Latest News

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 1

சீக்கிரமே படியுங்கள்!
வாழ்க்கை ஜனனம் முதலே நமக்கு நிறைய கற்றுத் தர ஆரம்பிக்கின்றது. படிக்க மனமில்லாமல் பள்ளி செல்லும் மாணவன் போல நம்மில் அதிகம் பேர் அதை ஒழுங்காகப் படிக்கத் தவறி விடுகிறோம். படித்துப் பாஸ் ஆகும் வரை நாம் திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் பல முறை படிக்க நேரிடுகிறது. நாம் சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் படித்துத் தேற முயல்வதில்லை. என்ன உபத்திரவம் என்று சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் ஒரு உண்மையை நாம் உணர்வதில்லை. படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளும் வரை வரலாறு மட்டுமல்ல, வாழ்க்கையும் தான் திரும்பத் திரும்ப ஒரே வித அனுபவத்தைத் தந்து கொண்டே இருக்கிறது... 

 ஜனனத்தில் ஆரம்பித்து மரணம் வரை கிடைக்கும் பாடங்களை யார் விரைவாகக் கற்றுத் தேறுகிறானோ அவனே வெற்றிவாகை சூடுகிறான். அவனே வாழ்க்கையில் நிறைவைக் காண்கிறான். அவனே கால மணலில் தன் காலடித் தடத்தை நிரந்தரமாக விட்டுச் செல்கிறான். மற்றவர்கள் புலம்பி வாழ்ந்து மடியும் போது அவன் மட்டுமே வாழ்க்கையை ரசித்து திருப்தியுடன் விடை பெறுகிறான்.

 இந்த வாழ்க்கைப் பள்ளிக் கூடத்தில் ஒரு பிரத்தியேக வசதி இருக்கிறது. நாம் அடுத்தவர் பாடத்தையும் படித்துத் தேர்ந்து விடலாம். அப்படித் தேர்ந்து விட்டால், ஒழுங்காகக் கற்றுக் கொண்டு விட்டால் நாம் அந்தப் பாடத்தைத் தனியாகப் படித்துப் பாடுபட வேண்டியதில்லை.

உதாரணத்திற்கு ஒரு சாலையில் ஒரு குழி இருக்கிறது. திடீர் என்று பார்த்தால் அது தெரியாது. அந்தக் குழியைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் அதில் விழுந்து எழுந்து தான் ஆக வேண்டும் என்பதில்லை. நமக்கு முன்னால் போகும் ஒருவர் அதில் விழுந்ததைப் பார்த்தாலே போதும் பின் எப்போது அந்தப் பாதையில் போகும் போதும் சர்வ ஜாக்கிரதை நமக்குத் தானாக வந்து விடும். இந்தப் பாதையில் இந்த இடத்தில் ஒரு அபாயமான குழி இருக்கிறது. கவனமாகப் போக வேண்டும் என்ற பாடம் தானாக மனதில் பதிந்து விடும். இனி எந்த நாளும் அந்தக் குழி நமக்கு பிரச்னை அல்ல.

ஆனால் நான் அடுத்தவர் விழுவதைப் பார்த்தாலும் கற்றுக் கொள்ள மாட்டேன், நானே விழுந்தால் தான் எனக்குப் புரியும்என்று சொல்லும் நபர் தானாகப் படிக்க விரும்பும் அறிவுக்குறைவானவர். அவர் விழுந்து எழுந்து தான் கஷ்டப்பட வேண்டும். நானே ஒரு தடவை விழுந்தாலும் அதிலிருந்து கற்றுக் கொள்ள மாட்டேன். ஏனோ அப்படியாகி விட்டது. அடுத்த தடவை அப்படியாக வேண்டும் என்பதில்லைஎன்று ஒவ்வொரு தடவையும் அதே குழி அருகில் அலட்சியமாக நடந்து விழுந்து எழும் நபர் முட்டாள். அவர் கஷ்டப்படவே பிறந்தவர்.

இந்தக் குழி உதாரணம் படிக்கையில் இப்படியும் முட்டாள்தனமாக யாராவது இருப்பார்களா என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் நம்மில் பலரும் அப்படி முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. எத்தனை பேர் சூதாட்டத்தில் பல முறை தாங்கள் சூடுபட்டும் திருந்தாதவர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் பல பேர் சூதினால் சீரழிவதைப் பார்த்த பின்னும எனக்கு அப்படி ஆகாதுஎன்று நினைத்து திரும்பத் திரும்ப சூதாடி அழிந்து போனவர்கள் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள் புரியும்.
தீயைத் தொட்டுத் தான் அது சுடும் என்று உணர வேண்டியது இல்லை. அதைத் தொட்டு சுட்டுக் கொண்டவர்களைப் பார்த்தும் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அப்படி படிப்பது தான் புத்திசாலித்தனம்.

ஒவ்வொன்றையும் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் அனுபவித்தே கற்க வேண்டும் என்றிருந்தால் நம் வாழ்க்கையின் நீளம் சில பாடங்களுக்கே போதாது. அதில் நிறைய சாதிக்கவும் முடியாது. நம் வாழ்க்கையில் கிடைக்கும் பாடங்களை முதல் தடவையிலேயே ஒழுங்காகப் படிப்பது முக்கியம். அடுத்தவர்கள் அனுபவங்களில் இருந்தும் நிறையவற்றை கூர்மையாகப் பார்த்துக் கற்றுக் கொள்வது புத்திசாலித்தனம்.

வாழ்க்கைப் பள்ளிக்கூடத்திற்குள் ஒரு முறை நுழைந்து விட்ட பின் தப்பிக்க வழியே இல்லை. எனவே எதையும் புத்திசாலித்தனமாக சீக்கிரமே படித்துத் தேறுங்கள். அதைத் திரும்பத் திரும்ப படிக்க வேண்டி வராது. அந்தப் பாடம் உங்களுக்குப் பாரமாகவும் இருக்காது.
மேலும் படிப்போம்….

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.