களுக்கு முன்பாகவே வேறொரு கேசில் குற்றம் சாட்டப்பட்ட தௌபீக் சென்னை ஜுடிசியல் கஸ்டடி-ல் ரிமான்ட் செய்யப்பட்டு உள்ளே இருக்கிறார்" என்று சொல்லிவிட்டு நான் கொண்டு சென்றிருந்த டாகுமென்ட் களையும் ஜட்ஜின் பார்வைக்கு சமர்பித்தார்.
அதை நன்றாக பார்த்து பரிசீலனை செய்தபின் அதை ஆமோதித்து தலை அசைத்து திரு மஜீத் மேமனைப்பார்த்தார்.
இப்பொழுது மஜீத் மேமன் சொன்னது ஒட்டு மொத்த கோர்ட் வளாகத்தையும் சிரிப்பொலியால் அதிரவைத்தது.
"யு ஆர் ஆனர், இப்படி சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்த என் கட்சிக்காரர் பலமான கம்பிகளை வளைத்து பல நூறு கிலோ மீட்டர் பறந்து வந்து இந்த வெடிப்பை ஏற்படுத்திவிட்டு மீண்டும் பறந்து சென்று சிறைக்கம்பிகளுக்குள் புகுந்து கொண்டார் என்று என் கட்சிக்காரரை சூப்பர் மேன் அளவுக்கு உயர்த்துவதை என்னால் நம்பமுடியவில்லை" என்று சொன்னதை ஜட்ஜ் உள்வாங்கிக் கொண்டு இலேசாக உடல் குலுங்க சிரித்துவிட்டார். அதே நேரம் கண்டக்டர் பம்பாய் போலீஸ் அதிகாரிகளை பார்த்தவிதம் "உங்களை எல்லாம் ............ டா" என்பதுபோல் இருந்தது.
கூடுதல் தகவல்களுக்கு 2008ஆம் ஆண்டு மே மாதம்
தவ்ஃபீக்கின் குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டி:
http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-25/pg4.php
http://adiraixpress.blogspot.com/2008/05/blog-post_2465.html
Thanks to: adiraixpress.blogspot.com & Brother Jamil M. Salih
No comments:
Post a Comment