வேலூர் அருகே நேற்றிரவு பஸ் விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இதுகுறித்து விதி 110-ன்கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அவர் அறிக்கை வெளியிட்டார் அதன் விவரம்:
தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த குளிர்சாதனப் பேருந்து நேற்றிரவு 9 மணிக்கு கோயம்பேட்டில் இருந்து பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது.
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம் அவலூர் என்னும் இடத்துக்கு அருகே சென்றபோது அங்கு நின்றிருந்த லாரியைத் தவிர்க்கும்பொருட்டு ஓட்டுநர் பஸ்ஸை திடீரென திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின்மீது மோதி 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. இதில் குளிர்சாதன இயந்திரம் வெடித்து தீப்பிடித்து பஸ் முழுவதும் எரிந்துவிட்டது.
பஸ்ஸில் பயணம் செய்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார்த்திகை ராஜன் என்ற ஒரே ஒரு பயணி மற்றும் பேருந்தின் ஓட்டுநர் இந்த விபத்தில் உயிர் பிழைத்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி நேற்று இரவு தகவல் கிடைத்ததும் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சின்னையா ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தேன்.
விபத்தில் மரணம் அடைந்த 22 நபர்களின் உடல்கள் கருகிய நிலையில் உள்ளதால் அடையாளம் காண இயலவில்லை. அவர்களின் சடலங்கள் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
பஸ்ஸில் பயணம் செய்தவர்களின் விவரம் அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் பட்டியலில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதை வைத்து பயணம் செய்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பஸ் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50 ஆயிரமும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment