Latest News

உள்ளாட்சி மன்றத் தேர்தல் - 2011.. !

"யாருஹாக்கா இந்த தடவை நம்ம ஊரு பிரஸிடெண்ட் போஸ்ட்க்கு வருவாங்க? முன்னேவெல்லாம் மர்ஹூம் M.M.S.(சாச்சா என்று மரியாதையுடன் அழைக்கப்பெற்ற) அவர்கள்தான் நிலைத்த நிர்வாகத்திற்கு வாழையடி வாழையா அதிரைப்பட்டினத்தின் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்ததில் நாமும் எந்தவிதமான யோசனையும் செய்யாம அவுங்களையே பிரசிடெண்டா தொடர்ந்து தேர்ந்தெடுத்து வந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் நீயா? நானா? போட்டிப் போட்டுக்குனுலே இருக்காவோ. ஊருலே பெருவாரியா இருக்குற நாமதானே முறையாக பேருராட்சியை ஆளனும்."

சின்னப்பசங்க கிட்டே கொடுங்கப்பா... அவங்க எதாவது பண்ணுவாங்க..

"இப்போ நிறைய படித்த இளைஞர்கள் இருக்காக, அவங்களிடம் பொறுப்பை கொடுத்த என்னவாம்!, அவங்களும் துடிப்பா செயல்பட வாய்ப்புகள் இருக்கு. ஆனா, எல்லா நிலமையிலும் திறமையா செயல்பட அவங்களுக்கு அனுபவம் பத்தாது, குறைந்தபட்சம் அவங்க வெளிநாட்டுக் கனவை தள்ளி வைப்பாங்களா! என்பதும் ஒரு கேள்விதான்"...

துடிப்பான இளைஞர்களே கிடையாதா..?”

ஏன் கிடையாது, நிறைய இருக்காங்களே..! ஆனா நாம என்ன பண்ணுகிறோம் என்பதை விட அடுத்தவங்களை ஒண்ணும் பண்ண விடக்கூடாது என்பதில் தான் அவங்க துடிப்பை காட்டுறாங்க...

இப்படி பரவலான பேச்சுக்களுடன், அதிரைப்பட்டினத்தின் தேர்வுநிலை பேருராட்சிக்கான உள்ளாட்சி மன்றத் தேர்தல் திருவிழா ஆரம்பித்துள்ளது.
வழக்கம்போலவே வெறும் பார்வையாளனாகவே இருந்து, ராவுத்தர் ஆண்டாலும் ரஹ்மான் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை... என்று தேர்தல் புறக்கணிப்பை ஃபேசனாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும், அதிரைவாசிகளான உங்களுடன், உருக்கமாக சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தின் தூண்டுகோள் தான் இந்த கட்டுரைக்குக் காரணம்!

தமிழகத்தின் ஆட்சி மாறுதலுக்கு எப்படி குடும்ப அரசியல் ஒரு பெரிய காரணமாக அமைந்ததோ, அதைப்போல அதிரையின் பேருராட்சியின் ஆட்சி மாற்றத்திற்கு குப்பை ஒரு பெரும் பங்காற்ற போகிறது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால் அதற்காக குப்பை மட்டுமே அதிரையின் பிரச்சனையா? என்றால் கண்டிப்பாக இல்லை..! முன்னிறுத்தப் பட்டிருக்கும் குப்பைக்குப் பின்னால் பல விசயங்கள் நமக்குத் தெரியாமலேயே போய் விட்டன.

அதற்காக அதிரைக்கு விமான நிலையத்தைக் கொண்டு வருவோம்... நம்மூர் கடற்கரையை சுற்றுலா தளமாக்குவோம்.. என்ற ஒரு நகராட்சித் தலைவரின் சக்திக்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஒரு பேருராட்சியின் எல்லைக்குட்பட்டு காலகாலமாக செய்ய இயலாத / செய்யத் தவறிய, கண்டிப்பாக செய்ய இயன்ற நிறைய நல்ல விசயங்களை இங்கே அலசுவோம் !

தமிழகத்தின் மூன்றாம் நிலை நகராட்சியிலேயே அரசுக்கு அதிகமான வரிகட்டும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சியால் ஒரு சிறிய ஊரின் குடிநீர் பிரச்சனை, சுகாதாரப் பிரச்சனை, மின்சாரத் தட்டுப்பாடு, சாலை விளக்குகள், போன்ற அன்றாடப் பிரச்சனைகளைக் கூட தீர்க்க இயலாதிருப்பது ஆச்சரியமே..!

பாதாளச் சாக்கடைத் திட்டம், அகல ரயில் பாதை திட்டம் போன்றவை அதல பாதாளத்தில் தள்ளப் பட்டதிற்கு யார் காரணம்..? தமிழகக் குப்பைகளை ஒன்று சேர அள்ளியெடுத்து வந்து அதை ஒரே நாளில் சுத்தம் செய்யுமளவு, பணபலம் கொண்ட நமதூரின் உள்ளூர் குப்பைகளை அகற்றுவதற்கு முடியவில்லை என்பது வேடிக்கையாகவே இருக்கு !

அரசின் எண்ணற்ற திட்டங்கள், சலுகைகள், உதவித்தொகைகள், கடனுதவிகள் இப்படி எதையாவது நம்மூர் மக்கள் இதுவரை அனுபவித்ததுண்டா? அதைப் பற்றி ஒன்றுமறியாத இந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இந்த பேருராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமாக செய்ததென்ன? செய்யப் போவதென்ன?

காலமெல்லாம் தம் குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் மெழுகுவர்த்தியாக சுடர் விட்டு உருகி, வாழ வேண்டுமென்று நாடு திரும்பும் ஆயிரக்கணக்கானோருக்கு பயனளிக்கும் வகையில் உள்ள NRI சம்பந்தமான அரசு திட்டங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா? வெளிநாட்டு வாசிகள் என்றதும் அவரிடம் சிறப்பு பணப்பறிப்புமட்டும் தானே, அரசு பெயரால் நம்மால் செய்ய இயலும்?

சிறுதொழில் கடனுதவிகள், சிறு தொழில் செய்வதற்கான வழிமுறைகள், இப்படியான பல வாழ்வியல் மேம்பாட்டு திட்டங்கள் பற்றி எம்மக்களுக்கு என்ன வென்றே தெரியாமல் இருப்பதைப் பற்றி நமக்கென்ன கவலை..?

வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது... அதன் மதிப்புத் தெரியாமல் தண்ணீராக செலவழிக்கும் உள்ளூர் சொந்தங்கள்... இப்படி அரசு சம்பந்தப்பட்ட எந்த விசயமாக இருந்தாலும் பணத்தால் மட்டுமே சாதிக்க இயலுமென்ற மனப்போக்கிற்கு இந்த மக்களை அரசியல் கட்சி ஆட்சியாளர்கள் மாற்றியதைத் தவிர வேறென்ன சாதனைகளை செய்து விட்டார்கள்..?

அவர்களைச் சொல்லி குற்றமில்லை, நமதூரின் பேரூராட்சித் தலைவரை நாம் தேர்வு செய்வதில்லையே..? பணம் தானே நிர்ணயிக்கிறது...! அரசியலில் இருந்து 5 வருடங்கள் சம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கில் ஒரு பெரும் தொகையை கொடுத்து வார்டு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தலைமைப் பதவிக்கு வருபவர்களின் அடுத்த குறி போட்ட தொகையை லாபத்துடன் எடுக்க வேண்டுமென்பதைத் தவிர வேறென்னவாக இருக்கும்..? ஒரு தொழில் செய்ய வேண்டுமென்று ஒரு பெரும் தொகையை முதலீடு செய்பவர்கள் லாபம் சம்பாதிக்க நினைப்பது தப்பில்லையே...?

இதைப்பற்றி நமக்கென்ன கவலை? இதனால் நாம் பாதிக்கப் படுவதில்லையே? என்ற சுயநலப் போக்குடன் இருக்கும் நம் மக்கள் அவர்களுக்கென்று ஒரு பிரச்சனைவரும் போது அந்தப் பாதிப்பை உணர்ந்து கொதித்தெழுந்தாலும், கோலி சோடாவின் காட்டத்தைப் போல மறு நொடியே வலுவிழந்து, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார்கள்...!

இதற்குத் தீர்வே கிடையாதா? ஊரில் நல்லவர்களே இல்லையா..? என்றால் இருக்கிறார்கள்... எத்தனையோ சேவை மனப்பான்மையுள்ளோர் இனம் காணப்படாமலேயே இருக்கிறார்கள்.பணபலத்திற்கு முன்னால் தங்கள் தன்மானத்தை இழக்க வேண்டி வந்து விடுமோ என்ற பயத்தில் நல்ல உள்ளங்கள் முன் வரத் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊரின் நலனுக்காக வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியா வண்ணம் பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் எத்தனையோ நல்லுள்ளம் கொண்Dஅ புரவலர்கள், நமக்கேன் வீண்வம்பு என்று முகம் காட்ட மறுப்பவர்கள் இருக்கிறார்கள், இன்னும் சில நல்லவர்கள் அரசியல் கட்சிகள், அல்லது அமைப்புகள், தெருக்கள், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பலதரப்பட்ட வட்டத்திற்குள் சிக்கி. நீ பெரியவானா..? நான் பெரியவனா? என்ற போட்டி மனப்பான்மைக்கு உட்பட்டு ஈகோவில் சிக்கி எதையும் செய்ய இயலாவண்ணம் உறைந்து போயிருக்கிறார்கள்.

இந்த நிலைமாற என்ன வழி...?

ஒற்றுமை ! என்ற நபிமொழியின் ஒற்றை வார்த்தையைப் பற்றிப் பிடிக்கும் வண்ணம் ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றி பிடிப்பதேஇவை அனைத்திற்கும் தீர்வாகும்.

பல வருடங்களுக்கு முன்னர் நம்மூரில் துவக்கப்பட்ட ஐக்கிய கமிட்டியை மீண்டும் தூசு தட்டி, தலைமுழுவாட்டி, புதுடிரெஸ் போட்டு மீண்டும் செயல்படுத்தவேண்டும். அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும். மற்றவர்களுக்கு முன்னரே நாம் தான் இப்படியான ஐக்கிய கமிட்டியை முதலில் அமைத்தோம் வழிகாட்டியாக, ஆனால் வலி மட்டும் நம்மிடம் இருந்துவிட்டது, வழியை மற்றவர்கள் நன்றாகவே கண்டு கொண்டார்கள். இது எந்த வகையில் சாத்தியம் என்போர் கீழே தரப்பட்டிருக்கு சுட்டியை தட்டிப் பாருங்கள் அவர்களும் நம்மவர்கள்தான் வேற்றார்கள் அல்ல. நன்மையை நாடி யார் நல்லதைச் சொன்னாலும் கேட்டுத்தான் உள்வாங்குவோமே!

நம் பூர்வகுடி உறவுகள் எடுத்த தீர்மானங்கள் இன்றைய சூழலில் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே, இருப்பினும் அல்லாஹ் நமக்கும் ஆராய்ந்து முடிவெடுக்கும் அறிவைத் தந்திருக்கிறான் அதனைக் கொண்டும் சிந்திப்போம்.

மேலும் பார்க்க : http://www.kayaltoday.com/show.aspx?tNewsId=1802

மாஷா அல்லாஹ் நம் சகோதரர்களின் செயல்பாடுகள் உண்மையில் பாராட்டத்தக்கது, நம் பூர்வகுடிச் சகோதரர்கள் இதை சாத்தியப் படுத்தும் போது நம்மால் ஏன் இதை நடைமுறைப்படுத்த முடியாது? இது என் எண்ணம் மட்டுமல்ல, ஊர் நலனில் அக்கரை கொண்ட எத்தனையோ மவுன ஜீவன்களின் பேராசை! நான் அவர்களால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளின் மொழிபெயர்ப்ப்பு மட்டுமே இந்த ஆக்கம்.

இதெல்லாம் நடக்கக் கூடியதா? என்ற எதிர்மறை கேள்விகளை களைந்து, ஏன் நடக்கக் கூடாதென்ற எண்ணத்தை முன்னிருத்துங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாற்றம் வரும்....!
- அப்துல் மாலிக்
நன்றி : அதிரை-நிருபர்-குழு  

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.