எம். மணிகண்டன்
கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மாத்திரமல்ல, அது மயக்கும் களியாட்டம். அந்தக் களியாட்டத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். இதைச் சாதுர்யமாகப் பணமாக்கிக் கொண்டிருக்கிறது பிசிசிஐ.கடந்த சில ஆண்டுகளாக உலகக் கிரிக்கெட்டும் இந்தியர்களின் கையில்தான் இருக்கிறது என்பதால் பிசிசிஐயின் வருமானத்துக்குக் குறைச்சல் இல்லை.
ஒருபக்கம் அன்னியச் செலாவணி மோசடி, வரி ஏய்ப்பு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பிசிசிஐ மீது எழுகின்றன.இன்னொருபக்கம் கிரிக்கெட் வீரர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதா, பாரத ரத்னா கொடுப்பதா என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.இந்தியக் கிரிக்கெட் அணி போட்டியில் பங்கேற்கிறது என்றால் நடு இரவானாலும் பல கோடிபேர் டி.வி. முன் உட்கார்ந்திருப்பதை இன்னமும் பார்க்க முடிகிறது. இதுதான் கிரிக்கெட். இதுதான் இந்தியா.தோனியும் சச்சினும் குளிர்பான விளம்பரத்தில் வந்துவிட்டால் அது நஞ்சேயானாலும் வாங்கிக் குடித்துவிடுவதற்கு இந்திய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் இளைஞர்களுக்கு ரோல் மாடலாகக் காட்டிக் கொள்ளும் தோனி, ஹர்பஜன் போன்றோர் மதுபான விளம்பரங்களில் துணிச்சலாக நடிக்கிறார்கள். தேவைப்பட்டால், அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்காகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.பிறகு மீண்டும் மைதானத்தில் குலாவிக் கொள்கிறார்கள்...
ஆனால், கிரிக்கெட் ரசிகர்கள் இதையெல்லாம் பொருள்படுத்துவதில்லை. அந்த அளவுக்கு கிரிக்கெட் நம்மை மயக்கி வைத்திருக்கிறது.எதற்கெடுத்தாலும் இந்தியா என்கிற பெயரைப் பயன்படுத்தும் பிசிசிஐ, ஏதாவது சிக்கல் என்றால் மட்டும், தான் ஒரு தனியார் அமைப்பு என்பதை நினைவூட்டுகிறது.ஒரு நிறுவனம் என்கிற வகையில் கட்டுப்படுத்தாலாமே தவிர, அதன் நடவடிக்கைகளில் இந்திய அரசு தலையிட முடியாது. கணக்கு வழக்குகளைப் பொதுவில் வெளியிட வேண்டும் என்றும் கோர முடியாது.அரசு நிதியுதவியைப் பெறவில்லை என்பதால், தகவல் அறியும் உரிமைச் சட்டமும் பிசிசிஐயிடம் செல்லுபடியாகாது என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் மூலம் பல ஆயிரம் கோடிகளைக் குவித்திருக்கிறது பிசிசிஐ. அன்னியச் செலாவணி மோசடி குற்றச்சாட்டு அந்த அமைப்பின் மீது இருக்கிறது.
ஆனால், காமன்வெல்த் போட்டியில் விரைந்து செயல்பட்ட சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு போன்ற அமைப்புகள் ஐபிஎல் மோசடிகள் தொடர்பாக அதிரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே, ஏன்? காரணம் இருக்கிறது.மாபெரும் ஊழல்கள் தொடங்குவதே அரசியல்வாதிகளுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் இடையில் உருவாகும் கள்ளத்தனமான தொடர்பில்தான் என்று கூறினால் யாரும் மறுக்க மாட்டார்கள்.பிசிசிஐ என்பதும் பெரு நிறுவனம்தான்.
உலகத்திலேயே அதிகம் சம்பாதிக்கும் இரண்டாவது பெரிய விளையாட்டு அமைப்பு. இந்த அமைப்பை அரசியல்வாதிகள் பலர் ஆக்கிரமித்திருப்பதுதான் பிசிசிஐயின் மறைமுகச் செல்வாக்குக்கும் மோசடிகள் மறைக்கப்படுவதற்கும் காரண ம்.விளையாட்டு அமைப்புகளின், அதிலும் குறிப்பாக பிசிசிஐயின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் தேசிய விளையாட்டு மேம்பாட்டு மசோதாவை மத்திய விளையாட்டு அமைச்சகம் உருவாக்கியது. விளையாட்டு அமைப்புகள் அனைத்தையும் ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டுவருவது இதன் முக்கிய அம்சமாகும்.விளையாட்டு அமைப்புகளில் 70 வயதுக்கு மேற்பட்டோர் பதவி வகிக்க முடியாது, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது என்பன உள்ளிட்ட பல விதிமுறைகளை இந்த மசோதா வரையறுத்திருக்கிறது.இந்த மசோதா சட்டமானால், பிசிசிஐ மட்டுமல்ல, இந்திய ஒலிம்பிக் சங்கம், தட கள சம்மேளனம், வில்வித்தை சம்மேளனம் போன்றவற்றில் 80 சதவீதம் பேருக்குப் பதவி போய்விடும்.அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட அரசுப் பதவி வகிப்பவர்கள் எந்த விளையாட்டு அமைப்பிலும் பதவி வகிக்க முடியாது
. ஒரே வாக்கியத்தில் கூறுவதென்றால், விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தை ஒழிக்கும் மசோதா இது.இது போதாதா பிசிசிஐ உள்ளிட்ட அமைப்புகளும் அதில் பதவி வகிக்கும் அரசியல்வாதிகளும் பொங்கி எழுவதற்கு? இந்த மசோதா அமைச்சரவையில் விவாதத்துக்கு வந்தபோது, அமைச்சர்கள் சரத்பவார், பரூக் அப்துல்லா, விலாஸ் ராவ் தேஷ்முக் ஆகியோர் கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.மூன்று பேரும் கிரிக்கெட் அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை இங்கே நினைவூட்டியாக வேண்டும்.
இவர்களின் எதிர்ப்பால், மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டது.லோக்பால் மசோதா, மகளிர் மசோதாபோல விளையாட்டு மேம்பாட்டு மசோதாவும் தங்களது பரந்துபட்ட அதிகாரத்தைப் பறிக்கும் என்பதுதான் அவர்களது எதிர்ப்புக்குக் காரணமேயன்றி விளையாட்டின் மீதான அக்கறை காரணமாக இருக்க முடியாது.விளையாட்டுகளை மேம்படுத்துவதுடன், அவற்றைக் கொண்டு நடைபெறும் ஊழலையும் ஒழிக்க வேண்டுமானால், இந்த எதிர்ப்புகளையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால், நமது நாட்டின் பெயரைப் பயன்படுத்த பிசிசிஐ உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.
No comments:
Post a Comment