Latest News

மதக்கலவர தடுப்புச் சட்டமும் மதவாதிகளின் சலசலப்பும்!

மதக் கலவரத்தைத் தடுக்க, வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்பு மசோதா கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது மாநில அரசின் சுயாட்சியை பறிக்கும் வகையில் உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆரம்பத்திலேயே எதிர்க்க தொடங்கினார். அதுமட்டுமன்றி காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களுக்கு இச்சட்டத்தை எதிர்க்குமாறு கடிதமும் எழுதினார். ஜெயலலிதாவின் வழியில் 10 மாநில முதல்வர்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதோடு பாஜக, இந்துமுன்னணி என எல்லாப்பெயரிலும் இயங்கும் இந்துத்துவா அமைப்புகள இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. இந்துத்துவாக்களின் இந்த எதிர்ப்புணர்வே நாட்டில் மதக்கலவரங்களை செய்பவர்கள் தாங்கள் தான் என ஒப்புக்கொள்ளும் வகையில் உள்ளது. இந்நிலையில், இம்மசோதா, "தேவையானது தானா, தேவையில்லையா' என்பது குறித்து, தர்ம ரக்ஷன சமிதியின், தர்மம் காக்கும் வழக்கறிஞர்கள் பிரிவின் சார்பில், சென்னையில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் தலைமை வகித்து துவங்கி வைத்த, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் ஜோகிந்தர் சிங்,

''மத்திய அரசு கொண்டுவரவுள்ள வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்பு மசோதா தேவையில்லை. இருக்கும் சட்டத்தில், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குத் தகுந்த பாதுகாப்பு இருக்கிறது. இந்நாட்டில், முஸ்லிம்களை சிறுபான்மையினர் என்று சொல்ல முடியாது. அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளது. நாட்டின் உயரிய பதவிகளில் இருந்துள்ளனர். ஜனாதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், அரசு உயர் பதவிகளிலும், திரைப்படத் துறை, விளையாட்டு துறை என, பல துறைகளில் முக்கிய பதவிகளிலும் இருந்துள்ளனர். இருந்தும் வருகின்றனர். எல்லோராலும் சகோதரர்களாகப் பாவிக்கப்படுகின்றனர். இவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சொல்ல முடியாது'' என்று பேசியுள்ளார்.

ஒரு முன்னாள் சி.பி.ஐ.யின் இயக்குனரின் மேற்கண்ட பேச்சை ஊன்றி கவனித்தால் அவரில் மறைந்திருக்கும் காவி பளிச்சென வெளிப்படுவதைக் காணலாம். இப்படிப்பட்டவர் சி.பி.ஐ.யில் பணியில் இருக்கும் போது, முஸ்லிம்கள் தங்களின் பாதிப்பிற்காக சி.பி.ஐ. விசாரணை கோரினால் கூட நீதி கிடைக்காது என்பதே உண்மை. இவரது கூற்றுப்படி , ''ஜனாதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், அரசு உயர் பதவிகளிலும், திரைப்படத் துறை, விளையாட்டு துறை என, பல துறைகளில் முக்கிய பதவிகளிலும் இருந்துள்ளனர். இருந்தும் வருகின்றனர் என்பதால் மட்டும் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது சரியா? முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால், சுதந்திர இந்தியாவில் இனக்கலவரத்தால் இன்னுயிரை ஈந்தவர்கள் 90 சதவிகிதம் முஸ்லிம்களாக இருப்பது எப்படி? ஒரு மாநிலத்தின் முதல்வரே முஸ்லிம்களை கருவறுக்கும் இந்துத்துவாக்களை கண்டுகொள்ளாதீர்கள் என்று கட்டளையிட்டதையும், அதனால் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட, கற்பழிக்கப்பட்ட, அனாதையாக்கப்பட்ட, சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக்கப்பட்ட வரலாறு ஒரு முன்னாள் சி.பி. ஐ. இயக்குனருக்கு தெரியவில்லை என்றால், இவரால் இயக்கப்பட்ட சி.பி.ஐயின் கடந்த கால செயல்பாட்டை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அடுத்து இந்நிகழ்ச்சியில் பேசியுள்ள ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட் நீதிபதி கே.டி.தாமஸ், சுதந்திரத்திற்கு முன், இந்தியா பல மாகாணங்களாகப் பிரிந்து கிடந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, கஷ்டப்பட்டு அனைத்தையும் ஒன்றிணைத்து, ஒரே இந்தியாவாக ஆக்கியிருக்கிறோம். இப்புதிய மசோதா சட்டமானால், சதந்திரத்திற்கு முன்பு இருந்த மாதிரி, இந்தியா பல மாகாணங்களாகி விடக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு விடும். சிறுபான்மையினர், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு, தற்போதைய சட்டமே போதுமானது'' என்று பேசியுள்ளார்.

மதக்கலவர தடுப்பு சட்டம் வருவதால், மதத் தீவிரவாதிகள் அவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் அடக்கப்படுவார்கள். இதன் மூலம் நாட்டில் அமைதி
ஏற்படும் என்ற நிலையிருக்க, இந்த மசோதா நிறைவேற்றப் பட்டால் நாடு துண்டாகும் என்று ஒரு முன்னாள் நீதிபதியே பேசுவது ஆச்சர்யம் தானே! மேலும் இப்போதுள்ள சட்டமே சிறுபான்மை மக்களுக்கு போதுமானது என்று கூறும் இவர், இப்போதுள்ள சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களை கருவறுத்த எத்தனை தீவிரவாதிகளுக்கு இவரது பதவிக் காலத்தில் தண்டனை கொடுத்தார்? எல்லாம் முடிந்த பின்னால் கண்துடைப்பு தீர்ப்பு தானே இன்றைக்கு பெரும்பாலான நீதிபதிகளால் வழங்கப்படுகிறது. இது இந்த முன்னாள் நீதிபதி அறியாத ஒன்றா?

அடுத்து, பேசிய தர்ம ரக்ஷன சமிதி துணைத் தலைவர் குருமூர்த்தி, ""தேசிய ஆலோசனைக் குழுவின் இணையதளத்தில், மதக்கலவரம் குறித்த சில அறிக்கை விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்தால் யாரால், எத்தகைய சம்பவங்கள், எந்தெந்த வகையில் நிகழ்ந்துள்ளன என்று தெரியும். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால், யார் கலவரங்களைத் தூண்டினார்களோ அவர்களுக்கே இம்மசோதா பாதுகாப்பானதாக அமைந்துவிடும்'' என்கிறார்.

அய்யா! குருமூர்த்தி அவர்களே! இணையதளத்தை பார்ப்பது ஒரு புறமிருக்கட்டும். சுதந்திர இந்தியாவில் யாரால், எங்கே, எப்போது, எப்படி இனக்கலவரம் நடந்தது? அதில் அதிகம் பாதிக்கப்பட்ட சமுதாயம் எது என்ற ஒரு கலந்துரையாடலுக்கு நீங்கள் தயாரா? மேலும், இப்போது இருக்கும் சட்டமே போதும் என்று இப்போது கொக்கரிக்கும் இவர்கள், சிறுபான்மையினரை குறிவைத்து கொண்டுவரப்பட்ட தடா மற்றும் பொடா சட்டங்களை கண்டு கொள்ளாமல் இருந்தார்களே! இதைத்தான் தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பார்களோ?

மேலும், மத்திய அரசுக்கு நாம் வேண்டுகோள் விடுப்பது என்னவெனில், இதுபோன்ற சலசலப்பை கண்டு சட்டத்தை கிடப்பில் போட்டுவிடாமல், விரைவாக இந்த சட்டம் கொண்டுவர ஆவன செய்யவேண்டும். அதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காக்க அரசு முன் வரவேண்டும் என்பதுதான்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.