முந்தைய அரசு பல கல்வியாளர்களையும், உயர் அதிகாரிகளையும் கலந்தாலோசித்து பல ஆய்வுகளுக்குப்பின் கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறை இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு முந்தைய அரசு கொண்டு வந்த காரணத்தாலோ? என்னவோ? சமச்சீர் கல்வி முறையில் பல குறைகள் உள்ளன என சுட்டிக்காட்டி அதை அப்படியே முடக்க முயல்கிறதா? அல்லது அதில் திருத்தம் கொண்டு வந்து நீக்கப்பட வேண்டிய பாடங்களை நீக்கி மேலும் சிறப்புடன் வெளியிட்டு மாணவர்களின் கல்வியை செம்மைபடுத்த விரும்புகிறதா? என்று ஒன்றும் புரியாத புதிராகவும், பேயரைந்த நிகழ்வாகவும் தான் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இன்று இருந்து வருகிறது...
இதில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூல் செய்யும் கல்விக்கட்டணத்தில் ஆயிரத்தெட்டு குழப்பங்களும், வரம்புமீறல்களும், அதிருப்திகளும் அதனால் அரசால் நியமிக்கப்பட்ட கமிட்டிகளும் (ரெங்கராஜன் மற்றும் ரவி ராஜ பாண்டியன் கமிட்டிகள்), பெற்றோர்களின் போராட்டங்களும், மாணவர்களின் மனக்குமுறலும் என இன்று தரமான கல்வி என்ற இலக்கு பலரால் உதைக்கப்படும் ஒரு கால்பந்து போல் ஆகிவிட்டது.
இதில் தனியார் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பில் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை ஏற்றுக்கொண்டவர்கள் ஒரு குழுவாகவும், அதில் அதிருப்தி அடைந்து அது போதவில்லை அரசு அதை மேலும் உயர்த்த வேண்டும் என்று கூறி அதற்காக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கருத்து கொண்டவர்கள் மற்றொரு குழுவாகவும் செயல்பட்டால் தரமான கல்வி என்பது ஏட்டளவில் இருந்து எட்டாக்கனியாகி விடுமோ என்ற அச்சம் எல்லாத்தரப்பு மக்களிடமும் நிலவி வருவது உண்மையே.
எது,எதெற்கெல்லாம் வெளிநாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் இக்காலத்தில் கல்வித்துறையில் மட்டும் அவ்வாறு வெளிநாடுகளை ஒப்பிட்டு அதன் வளர்ச்சிகளையும், முன்னேற்றங்களையும், முறைகளையும் மத்திய, மாநில அரசுகள் நம் நாடில் கொண்டு வர முனைப்பும், முயற்சியும் காட்டதது ஏன்? படித்தவர்கள் நாட்டில் பெருகி விட்டால் அரசியல்வாதிகள் பந்தாடப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சமா? இல்லை காலமெல்லாம் தனக்கு பல்லக்கு தூக்குபவர்களாக மட்டும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறதோ? என்னவோ தெரியவில்லை?
நாட்டின் குடிமக்கள் கள்ளச்சாரயம் காய்ச்சி அதனால் அவர்களும், அவர்கள் குடும்பமும் சீரழிந்து நாசமாகிறது என முதலைக்கண்ணீர் வடிக்கும் மத்திய, மாநில அரசுகள் அதற்காக தானே முன்னின்று நடத்தும் "டாஸ்மாக்" சாராயக்கடைகளும், அதற்கு கொடுக்கும் மானியங்கள் என பல சலுகைகள் கொடுத்து ஊக்கப்படுத்தும் இவ்வேளையில் மக்களுக்கு தரமான கல்வி எல்லோருக்கும் பாரபட்சமின்றி கொடுத்து அதன் மூலம் அவர்கள் குடும்பங்களுக்கும், ஊருக்கும், உலகுக்கும் ஒளியேற்றி வைக்க கல்வித்துறையை மத்திய, மாநில அரசே முன்னின்று நடத்தாதது ஏன்? அதில் அதிக வருமானம் இண்மையாலா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா?
தேர்தல் சமயத்தில் ஏதேச்சதிகாரம் பெற்று ஜனாதிபதியின் நேரடி பார்வையில் இயங்கி தனித்துறையாக எவ்வித தலையீடும் இன்றி சிறப்புடன் செயல்படும் தேர்தல் ஆணையம் போல் கல்வித்துறையையும் ஜனாதிபதியின் நேரடி பார்வையில் இயங்கும் ஒரு தனித்துறையாக கொண்டு வந்தால் என்ன? கண்டதிற்கெல்லாம் கோடானகோடிகளை ஒதுக்கீடு செய்யும் மத்திய, மாநில அரசுகள் கண் போன்ற கல்விதுறையை கண்டுகொள்ளாமல் விடுவது ஏன்? உயிர்பிச்சை கேட்டு நிற்கும் ஒரு வறியவனுக்கு (கல்வித்துறை) உதவ முன்வராமல் ஓரளவு உணவு, உடை, இருப்பிடம் பெற்றிருப்பவனுக்கு (டாஸ்மாக்) ஓடோடிச்சென்று இன்னும் பல வசதிகள் செய்து கொடுக்க முனைப்பு காட்டுவது ஏன்? ஊறுகாய் வாங்கி கொடுத்து அவனை (சாராயம் குடிப்பவனை)மேலும் உற்சாகப்படுத்துவது ஏன்?
எங்களுக்கு இலவசமாக ஆடு,மாடுகள் தேவையில்லை, இலவச மிக்ஸியும், கிரைண்டரும் அவசியமில்லை, வண்ணத்தொலைக்காட்சியும் வராவிடில் நாங்கள் மாண்டுபோய் விடமாட்டோம். தாலிக்கு தங்கம் யாருக்கு வேண்டும்? இவை எல்லாவற்றையும் கனப்பொழுதில் வாங்கி வந்து சேர்க்கும் தரமான உயர் கல்வி மட்டும் போதும் எங்களுக்கு. அரசே தர இயலுமா? இல்லை காரணம் பல கூறி தப்பித்து ஓடுமா?
அமெரிக்காவே நம் மக்களின் கல்வித்திறமைகளையும், நாட்டின் புத்திசாலி பலரின் செயல்பாடுகளை நேரடியாக கண்டு வியந்து பாராட்டி மூக்கின் மேல் கை வைத்து நிற்கும் இந்த வேளையில் இப்படி அரசே கல்வித்துறையை அசிங்கப்படுத்தி பார்க்கலாமா?
அரசு இலவசமாக கொடுக்கும் ஆடு,மாடுகளால் அன்றாட வீட்டின் பால் தேவை நிறைவேரலாம். முறையான, தரமான கல்வியை மக்களுக்கு கொடுப்பதால் பல பால் பண்ணைகளையே அவர்களால் உருவாக்கப்படலாம் அல்லவா? அதன் மூலம் வேலையில்லாத்திண்டாட்டத்திற்கே வேட்டு வைக்கலாம் இல்லையா?
இன்றைய காலகட்டத்தில் ரோட்டோரம் படுத்துறங்கும் பாமரனாக இருந்தாலும் சரி, மாடத்தின் பால்கனியில் கடல்காற்று வாங்கும் பணக்காரனாக இருந்தாலும் சரி தன் சந்ததிக்கு உயர்தர கல்வியை கொடுத்து விடுவதில் இருவரும் ஒரே நேர்க்கோட்டில் தான் பயணம் செய்கிறார்கள். ஒருவன் பணத்துடன் செல்கிறான் மற்றொருவன் வெறும் கையுடன் செல்கிறான். இதை நாடிப்பிடித்து பார்க்க நாம் ஒன்றும் மருத்துவ உயர்பட்டம் பெற வேண்டிய அவசியமில்லை. அரசுக்கு தெரியாததா என்ன? ஏன் இந்த மெத்தனம்? ஊரான் வீட்டு பிள்ளைக்கு உயர்கல்வி கொடுத்தால் தான் பிறந்த நாடல்லவா உலக அரங்கில் பிரகாசிக்கும்? வெறும் வாயிலல்ல உண்மையிலேயே மிளிரும்.
கல்வி என்னும் கண்களின் பார்வை மங்கச்செய்ய காரணமாக இருந்து விட்டு பிறகு தெளிவான பார்வைக்கு கண் கண்ணாடி இலவசம் என்று கொக்கரிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தும் கல்வியாளர்களின் கஷ்ட, நஷ்டங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அரசு நினைத்தால் குறைந்த கல்வி கட்டணத்தால் அவர்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை உங்கள் மானியம் மூலம் போட்டு கட்ட வேண்டியது தானே? அதை விட்டு விட்டு அவர்களை கடிவாளம் பூட்டப்படாத குதிரை போல் அவர்கள் இஷ்டத்திற்கு அவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? பொருளாதாரத்தில் போதிய அளவைத்தொட்டவன் தன் பிள்ளைகளை நீர் கேட்கும் தொகையுடன் கூடுதலாகவே செலுத்தி அவன் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து பரவசமடைவான். போதிய வருமானம் இல்லாதவன் தன் பிள்ளைகளை சேர்க்க நாணயமானவனாக இருந்தால் நடுத்தெருவில் தான் வந்து நிற்பான். தீயகுணம் உடையவனாக இருப்பின் தவறான வழியை (லஞ்சம், திருட்டு, கொள்ளை) தேர்ந்தெடுத்து எப்படியும் தன் பிள்ளையை சேர்த்து விட முயற்சிக்கமாட்டான் என நாம் எப்படி உறுதியாக கூற முடியும்?
நாட்டில் மக்களின் மருத்துவ சிகிச்சையை தான் இலவசமாக்க இயலவில்லை. கல்வித்துறையிலாவது முற்றிலும் இலவசமாக இல்லாவிட்டாலும் ஓரளவு நீதி, நேர்மையாக மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்ளலாமல்லவா? கட்டுரைகள் பல எழுத நாம் ஒன்றும் பெரும் கல்வியாளன் அல்லன். அன்றாடம் காணும் காட்சிகளால் அல்லறும் சாதாரன இந்தியக் குடிமகன். நம் அன்றாட அவலங்களும், ஆதங்கங்களும், அவசிய தேவைகளும் அரசின் பார்வைக்கு சென்றடையுமா? இல்லை நாடு உனக்கு என்ன செய்தது என்று பார்க்காதே; நாட்டிற்காக நீ என்ன செய்தாய்? என்று நம்மீதே கேள்வி கேட்டு நிற்குமா? என வரும் காலம் தான் பதிலளிக்க வேண்டும்.
இது எந்த ஆட்சியையும்/கட்சியையும் குறை சொல்லியோ அல்லது கொடிப்பிடித்தோ எழுதப்பட்டதல்ல. காலத்தால் கட்சிகள் மாறலாம் அதனால் காட்சிகளும் மாறலாம். ஆனால் கல்விக்கண்ணில் மண்ணைத்தூவி அதில் மருத்துவம் பார்க்க அரசு முயல வேண்டாம் என்பதே சாதாரன ஒரு குடிமகனின் நடுநிலையான கருத்தாகவும், ஏக்கமாகவும் இருக்கும். சொல்வது எம் உரிமையானாலும் அதை செவிசாய்த்து கேட்பது அரசின் கடமையல்லவா?
அயல்நாடுகளில் பல அல்லல்களுக்கிடையே வேலை பார்த்து நம் நாட்டு அரசுக்கு அன்னியச்செலாவணியை அள்ளித்தரும் பல லட்ச இந்தியக்குடிமகன்களில் நானும் ஒருவனாய், நாட்டு மக்களின் இன்றைய இன்றியமையாத்தேவையை இங்கு எடுத்துரைத்தவனாய்....
- மு.செ.மு. நெய்னா முஹம்மது
- நன்றி : அதிரைநிருபர்
No comments:
Post a Comment