எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை உடல்நலமில்லாமல், இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது அவருடன் நானும் அவரது நண்பர்கள் சிலரும் இருந்தோம். முதலமைச்சராக இருந்த கருணாநிதி போன் செய்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜே.கே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும். அவருக்கே உரித்தான பாணியில் ஜே.கே, “இது அன்புக்கட்டளையா, அரசாங்க கட்டளையா?” எனக் கேட்டார். கருணாநிதியின் பதிலுக்குப் பிறகு, “அப்படியானால் வருகிறேன்” என்று ஜே.கே சம்மதித்தார். சிறிதுநேரத்தில் கனிமொழி அங்கு வந்தார். ஜே.கேவிடம் உடல்நலம் விசாரித்தார். வெளியே காவல்துறை தலைகள் தெரிந்தன. ஆஸ்பத்திரியில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டதைப் பார்த்தேன். அருகில் நின்றிருந்தாலும் மிக உயரத்தில் கனிமொழி காட்சியளித்தார். முன்பெல்லாம் அவர் எழுத்தாளர் சங்கக் கூட்டங்களில், ஜனநாயக மாதர் சங்கக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இருக்கிறார். ஆட்டோவில் வந்து ஆட்டோவில் சென்றிருக்கிறார். அப்போதும் அவர் கருணாநிதியின் மகள்தான். ஆனால் அதிகாரத்தின் வளையத்திற்குள் இல்லை. அதுதான் வித்தியாசம்...
ஸ்டாலின், அழகிரி என அரசியல் வாரிசுகள் உருவாகி வலம் வந்த காலத்தில் கனிமொழி ஒதுங்கியே இருந்தார். பெண்ணியம் குறித்த விவாதங்களில், இலக்கியக் கூட்டங்களில் அவரது தலை சிலசமயங்களில் தெரிந்தது. அதுகுறித்த செய்திகள் எப்போதாவது பத்திரிகைகளில் வந்தது. சாத்தூரில் எழுத்தாளர் சங்கம் சார்பில் திட்டமிடப்பட்ட கலை இலக்கிய இரவுக்கு கவிஞர் கனிமொழியை அழைக்க வேண்டும் எனச் சொன்னார்கள். கனிமொழியின் போன் நம்பர் வாங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். மிக இயல்பாகப் பேசினார். முதலில் வருவதாக ஒப்புக்கொண்டார். அதன்பின் எந்த தேதி அவருக்கு சரியாக இருக்கும் என்றும், அவர் எப்படி வருகிறார் என்றும் மூன்று நான்கு முறை பேசினேன். பிறகு சில முக்கிய சொந்த வேலைகள் இருப்பதாகச் சொல்லி, வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார். அருகில் இருக்கிற நபரோடு பேசுவதாய்த்தான் அவருடனான உரையாடல்கள் இருந்தன. அப்போது அவர் கவிஞர் மட்டுமே.
சில வருடங்களில் கனிமொழி என்னும் பெயர் ஊடகங்களில் அடிக்கடி தென்பட ஆரம்பித்தது. சென்னை சங்கமம் தொட்டு அது நிகழ்ந்தது. உடனடியாக எம்.பியானார். அவரும் ஒரு அரசியல் வாரிசானார். தறிகெட்டு வேகமாக பறக்க ஆரம்பித்தார். கவிதைகள், இலக்கியக் கூட்டங்களில் இருந்து வேறு இடத்திற்கு பெயர்ந்து போனார். திரும்பிப் பார்க்க முடியாத தூரம் அது. ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்களுக்கும் அவரது கவிதைகளுக்கும் எந்த சம்பந்தம் இருக்க முடியும்? இப்போது விழுந்து கிடக்கிறார். அரசியல் அதிகாரத்தின் போதை எப்பேர்ப்பட்டது என்பதை அவரது வீழ்ச்சி சொல்லிக்கொண்டு இருக்கிறது.
முதன்முதலாக சுபமங்களாவில்தான் அவரது கவிதையொன்றை படித்தேன். அதைப் பற்றி அப்போது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, எழுதியவர் தி.மு.க தலைவரின் மகள் கனிமொழியென்றார்கள். ஆச்சரியமாய் இருந்தது. பின்னாளில் எழுத்தாளர் சா.கந்தசாமியும் அதே ஆச்சரியத்துடன், ‘கருவறை வாசனை’ புத்தகத்தைப் படித்துவிட்டு, ‘தந்தையின் சாயலற்ற எழுத்து’ எனச் சொன்னதையும் கேட்டு இருக்கிறேன். கனிமொழி என்னும் கவிஞர் அப்படித்தான் தெரிந்தார். உண்மையின் அருகில் நின்று பேசுவதாகவும், நவீன இலக்கியக் கூறுகள் கொண்டதாகவும் அவரது கவிதைகள் பொதுவாக இருந்தன. ஆனால் அவரது அரசியல் அப்படியில்லை. அச்சு அசலாய் தந்தையின் சாயல். அரசியலில் அதிகார உன்மத்தம் கொண்டவர்கள் எல்லோருக்கும் ஒரே சாயல்தான்.
கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்ததாகச் சொன்னாலும், கணவரைப் பிடித்தபடி கண்ணீர் விட்டிருக்கிறார். சிறையில் வாசிப்பதற்கு கண்ணாடியும், புத்தகங்களும் கேட்டு இருக்கிறார். முதலில் அவரது இந்தக் கவிதையை அவரேப் படிக்கட்டும்....
அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன் தலைசீவினேன், சில நண்பர்களைத் தவிர்த்தேன் சட்டைபோட்டுக் கொண்டேன், பல்துலக்கினேன், வழிபட்டேன், கல்யாணம் கட்டிக்கொண்டேன் காத்திருக்கிறேன் என் முறை வருமென்று...
நன்றி : தீராதபக்கங்கள்
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment