Latest News

இது தாண்டா கலெக்டர்


இது தாண்ட போலீஸ் என்பதை போல் இது தாண்டா கலெக்டர்
தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்திற்குத் தானே அழைத்துப் போய் அங்கு 2வது வகுப்பில் சேர்த்து, சத்துணவும் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தி விட்டு வந்துள்ளார் ஒரு கலெக்டர். தமிழக அரசு ஊழியர்கள் வரலாற்றில் இது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கால் காசு என்றாலும் அது கவர்ன்மென்ட் காசாக இருக்க வேண்டும் என்று பழமொழியாக கூறுவார்கள். 

ஆனால் அரசு வேலையை மட்டும் விரும்பும் பலரும், தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க ரொம்பவே தயங்குவார்கள். தனியார் பள்ளிக்கூடங்களில் தான், அதுவும் ஏகப்பட்ட கேபிடேஷன் பீஸ் கொடுத்து சேர்க்கத் துடிப்பார்கள். அரசுப் பள்ளிகளில் தரம் இருக்காது, பிள்ளைகள் கெட்டுப் போய் விடுவார்கள், சரியாக படிக்க மாட்டார்கள், சமூகத்தில் மரியாதை இருக்காது என்பது இவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது...

இந்த நிலையில் ஒரு மாவட்ட கலெக்டர் தனது பிள்ளையை சாதாரண ஒரு அரசுப் பள்ளியில் 2வது வகுப்பில் சேர்த்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார். இவர் நேற்று தனது மனைவி ஸ்ரீவித்யா, மகள் கோபிகா ஆகியோருடன் ஈரோடு, குமலன் குட்டை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கூடத்திற்கு வந்தார். விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்குள் அலைமோதிக் கொண்டிருந்தனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். ஈரோடு தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி, மாணவர் சேர்க்கைப் பணியை பார்வையிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது கலெக்டர் அங்கு வந்ததால் அவர்களுக்கு குழப்பமானது. என்னவோ ஏதோ என்று அவரை நோக்கி தலைமை ஆசிரியையும், தொடக்கக் கல்வி அதிகாரியும், ஆசிரியர்களும் விரைந்து வந்தனர். அப்போது அவர்களிடம் தனது மகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வந்திருப்பதாக கலெக்டர் கூறவே அவர்களது குழப்பம் அதிர்ச்சியானது. பிறகுதான் அவர்கள் சுதாரித்து தலைமை ஆசிரியை அறைக்கு கலெக்டர் குடும்பத்தினரை அழைத்துச் சென்றனர்.

அங்கு தலைமை ஆசிரியை தனது இருக்கையில் கலெக்டரை அமரச் சொன்னார். அதை மறுத்து விட்ட கலெக்டர் பெற்றோர்கள் வந்து அமருவதற்காக போடப்பட்டிருந்த நீண்ட பெஞ்ச்சில் அமர்ந்தார். பிறகு தனது மகளை தமிழ் மீடியத்தில் 2வது வகுப்பில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அதை தலைமை ஆசிரியையிடம் கொடுத்தார். பின்னர் கோபிகாவை பள்ளியில் சேர்த்தனர்.



அதன் பின்னர் தனது மகள் சத்துணவு சாப்பிடவும், சீருடை அணியவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் கலெக்டர். பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட கோபிகா தனது வகுப்புக்குச் சென்று மற்ற பிள்ளைகளுடன் அமர்ந்து படிக்க ஆரம்பித்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.

கலெக்டர் வந்து தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டு, சத்துணவும் சாப்பிட ஏற்பாடு செய்து விட்டுச் சென்ற சம்பவம் அந்தப் பள்ளிக்கூடத்தை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஈரோடு மாவட்டத்திற்குமே இது மிகப் பெரிய செய்தியாக அமைந்துள்ளது. ஏன் தமிழக மக்களுக்கும் இது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அலுவலகத்தில் சாதாரண அலுவலக உதவியாளர் வேலை பார்ப்பவர் கூட தனது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் பெரும் பணம் கொடுத்து சேர்க்கத் துடிக்கும் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவர் சாதாரண அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தது ஆச்சரியமாகவே உள்ளது. ஆனால் கலெக்டர் ஆனந்தகுமாருக்கு இது பெரிய விஷயமாகவே இல்லை. தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததை அவர் விளம்பரப்படுத்தவும் விரும்பவில்லை. மாறாக இது எனது தனிப்பட்ட விஷயம் என்று மட்டும் அடக்கமாக அவர் கூறினார்.

தனது செயலின் மூலம் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மறைமுகமாக ஒரு செய்தியை விட்டுச் சென்றுள்ளார் கலெக்டர் ஆனந்தக்குமார். அரசுப் பள்ளிகள் தரமானவையே, அங்கு படிக்க வைப்பதால் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகி விடாது. அரசுப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் அரசு ஊழியர்களாவது மதிப்பும், மரியாதையும்,அங்கீகாரமும் தர வேண்டும் என்பதே அது.

பாராட்டப்பட வேண்டியவர்தான் ஆனந்தக்குமார்.

தனியார் பள்ளிகளில் கட்டனக்கொள்ளை என்று போராடிவரும் பெற்றோர்களுக்கும் இதில் ஒரு படிப்பினையும் உள்ளது. ஏற்கனவே சென்னை, நெல்லையில் உள்ள அரசு மாநகராட்சி பள்ளிகள் கல்வி தரத்தில் முன்னிலையில் உள்ளது. இங்கு படித்த மாணவ மாணவிகள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று அதிக அளவில் தேர்ச்சிபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சில வருடங்களாக அரசு பள்ளிகள் கல்வி தரத்தில் முன்னேறி வருவதும், சமச்சீர் கல்வி நடைமுறையில் வரும்போது அது இன்னும் அதிகரிக்கும்.

மேலும் இந்த கலெக்டரை போல், அத்தனை அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலே சேர்க்க வேண்டும் என்று அரசு உத்தரவு போடவேண்டும். அப்போதுதான் அரசு பள்ளிகளின் தரம் உயரும். ஏனெனில் இவர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் கல்வி கற்கும் போது, நிச்சயம் இந்த அதிகாரிகள் இங்குள்ள கல்வி மற்றும் பள்ளி கட்டிட வசதிகளை மேம்படுத்த அதிக அக்கறையுடன் முனைவார்கள்.
 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.