Latest News

மக்களுக்கு குறைந்த செலவில் அதிக சேவை : அரசு கேபிள் "டிவி' ஒளிபரப்பு துவக்கம்

சென்னை : தமிழ்நாடு அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையை துவக்கி வைத்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் "டிவி' சேவையை துவக்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கேபிள் "டிவி' இணைப்பு மூலம், "டிவி' நிகழ்ச்சிகளை வழங்குவதில், ஏகபோக நிலை ஏற்படுத்தப்பட்டு, அதனால் மக்களிடம் இருந்து அதிகளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தினரே, இத்தொழிலில் ஏகபோகம் அனுபவித்து, அதிக லாபம் பெற்று வருகின்றனர்...

அதனால் தான், தேர்தல் அறிக்கையில், "கேபிள் "டிவி' தொழில் உள்ள ஏகபோகத்தை தடுத்து, அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அனைத்து மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் "டிவி' இணைப்பு வழங்கப்படும்' என்றும், வாக்குறுதி அளித்திருந்தேன். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று (நேற்று) முதல், ஒளிபரப்பு சேவைகள் துவங்கப்பட்டு, தமிழக அரசு கேபிள் "டிவி' நிறுவனம், மக்களுக்கு குறைந்த செலவில் நிறைந்த சேவையை வழங்க உள்ளது.

அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மூலம், "டிவி' சேவையைப் பெறும் சந்தாதாரர்களிடம் இருந்து, மாத சந்தாவாக, 70 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும். இதனால், கேபிள் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு, 70 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும். இந்த நடவடிக்கைகளால், தமிழக மக்கள் குறைந்த கட்டணத்தில் சிறந்த கேபிள் "டிவி' இணைப்பை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

வேலூரில் நடந்த நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்சிங் மூலம் சுஜாதா சந்திரன், முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அவர் பேசும்போது, "கடந்த ஆட்சியில் கேபிள் "டிவி' இணைப்பிற்காக, 100 ரூபாயில் இருந்து, 200 ரூபாய் வரை வசூலித்தனர். இது, எங்களைப்போன்ற ஏழை, எளியவர்களுக்கு சிரமமாக இருந்தது. கேபிள் "டிவி'யை அரசுடைமையாக்கி, 70 ரூபாய் கட்டணத்தில், 90 சேனல்கள் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

வேலூர் மாவட்ட கேபிள் ஆபரேட்டர் சரவணகுமார் பேசும்போது, "எம்.எஸ்.ஓ., என்ற சர்வாதிகாரியின் பிடியில் இருந்து, எங்களை மீட்டதுடன், கட்டணச் சேனல்களின் பாதிப்பில் இருந்தும் நாங்கள் பாதுகாக்கப்பட்டதாக உணர்கிறோம். முதல்வரின் நடவடிக்கையால், கடைகோடி ஆபரேட்டர்களும் பாதுகாக்கப்படுவர். இன்றைய நாள், எங்களது வாழ்வின் பொன் நாள். கேபிள் "டிவி'யை அரசுடைமையாக்கி, ஏதேச்சதிகார அதிகார வர்க்கத்திலிருந்து எங்களை மீட்டு, கொத்தடிமைகளாக இருந்த எங்களுக்கு நீங்கள் (முதல்வர்) மறுவாழ்வு அளித்திருக்கிறீர்கள்' என்றார். நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1.45 கோடி இணைப்புகள் : தமிழகத்தில், 40 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். இவர்களில், 34 ஆயிரத்து, 344 ஆபரேட்டர்கள், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தில் இணைந்துள்ளனர். இவர்களிடம், 1 கோடியே, 45 லட்சம் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு, அரசு கேபிள் "டிவி' நிறுவனம் மூலம், நேற்று முதல், ஒளிபரப்பு சேவை துவங்கியுள்ளது. முதலில், இலவச சேனல்களும், அதன்பின் கட்டணச் சேனல்களும் வழங்கப்பட உள்ளது.

சென்னை மாவட்டம் தவிர, இதர, 31 மாவட்டங்களில் அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் சேவை வழங்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட சில மாநகரங்களில், "சிஏஎஸ்' (கண்டிஷனல் அக்சஸ் சிஸ்டம்) திட்டத்தில், "செட் ஆப் பாக்ஸ்' மூலம் ஒளிபரப்பு சேவை வழங்க முடியும் என்ற விதி உள்ளது. அதனால், "செட் ஆப் பாக்ஸ்' இருந்தால் தான், இந்த சேவை வழங்க முடியும் என்பதால், சென்னை மாவட்டம் தவிர, மற்ற மாவட்டங்களில் அரசு கேபிள் "டிவி' சேவை வழங்கப்படுகிறது.

அரசு "கேபிள் டிவி'யில் உள்ள 70 சேனல்கள் : நேற்று தொடங்கப்பட்டுள்ள அரசு "கேபிள் டிவி'யில், முதற்கட்டமாக 70 இலவச சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. தமிழ்நாடு அரசு "கேபிள் டிவி' ஒளிபரப்பு சேவையை, தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். இதன்படி, அரசு கேபிள் மூலம், கட்டணச் சேனல்கள் உட்பட, 90 சேனல்கள் ஒளிபரப்பப்பட உள்ளன.

அரசு "கேபிள் டிவி'யில், பொதிகை, ஜெயா டிவி, ஜெயா மூவி, ஜெயா மேக்ஸ், ஜெயா ப்ளஸ், தமிழன் டிவி, பாலிமர் டிவி, கேப்டன் டிவி, கலைஞர் டிவி, கலைஞர் செய்திகள், புதிய தலைமுறை, மக்கள் டிவி, வசந்த் டிவி, ராஜ் டிவி, ராஜ் நியூஸ், ஜீ தமிழ், இமயம் டிவி, டிடி நியூஸ், டிடி ஸ்போர்ட்ஸ், டிடி நேஷனல் உள்ளிட்ட, 70 இலவச சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. மேலும், 20 கட்டணச் சேனல்களின் ஒளிபரப்பு, விரைவில் தெரியும் எனத் தெரிகிறது

Mohamed Ismail

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.