Latest News

சரித்திரம் படிப்பாய் பெண்ணே!!! புது சாதனை படைப்பாய் பெண்ணே!!!

ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களும் நம்மைக் கடந்து சென்று கொண்டே தான் இருக்கிறது. நாமும் புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியோடு இரு பெருநாட்களையும் வழியனுப்பிக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் இந்தப் பெருநாட்களின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் மாற்றங்களையும் நாம் பெற்றிருக்கின்றோமா? என்பது தான் இப்போது நாம் மிகவும் அவசியமாக அலச வேண்டிய விஷயமாகும்.

நோன்புப் பெருநாளாக இருந்தாலும், தியாகத் திருநாளாகிய ஹஜ்ஜுப் பெருநாளாக இருந்தாலும் அந்தந்த கால கட்டங்களில் அந்தப் பெருநாட்களின் மூலம் நாம் பெற வேண்டிய பாடங்கள் மக்களுக்கு போதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன...

உதாரணத்திற்கு இப்போது நம்மை கடந்து சென்ற ஹஜ்ஜுப் பெருநாளை எடுத்துக் கொள்வோம். ஹஜ்ஜுப் பெருநாள் என்ற பெயரைக் கேட்டாலே நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவர்களுடைய மகன் இஸ்மாயீல் (அலை), அவர்களின் துணைவியார் அன்னை ஹாஜரா (அலை) ஆகிய இவர்களின் வரலாறுகளும், தியாகங்களும் தான் நம்முடைய மனதிற்கு வருகின்றது.

இறைவன் ஏன் இந்தச் சரித்திரங்களைக் கூற வேண்டும்? நாம் கதை போல் கேட்டு விட்டுச் செல்வதற்காகவா? இல்லை, அவற்றி­ருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகவா?

நபிமார்கள் மற்றும் முன்னோர்களின் சரித்திரங்களை இறைவன் நமக்கு கூறியிருப்பதன் நோக்கத்தைப் பற்றி திருமறைக் குர்ஆன் எடுத்தியம்புவதைப் பாருங்கள்:

தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தைப் பலப்படுத்தும் அனைத்தையும் உமக்குக் கூறுகிறோம். உண்மையும், அறிவுரையும், நம்பிக்கை கொண்டோருக்கு போதனையும் இதில் உமக்கு கிடைத்துள்ளது. (அல்குர்ஆன் 11:120)
(முஹம்மதே!) இவ்வாறே முன் சென்ற செய்திகளை உமக்குக் கூறுகிறோம். நம் அறிவுரையையும் உமக்கு வழங்கியுள்ளோம். (அல்குர்ஆன் 20:99)
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்தின் உதாரணம் இதுவே. அவர்கள் சிந்திப்பதற்காக இவ்வரலாறுகளைக் கூறுவீராக! (அல்குர்ஆன் 7:176)
அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (அல் குர்ஆன் 12:111)

வரலாறுகளின் நோக்கம் நாம் படிப்பினை பெற வேண்டும் என்பது தான். அந்த வரலாறுகளைக் கேட்கின்ற நாமும் புதியதோர் வரலாற்றைப் படைக்க வேண்டும் என்பது தான். நம்மைப் படைத்தவன் நம்மிடம் எதிர்பார்க்கின்ற ஒன்று. அப்படிப்பட்ட வரலாற்று நாயகர்களாக உருவாவதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொண்டோமா? என்பதை இங்கே நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆண் சகோதரர்களை விட பெண் சகோதரிகள் தான் இந்தக் கேள்விக்கு மிகவும் தகுதியானவர்கள். ஆண்களுக்குத் தகுதியில்லை என நாம் கூறவில்லை. ஈமானிய வ­மைக்கு உதாரணமாகவும், இந்த ஹஜ்ஜுப் பெருநாள் சரித்திரத்திலும் மிக முக்கிய நாயகர்களாகத் திகழக் கூடியவர்கள் பெண்கள் தான்.

நபிமார்கள் செய்த தியாகத்தைக் கூறினால், ‘அவர்கள் நபிமார்கள்; இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்கள்; எனவே அவர்கள் இது போன்ற தியாகங்களைச் செய்வார்கள். நாம் அது போன்று செயலாற்ற முடியாதுஎன்ற காரணத்தை  ஆண்களும், பெண்களும் கூற இயலும்.

நபி அல்லாத ஒரு ஆண் செய்த தியாகத்தைக் கூறினாலும் ஆண்கள் உடல் வ­மையும், மன வ­மையும் படைத்தவர்கள். பெண்களைப் போன்ற பலவீனங்கள் அவர்களுக்கு இல்லை. எனவே அவர்களைப் போன்று நாங்கள் செய்ய இயலாதுஎன பெண்கள் சமுதாயம் கூற இயலும்.

ஆண்கள், பெண்கள் யாரும் மறுக்க இயலாத விதத்தில் மிகவும் பலவீனமாகப் படைக்கப்பட்ட பெண்களைத் தான் இறைவன் ஈமானிய வ­மைக்கு உதாரணமாகச் சூட்டுகின்றான். இதோ இறைவன் பேசுவதைப் பாருங்கள்.
என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையி­ருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்தி­ருந்தும் என்னைக் காப்பாயாக!என்று ஃபிர்அவ்னின்  மனைவி கூறியதால் அவரை  நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப் படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 66:11,12)

ஈமானிய வ­மைக்கு இறைவன் ஃபிர்அவ்னின் மனைவி அன்னை ஆசியா (அலை) அவர்களை உதாரணமாகக் கூறுகிறான் என்றால் இறைவனின் மாபெரும் விரோதியாகத் திகழ்ந்த அந்தக் கொடியவனை எதிர்த்து நின்ற அவர்களின் மன உறுதியின் காரணமாகத் தான்.

இறைவன் தரவிருக்கின்ற மறுமை வீடாகிய சொர்க்கத்தை அடைய வேண்டும் என்கின்ற அவர்களின் பேராவல், எவ்வளவு இன்பங்களைத் துறந்தாலும் இறைவனுக்கு மாறு செய்து விடக் கூடாது என்கின்ற அவர்களின் இறையச்சம், எவ்வளவு துன்பங்களை எதிர் கொண்டாலும் மாறாத அவர்களின் கொள்கை உறுதி இவையெல்லாம் இன்றைய ஏகத்துவ சகோதரிகளிடமும் ஏற்பட்டாக வேண்டும்.

இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை வ­மையாக இருந்தால் ஒரு புதிய வரலாற்றைப் படைக்க முடியும் என்பதற்காக அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் வரலாறும் ஒரு சான்றாகும்.

மனிதர்கள், தண்ணீர், விலங்குகள், விவசாயம் எதுவுமே இல்லாத பாலைவனத்திலே இன்றைய கஅபா அமைந்துள்ள இடத்திலே கைக் குழந்தையோடு மனைவியை விட்டு விட வேண்டுமென இறைவன், இப்ராஹீம் நபி அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கின்றான்.

இறைக் கட்டளையை ஏற்று அவர்களும் அவ்வாறே நடைமுறைப் படுத்துகிறார்கள். திரும்பி வரும் நேரத்தில் கணவன், மனைவிக்கு மத்தியில் நடக்கின்ற உரையாடலையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அற்புதத்தையும் நபியவர்கள் ஹதீஸில் எடுத்துரைப்பதைப் பாருங்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள், ஹாஜரா அம்மையார் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் போது இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேற்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்து விட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரிச்சம் பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர் பை ஒன்றையும் வைத்தார்கள்.
பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீ­ன் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் பின் தொடர்ந்து வந்து, ”இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே, அவர்களிடம் ஹாஜரா (அலை) அவர்கள், ”அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், ”அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்என்று சொல்­ விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். (புகாரி 3364)

பாலைவனத்திலே விட்டு வரும் போது ஹாஜரா (அலை) அவர்கள் இது இறைவனின் கட்டளை தானா?” எனக் கேட்கிறார்கள். இப்ராஹீம் நபி ஆம் என்று கூறியதும் அப்படியானால் அவ்விறைவன் எங்களைக் கைவிட மாட்டான்என்று கூறி பாலைவனத்தை நோக்கித் திரும்பிச் சென்றார்களே! இங்கு தான் நாம் மிகவும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எதுவுமே இல்லாவிட்டாலும் இது இறைவனின் கட்டளை; அவன் நம்மைக் கைவிட மாட்டான்என்ற மனவுறுதி, இறை நம்பிக்கை அவர்களிடம் இருந்த காரணத்தினால் அவர்கள் ஸஃபா, மர்வாவிற்கு இடையே ஓடிய ஓட்டத்தை இன்றைக்கும் நாம் ஹஜ் கிரியைகளில் ஒன்றாகச் செய்யுமாறு இறைவன் நமக்குக் கட்டளை பிறப்பித்துள்ளான்.
அவர்களின் மனவ­மையின் காரணத்தினால் தான் இறைவன் பாலைவனத்திலும் வற்றாத ஜம் ஜம்தண்ணீரை கியாமத் நாள் வரை நீடித்திருக் கூடிய வரலாற்று அதிசயமாக இறைவன் நமக்கு அருளியிருக்கிறான்.

இவைகளெல்லாம் தியாகத்தினால் தான் சமுதாய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.

இன்றைய நம் இஸ்லாமிய சமுதாயத்தில் தான் பெண்களுக்கு எவ்வளவு கொடுமைகள்! அப்பப்பா! சொல்­ மாளாது. வரதட்சணை, சீர் சீராட்டுகள், சொத்துரிமை மறுப்பு, பள்ளிவாசல்களுக்கு செல்லத் தடை, விரும்பாத மணமகனைத் திருமணம் செய்யுமாறு நிர்ப்பந்தித்தல் என்று சொல்­லிக் கொண்டே போகலாம்.
பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற நற்செய்தி வரும் போது தவ்ஹீத் வாதியாக இருந்தாலும், ஏகத்துவத்தை விளங்கிய பெண்களாக இருந்தாலும் உள்ளத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு கவலை, ஒரு பாரம் ஏற்படுகிறதே! இதற்கு என்ன காரணம்? இந்த வரதட்சணை கொடுமை தானே!

இருபது வருடங்கள் கழித்து இவளைக் கரை சேர்க்க வேண்டுமே! இலட்சங்களுக்கு எங்கே போவது? என்கின்ற கவலை, குழந்தை பிறந்த உடனேயே ஏற்படுகிறதே? இதற்குக் காரணமும் இந்த வரதட்சணைக் கொடுமை தான்!
பெண் குழந்தைகள் பிறந்த பிறகும் உயிரோடு கொல்கின்ற கொடுமை களும், தொட்டில் குழந்தைகள் திட்டம் உருவாவதற்குக் காரணமும் இந்த வரதட்சணைக் கொடுமை தான்.

இந்த அவலங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என்றால், வரக்கூடிய கால கட்டத்திலாவது இது போன்ற கொடுமைகள் பெண் சமுதாயத்தை விட்டு நீங்க வேண்டும் என்றால் இன்றைய ஏகத்துவ சகோதரிகள் ஒரு புதிய வரலாறு படைக்க வேண்டும். ஒரு மாபெரும் தியாகத்திற்குத் தயாராக வேண்டும். ஒரு மாபெரும் புரட்சி இந்தத் தமிழக மண்ணிலே நிகழ வேண்டும். அது என்ன மாபெரும் தியாகம்?

எத்தனை காலங்கள் ஆனாலும், எவ்வளவு துன்பங்கள் நேர்ந்தாலும் வரதட்சணை கேட்காத மணமகனை, நபி வழிப்படி மட்டும் தான் நான் திருமணம் செய்வேன் என ஒவ்வொரு சகோதரியும் இறைவனை முன்னிறுத்தித் தன் மனதில் உறுதி கொள்ள வேண்டும். என் இறைவனின் கட்டளைப் படி தான் நான் செயல் படுவேன். இடையில் எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் அறுத்தெறிவேன் என்கின்ற மனவுறுதி நம் சகோதரிகளிடம் வந்து விட்டால் மற்றுமொரு புதிய வரலாறு படைக்கின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை. இன்ஷா அல்லாஹ்  நம்முடைய வாழ்நாளிலேயே இதை நாம் காணலாம். இல்லையென்றால் வருங்கால சமுதாயத்திற்காவது நிச்சயம் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
சரித்திரம் படித்த பெண்கள் புதிய சாதனை படைக்க தயாராவார்களா? இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.