உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் இப்னு கஸீர் அவர்கள் அரபியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா எனும் பெருநூலின் ஒரு பகுதி `கஸஸுல் அன்பியா – மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி தமிழாக்கம் செய்த நபிமார்கள் வரலாறு இரண்டாம் பாகமும், முன்னாள் டிஐஜி ஏ.பீ. முஹம்மது அலி ஐபிஎஸ் எழுதிய சமுதாயமே விழித்தெழு நூலும் தேவநேயப் பாவாணர் அரங்கில், ஜூன் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. இந்நூல்களை சென்னை ஆயிஷா பதிப்பகம் வெளியிட்டுள்ளது...
புகாரி ஆலிம் அரபிக்கல்லூரியின் முதல்வர், டாக்டர் மௌலவி பி.எஸ். செய்யது மஸ்வூத் ஜமாலி இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பி.எஸ். முஹம்மது பாதுஷா,பி.ஜஃபருல்லாஹ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.ரீமா பல்கீஸ் திருமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். ஆயிஷா பதிப்பக நிறுவனர்களுள் ஒருவரான எம். சாதிக் பாட்சா வரவேற்புரை நிகழ்த்தினார். இப்பதிப்பக மொழிபெயர்ப்பாளர் மௌலவி, நூ. அப்துல் ஹாதி பாகவி நூல்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
அதன்பின்னர், சமுதாயமே விழித்தெழு எனும் நூலை சென்னைப் பல்கலைக் கழக முந்நாள் துணைவேந்தர் டாக்டர் சே.சாதிக் வெளியிட, முதல்பிரதியை முஹம்மது சதக் அறக்கட்டளையின் சேர்மேன் அல்ஹாஜ், டாக்டர், ஹமீது அப்துல் காதிர் அவர்களும், இரண்டாம் பிரதியை ஏ. அபூபக்கர் அவர்களும் பெற்றுக்கொண்டனர். அதன்பின் நபிமார்கள் வரலாறு இரண்டாம் பாகத்தை மௌலவி, அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி வெளியிட, முதல் பிரதியை புரொஃபஷனல் கூரியர் இயக்குநர் அஹ்மது மீரான் அவர்களும், இரண்டாம் பிரதியை பாத்திமா ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் எச். ஜாஹிர் ஹுசைன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதன்பின் டாக்டர் சே.சாதிக் சமுதாயமே விழித்தெழு நூலைப் பற்றிய ஆய்வுரை நிகழ்த்தினார். தொடர்ச்சியாக, மௌலவி, அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி நபிமார்கள் வரலாறு நூலைப் பற்றிய ஆய்வுரை நிகழ்த்தினார். பின்னர், தமுமுகவின் தலைவரும் இராமநாதபுரம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர்,எம். எச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி ஐபிஎஸ்ஏற்புரையாற்றினார். இறுதியில், இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மௌலவி சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
முனைவர், மௌலவி பி.எஸ். சையத் மஸ்வூத் ஜமாலி தமது உரையில் கூறியதாவது: பேரறிஞர் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) ஒரு தலைசிறந்த வரலாற்று ஆசிரியராகத் திகழ்ந்தார். அவர்தாம் முதன்முதலாக வரலாற்று நூலை எழுதுவதற்காக கோட்பாட்டுமுறையை (Methodology) உருவாக்கினார். அதற்கேற்ப அவர் தம் நூலில்,யூதர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்டவர்களின் அனைத்துக் கருத்துகளையும் எடுத்து வைத்துக்கொண்டு, குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் அவற்றை ஆய்வுசெய்து, எவை சரியானவை, எவை தவறானவை எனப் பாகுபடுத்திக் கூறியுள்ளார். அந்த வகையில் இந்நூல் ஓர் ஆதாரப்பூர்வமான நூல் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இந்த நூல் தமிழில் வந்திருப்பது தமிழ்பேசும் அனைவரின் தாகத்தையும் தீர்க்கவல்லது.
பேராசிரியர் அ.முஹம்மது கான் ஃபாஸில் பாகவி தமது உரையில் குறிப்பிட்டதாவது: இறைத்தூதர்கள் என்பவர்கள் யார்? அவர்களது இலக்கணம் என்ன என்ற வினாக்களுக்கு விடையாக அல்லாஹ் திருக்குர்ஆனில் `அல்அன்பியா’ எனும் அத்தியாயத்தில் இறைத்தூதர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.
அதில் ஓரிடத்தில் இப்படிக் கூறுகின்றான்: உமக்கு முன்னரும் மானிடர்களையே தவிர (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக அனுப்பவில்லை; அவர்களுக்கு நாம் வேத அறிவிப்புச் செய்கிறோம்… உணவைச் சாப்பிடாமல் இருக்கின்ற உடலமைப்பை அவர்களுக்கு நாம் ஆக்கவில்லை; மேலும் அவர்கள் நிரந்தரமாக இருக்கவில்லை.
அதாவது இறைத்தூதர்கள் தெய்வப்பிறவி இல்லை;அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; அவர்களுக்கும் மற்றவர்களைப் போன்று பசிக்கும்; மேலும் அவர்கள் இறந்துபோகாமல் நிரந்தரமாக இருப்பவர்களும் அல்லர். இறைத்தூதர்களைப் பற்றிய இந்தத் தெளிவுதான் முஸ்லிம்களை ஒரு நிலையான கொள்கையில் உறுதியாக வைத்துள்ளது. எனவே இவர்களை யாரும் அவர்கள் தம் கொள்கையிலிருந்து திசைதிருப்பவோ ஏமாற்றவோ முடியாது.
ஆக,இத்தகைய சிறப்பு வாய்ந்த இறைத்தூதர்களைப் பற்றிய வரலாற்றைக்கொண்ட இந்நூல் மிகவும் பயனுள்ளது. வாங்கிப் படியுங்கள். இதை நீங்கள் வாங்கிப் படிப்பதன் மூலம் ஆயிஷா பதிப்பகத்தாருக்கு உதவி செய்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். மாறாக,கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தகவல்களை உங்களுக்குத் தமிழில் தந்து, அவர்கள்தாம் உங்களுக்கும் இந்தச் சமுதாயத்துக்கும் உதவிசெய்கின்றார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சட்டமன்ற உறுப்பினர், முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் தமது உரையில் வலியுறுத்தியதாவது: இஸ்லாம் கல்வியை இரண்டாகப் பிரிக்காமல் ஒன்றாகவே பாவித்து வந்தது. அதனால்தான் பேரறிஞர் இமாம் இப்னு கஸீர் (ரஹ்), ஒரு தலைசிறந்த திருக்குர்ஆன் விரிவுரையாளராகத் திகழ்கின்ற அதேநேரத்தில், தலைசிறந்த வரலாற்றாசிரியராகவும் திகழ்கின்றார். எனவே இன்றைக்கு ஆங்காங்கே காணப்படுகின்ற ஒருங்கிணைந்த கல்விமுறையை நாம் விரிவுபடுத்த முயலவேண்டும்.
No comments:
Post a Comment