Latest News

அவசரம்?


அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). எங்கு பார்த்தாலும் பரபரப்பு எல்லா காரியங்களிலும் அவசரம் அவசரம் அவசரம் என்று மனிதர்கள் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பறந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த அவசரம் தேவைதானா? நலன்  அளிக்குமா? என்பது பற்றி இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.

மனிதன் நன்மைக்கு பிரார்த்திப்பது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான் (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:11)



அவசரம்?

இந்த நவீன உலகில் எங்கு பார்த்தாலும் அவசரம் எதிலும் அவசரம். பஸ் நிலையம், ரயில் நிலையம், கடைகளில் பொருட்கள் வாங்குவது, ஊருக்கு புறப்படுவது என்று எல்லாவற்றிலும் மனிதர்களோடு சம்பந்தப்பட்ட எந்த காரியமானாலும் அவசரம்தான். கஷ்டப்பட்டு சம்பாரிப்பது எதற்கு வயிற்றுக்குத்தானே அட அந்த வயிற்றுக்கு சாப்பிடுவதிலும் கூட அவசரம் காட்டினால் பின் எதற்கு பணம். சிலபேர் விதி விலக்காக இருக்கலாம்.   பொறுமை என்றால் என்ன விலை என்று  கேட்கும் நிலைக்கு ஆளாகி விட்டார்கள் இன்றைய அவசர உலகத்தின் நவீன மனிதர்கள். ...

பொறுமையாளர்கள்:

பொறுமையக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(அல்குர்ஆன் : 2:45)

வல்ல அல்லாஹ் கூறுவது போல் நாம் உதவி தேடியிருப்போமா? இப்படி உதவி தேடுவதில்லை  நமக்கு நினைத்தது உடனே கிடைக்க வேண்டும். எதிர்பார்ப்பதும் தாமதம் இல்லாமல் நம்மை வந்து சேர வேண்டும். இதுதான் பெரும்பாலோரின் எண்ணமாக உள்ளது. மேலும் பொறுமையோடும், தொழுகையோடும் உதவி தேடுவது இறைவனின் மேல் அச்சம் உள்ளவர்களுக்குத்தான் முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படி என்றால் நம்முடைய உள்ளம் எப்படி உள்ளது என்பதை நாம்தான் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

அல்லாஹ் யாரோடு? இருக்கிறான்:

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:153).

என்ன சகோதர, சகோதரிகளே வல்ல அல்லாஹ் கூறுவது புரிகிறதா? நாம் எவ்வாறு இருக்கிறோம். பொறுமையுடன் இருக்கிறோமா? எந்தக்காரியத்தையாவது நன்றாக சிந்தித்து நிதானமாக செயல்படுத்தியிருப்போமா?

பிள்ளைகளிடம், பெற்றோர்களிடம், உடன் பிறந்தவர்களிடம் உறவினர்களிடம், நண்பர்களிடம், வேலையாட்களிடம் இப்படி யாரிடமும் நாம் பொறுமையுடன் நடந்து கொள்வதில்லை. இவர்கள் அனைவரிடமும் நாம் பழகும் விஷயத்திலும் நிதானத்துடன் நடந்து கொள்வதில்லை, நாம் சொல்வதை பிறர் கேட்க வேண்டும், நாம் திட்டினாலும் மற்றவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் மட்டும் யாருடைய ஏச்சுக்களையும், கோபத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பது நம்முடைய கொள்கையாக உள்ளது.

நாம் பொறுமையிழந்து மற்றவர்களை மனிதர்களாகட்டும் பொருள்களாகட்டும் எல்லா காரியங்களிலும் சாபம் இடக் கூடியவர்களாக  இருக்கிறோம். இப்படி இருப்பவர்களிடம் பொறுமையாக இருந்து, விட்டுக் கொடுத்து மன்னிக்கும் மனப்பான்மையுடன் இருங்கள் என்று அறிவுரை கூறினால் முயற்சி செய்கிறோம் என்று வாயால் சொல்வதோடு முயற்சி நின்று விடுகிறது. 


சில சகோதரிகள் உறவுகளுக்குள் ஏதாவது கருத்து வேறுபாட்டால் சண்டை போடும்பொழுது, மகளாக, தாயாக இருந்தாலும் நிதானம் தவறி வாயில் வந்ததை எல்லாம் திட்டி விட்டு உறவே வேண்டாம் என்று ஒதுங்கி விடுகிறார்கள். அவர்களிடம் கேட்டால் நான் நல்லபடியாகத்தான் நடந்து கொள்கிறேன், மற்றவர்கள்தான் என்னை நோவினை செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள். தாம் பிறரை நோகடிப்பது தவறு கிடையாது. ஆனால் மற்றவர்கள் பதிலுக்கு தம்மை ஏதும் சொல்லி விட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டார்களாம் என்ன நியாயம் இது?  திட்டுவதை எல்லாம் திட்டி விட்டு பிறகு இப்படிப்பட்ட சகோதரிகள் என்னை  மன்னித்து விடுங்கள் என்று சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்பது மிக சுலபம் தங்களின்  கடுஞ்சொற்களால் மற்றவர்கள் அடைந்த மன வேதனையை சரி செய்ய முடியுமா?

நாம் யாரிடம் சண்டை போடுகிறோம் உறவுகளிடம் அல்லவா? நமக்கு உறவுதானே எல்லா காரியங்களுக்கும் உதவியாக இருக்கிறார்கள் என்ற சிந்தனை இல்லாமல் அவசரத்தில் திட்டி விட்டு பிறகு வருத்தப்படுவதால்  பயன் இல்லை. அவசரத்தில் உறவுகளோடு சண்டை போடும் சகோதர, சகோதரிகளே நன்றாக நிதானமாக யோசித்து பாருங்கள். வல்ல அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் பொறுத்துக்கொள்வதால் யாருடைய சொத்தும் குறைந்து விடாது. உங்களுக்கு கோபமே வரக்கூடிய காரியத்தை உறவுகளும், வேறு யாரும் செய்து இருந்தாலும் அலட்சியப்படுத்தி மன்னித்து விடுங்கள். நீங்கள் மனிதர்களை மன்னித்தால் வல்ல அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். பொறுமையாளர்களுடன் நான் இருக்கிறேன் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் கூறும் பொறுமையாளாராக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டாமா?

எதற்கு அவசரப்படக்கூடாதுஎதற்கு அவசரப்படலாம்?

மறுமைக்கான செயல்களைத் தவிர மற்ற எல்லா விஷயத்திலும் நிதானத்துடனும் காலம் தாழ்த்தியும் நடந்து கொள்ள வேண்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: சஆத் இப்னு வக்காஸ்(ரலி) நூல்: அபூதாவூத்)

இந்த நபிமொழியிலிருந்து  என்ன புரிந்து கொள்ள முடிகிறது. உலக காரியங்களில் நமக்கு நன்மை தருமா? தீமை தருமா? என்பது பற்றி எந்த மனிதருக்கும், எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் தெரியாது. அதனால் உலக காரியங்கள் எதுவாக இருந்தாலும் நிதானமாக பதற்றப்படாமல், அவசரப்படாமல், ஆலேசானைகள் தேவைப்பட்டால், உண்மையான ஆலோசனை தருபவர்களிடம் ஆலோசித்து காரியத்தில் ஈடுபடலாம். மேலும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக (அளந்து அளந்து பேசுகிறான் என்று சொல்வார்கள்) மற்றவர்கள் மனம் புண்படாமல் பொறுமையுடன் பேச வேண்டும். (பதறாத காரியம் சிதறாது என்ற பழமொழி கூட உண்டு). நமது காரியங்களில் பொறுமையை கடைபிடித்தால் அல்லாஹ் நாடினால் வெற்றி கிடைக்கும்.

இந்த உலகத்தில் நமக்கு வியாபாரத்தில் நஷ்டமடைந்து விட்டால் வேதனையின் உச்சிக்கு சென்று விடுகிறோம். நம்முடைய மதிப்பு மிக்க பொருள்கள் காணாமல் போய்விட்டால் வேதனையில் அழுகிறோம். இதுவெல்லாம் நிரந்தரமில்லா உலக வாழ்க்கைக்காக, ஆனால் நிரந்தரமான மறுமை வாழ்க்கையில் நஷ்டம் அடைந்து விட்டால் திரும்ப சரி செய்ய முடியுமா? முடியவே. . . . முடியாது. மறுமைக்கான காரியத்தின் விளைவுகள் வல்ல அல்லாஹ்வால் உறுதி செய்யப்பட்டு விட்டது. எந்த காரியங்களை எல்லாம் செய்தால் நமக்கு மறுமையில் நன்மை கிடைக்கும் என்ற பெரிய பட்டியலையே தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நம்முடைய இந்த உலக வாழ்வே பரீட்சை கூடம்தான் தேர்வு எழுதிக்கொண்டு இருக்கிறோம், மறுமையில் இறுதி தீர்ப்பு நாளில்தான் நமக்கு மார்க் கிடைக்கும் அந்த மார்க் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது.

அதனால் எந்தச் செயல்களை செய்தால் மறுமையில் வெற்றி கிடைக்கும், சிறந்த செயல்கள் எது என்பது பற்றி திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் அதிகம் அதிகம் காணலாம். நாம் ஆய்வு செய்ய வேண்டும். இதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

ஆகவே சகோதர, சகோதரிகளே! பிறரை பற்றி ஆய்வு செய்வதை விட்டு விட்டு மறுமையில் நம்முடைய காரியத்திற்கு நாம் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்து  மறுமையில் வெற்றியடைந்து சொர்க்கம் செல்லக்கூடிய நன்மக்களாக நம்மை மாற்ற முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ்.

காலத்தின் மீது சத்தியமாக!   நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக்கொள்வோரையும் தவிர. (அல்குர்ஆன் : 103:1,2,3)

 S.அலாவுதீன்

நன்றி : http://adirainirubar.blogspot.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.