Latest News

சங்கங்களின் சங்கமம்: அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்


இன்று மாலை, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அழைப்பை ஏற்று, அதிரையில் இயங்கும் கீழ்க்காணும் சங்கங்கள் மஃரிப் தொழுகைக்குப் பின் மரைக்கா பள்ளியில் ஒன்று கூடின. 

* தாஜுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு
* கீழத்தெரு சங்கம்
* தரகர் தெரு சங்கம்
* நெசவுத் தெரு சங்கம்
* கடல்கரைத் தெரு சங்கம்
* மிஸ்கீன் பள்ளி சங்கம் 

தொடக்கமாக, கூட்டத்தின் நோக்கம் பற்றிய பேரா. அப்துல் காதர் அவர்களின் சிற்றுரைக்குப் பின், அப்துல் லத்தீஃப் ஆலிம் சாஹிப் அவர்கள், நமக்கிடையே வரவேண்டிய ஒற்றுமை பற்றி அழகிய சிற்றுரையொன்றை நிகழ்த்தினார்கள்...


அதில் அவர்கள் தலைமைக்குக் கட்டுப்படுதல் என்ற பொருளை எடுத்து விரிவாகப் பேசினார்கள்.  நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அனுப்பப்பட்ட படை ஒன்றுக்குப் பதினெட்டு வயது வாலிபராக இருந்த உசாமா (ரலி) அவர்களைப் படைத் தளபதியாக்கி, அதில் உமர் (ரலி) போன்ற பெரும் பெரும் நபித் தோழர்களைப் படையணிப் போராளிகளாக்கி அனுப்பியது பற்றிக் குறிப்பிட்டு, தலைமைக்குக் கட்டுப்பட்டு எவ்வாறு அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை எடுத்துரைத்தார்கள்.

இஷாத் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்ட பின் குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை நடந்தது. அதன் பின் மீண்டும் கூட்டம் தொடர்ந்து நடந்தது. வந்திருந்த சங்கப் பிரதிநிதிகள் தத்தம் கருத்துகளை எடுத்து வைத்தனர்.

பேரூராட்சித் தலைவர் தேர்தலுக்குக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவதை நாம் தடுக்க முடியாது என்ற கருத்தை கீழத் தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.

ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாக்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் போட்டியில் இருப்பதால், முதலில் அவர்களைத்தான் சரி பண்ண வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.

கட்சிப் போட்டியாளர்களையும் கூட்ட முடியும் என்ற கருத்தை தரகர் தெருப் பிரதிநிதி எடுத்து வைத்து, இது உள்ளாட்சித் தேர்தல்தான் என்பதை வலுவாகப் பதிவு செய்தார்.

தலைவர் தேர்தல் கட்சி அடிப்படையில்தான் நடக்கும்; அதை நம்மால் தடுக்க முடியாது என்ற கருத்தைக் கடல்கரைத் தெருப் பிரதிநிதி உறுதியாக எடுத்து வைத்தார்.

போட்டியாளர்களைக் குறைக்க, நமது சங்கங்கள் அவர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் தனது வேண்டுகோளாக எடுத்து வைத்தார்.

முடிவாக, "அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்" என்ற பெயரில் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்குவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு, அனைவராலும் அது ஒருமனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில், நாளைக் காலை பத்து மணிக்கு, மரைக்கா பள்ளிக்கு வருமாறு தலைவர் வேட்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அவர்களுக்கு, நமக்கிடையே நிலவும் அதிகமான போட்டியைக் குறைக்கும் விதத்தில் அறிவுரை கூறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்: அதிரை அஹ்மது

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.