Latest News

தலையங்கம்: யோசிக்க வேண்டிய பிரச்னை!

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு முழுமையாக நடந்து முடிந்த பின்னர் சுமார் 53,404 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 52,615 இடங்கள் தனியார் கல்லூரிகளுக்கானவை. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் என்றாலும், நிகழாண்டில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் கருத வேண்டியுள்ளது. புதிதாக 30-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் நிகழாண்டில் தொடங்கப்பட்டுள்ளன.

 பெரும்பாலான புதிய கல்லூரிகள் அரசுக்கு மொத்த இடங்களையும் வழங்கி, கலந்தாய்வில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மாணவர்களையும் சேர்த்துக்கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டும்கூட, மாணவர்கள் விரும்பாததால் இத்தனை இடங்கள் காலியாக உள்ளன. 1.26 லட்சம் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். அதில் 38,897 பேர் கலந்தாய்வுக்கே வரவில்லை. இந்த நிலைமை ஏற்பட என்ன காரணம்? தாங்கள் சேர விரும்பிய கல்லூரிகளில், படிக்க விரும்பிய பாடத்திட்டத்தில் இடம் காலியில்லை என்பதை இணைய தளத்தில் அறிந்துகொண்டு, கலந்தாய்வுக்கு வராமல் இருந்துவிடுகிறார்கள்...

 கலந்தாய்வின் முடிவில் 53,404 இடங்கள் காலியாக இருக்கிறதென்றால், ஒட்டுமொத்தமாக அனுமதிக்கப்பட்ட இடங்களில் காலியாக உள்ளதைக் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்த நிலைமை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்ற கல்வியாண்டிலும்கூடப் பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகள், 464 தனியார் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மொத்தம் 1,95,324 இடங்களில், 1,62,231 இடங்கள் மட்டுமே பூர்த்தியாகின. 33,093 இடங்களில் காலியாக இருந்தன. இதில் தனியார் கல்லூரிகளுக்கான இடங்கள் 32,537. இந்த ஆண்டு நிலைமை மேலும் மோசமாகி இருக்கிறது. இதற்குக் காரணம் கல்லூரிகள் அதிகரித்தாலும்கூட அவையெல்லாம் தரமான கல்லூரிகளாக இல்லாமல் இருப்பதுதான். மாணவர்களும் பெற்றோரும் தரமில்லாத கல்லூரியில் தங்கள் குழந்தைகள் படிப்பதை விரும்புவதில்லை என்பதோடு, இந்தக் கல்லூரிகளுக்கு பல லட்சம் ரூபாய் கல்விக் கட்டணத்தைக் கொட்டியழ மனமில்லாமல், கலந்தாய்வுக்கு வருவதையே தவிர்த்து விடுகின்றனர்.

 தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் இத்தனை இடங்கள் சென்ற கல்வியாண்டில் காலியாக இருந்துள்ள நிலையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) மேலும் புதிய கல்லூரிகளுக்கு ஏன் அனுமதி அளித்தது என்பது புரியாத புதிர். ஒரு நிறுவனம் முறைப்படி விண்ணப்பித்தால் அதை எப்படி நிராகரிக்க முடியும் என்கின்ற பதில் சரியில்லை. வியாபார நிறுவனத்துக்கோ, தொழிற்சாலைக்கோ வேண்டுமானால் இந்த நியாயம் சரியாக இருக்கலாம். கல்விச் சாலைகளுக்கு இது ஏற்புடைய வாதமல்ல. மாணவர்கள் சேர்ந்து பயில விரும்பாத நிலையில் அம்மாநிலத்தில் புதிய கல்லூரிகளை அனுமதிப்பதால் கல்வித் தரம் நீர்த்துப்போகும்.

 அங்கீகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முறைகேடுகள் நடக்கும். அடுத்ததாக, 2010-11 கல்வியாண்டில் அரசு மற்றும் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கிளைக் கல்லூரிகளில் 556 இடங்கள் காலியாக இருந்துள்ளன என்பது அதைவிட அநியாயமானது. இந்த இடங்களில் குறைந்த கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டது என்பதைத்தவிர, வேறு என்னவென்று சொல்வது? நடப்பாண்டிலும்கூட, அண்ணா பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் ஒன்றாக்கும் நடவடிக்கை காரணமாக, இன்னும் 788 இடங்கள் பூர்த்தியாகமல் இருக்கின்றன. இவை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடங்கள் என்று அரசு வாதிடலாம். 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி, இதனால் பாதிக்கப்படும் பொதுப்பிரிவு மாணவர்களுக்காக ஒவ்வோராண்டும் ஒவ்வொரு வகுப்பிலும் 19 விழுக்காடு இடம் அதிகரித்து வழங்குவதாக சொல்கிறார்கள். அதில் என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் தெரிவதில்லை.

 குறைந்தபட்சம் பூர்த்தியாகாத இடங்களுக்காகிலும் தகுதியுள்ள மாணவர்கள் எந்தப் பிரிவினராக இருந்தாலும் தேர்வு செய்யும் வாய்ப்பைக் கொடுத்தால் என்ன? பள்ளிக் கல்வியில் ஒவ்வொரு பள்ளியின் வசதி, கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கல்விக் கட்டணம் தீர்மானிக்கக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க அரசு ஆணையிட்டது. ஆனால் உயர்கல்வியில் எல்லா கல்லூரிகளுக்கும் ஒட்டுமொத்தமாக பொதுவான கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. பள்ளிக் கல்விக்கு ஒரு நீதி, உயர் கல்விக்கு ஒரு நீதியா? ஏன் பொறியியல் கல்லூரிகளையும் அதன் தரத்துக்கேற்ப, அக்கல்லூரி மாணவர்களின் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கட்டணத்தை நிர்ணயிக்கக்கூடாது? கல்லூரிகளின் தரத்துக்கேற்ப கட்டணம் குறைக்கப்படுமேயானால், பொறியியல் படிப்பில் இத்தனை இடங்கள் காலியாக இருக்க நேரிடாது

. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் இல்லாத நிலைமை உருவாக வேண்டுமானால், தரத்துக்கேற்ப கட்டண நிர்ணயம் தவிர்க்க முடியாதது. மேலும் பல்கலைக்கழகங்கள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் மொத்தம் 12,795 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் புதிதாக கல்லூரிகள் தொடங்குவது இயலாததாக இருக்கலாம். ஆனால், மாணவர் எண்ணிக்கை தனியார் கல்லூரிகள்போல அதிகரிக்கச் செய்ய ஏன் முயலக்கூடாது? மாணவர்களின் சேர்க்கை குறைவாக இருக்கின்ற, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் முறையாக இல்லாத பொறியியல் கல்லூரிகளில் இயற்பியல், வேதியியல், உயிர் வேதியியல் போன்ற அறிவியல் இளங்கலை, முதுகலைப் பட்ட வகுப்புகளை அனுமதிப்பதன் மூலம் பொறியியல் கல்லூரிகளின் இப்போதைய அடித்தளக் கட்டமைப்பு வசதிகளை பயனுற பயன்படுத்தலாம். எம்.பி.ஏ. போன்ற நிர்வாகவியல் படிப்புகளை சில பொறியியல் கல்லூரிகள் ஏற்கெனவே பெற்றுள்ளன. மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் தடுமாறுவதைவிட, தங்களின் இலக்கை இந்தக் கல்லூரிகள் மாற்றிக் கொள்வதுதான் அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.

Mohamed Ismail

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.