Latest News

அதிரை இஸ்லாமிக் மிஷனின் (AIM) கோடைக்கால பயிற்சி முகாம்

முன்னதாக AIM அறிவிப்புச் செய்தபடி, அதிரை இஸ்லாமிக் மிஷனும் ஏ.எல்.எம். பள்ளி நிர்வாகமும் இணைந்து நடத்திய இவ்வாண்டின் கோடைகாலப் பயிற்சி முகாம், கடந்த 01/05/11 முதல் 20/05/11 வரை மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்!



தீனியாத் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கம்ப்யூட்டர் பயிற்சி, Spoken English மற்றும் Personality Development முதலான பயிற்சிகளும் மாணவ மாணவியர்க்குப் பயிற்றுவிக்கப்பட்டன. சென்ற ஆண்டுகளின்போது, இலங்கையைச் சேர்ந்த மவ்லவிகள் இருவரும், காரைக்காலைச் சேர்ந்த ஆலிமாவும் பயிற்சியாளர்களாகக் கலந்துகொண்டு நடைபெற்ற இப்பயிற்சி முகாம், இவ்வாண்டு மிகச் சிறப்பாக, காரைக்கால் ஆலிமாவின் திறமையான தலைமையின் கீழ் உள்ளூரைச் சேர்ந்த பத்து ஆசிரிய ஆசிரியைகளைக் கொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது.


எமது வேண்டுகோளை ஏற்றும், ஆர்வத்துடன் அவர்களாகவே முன்வந்து பத்துப் பயிற்சியாளர்கள் ஏறத்தாழ எட்டு வகுப்புகளைத் திறமையுடன் நடத்தித் தந்தது குறிப்பிடத் தக்கது, மாணவர்களுக்குத் தனியாகவும் மாணவிகளுக்குத் தனியாகவும், மாணவிகளுள் பெரிய வகுப்பு மாணவிகளுக்குத் தனியாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.






இவ்வாண்டின் பயிற்சி முகாமில் இன்னொரு குறிப்பிடத் தக்க அம்சமும் உண்டு. சென்ற ஆண்டுகளில் ஓரிரு தெருக்களைச் சேர்ந்த மாணவியர் மட்டுமே கலந்து கொண்டதற்கு மாற்றமாக, இவ்வாண்டு நமதூரின் எல்லாத் தெரு மாணவ மாணவியரும் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்த ஆண்டின் வரவேற்புச் சூழல் நடத்துனர்களை வியப்பில் ஆழ்த்தி ஆர்வம் கொள்ள வைத்தது. மொத்த மாணவ மாணவியரின் எண்ணிக்கை முன்னூறு பேர் என்று பதிவுகள் காட்டுகின்றன.



காலை ஒன்பது மணி முதல் பகல் ஒரு மணிவரை பல பிரிவுகளாகப் பயிற்சி வகுப்புகள் நடந்தன. இடையில் கால் மணி நேரம் சிறுவர் சிறுமியரின் விளையாட்டிற்காக ஓய்வு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் வகுப்புகள் தொடங்கியபோது எல்லாருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது. ஏ.எல்.எம். பள்ளி வளாகத்தின் இயற்கைச் சூழல், குழந்தைகளின் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தூண்டி, அவர்களுக்குப் புத்துணர்ச்சியை அளித்தது.



இடையில், தஞ்சை மாவட்ட எஸ்.ஐ.ஓ (Students Islamic Organisation) சார்பில், 'கலிமா விளக்கம்', 'இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டது ஏன்?' முதலான தலைப்புகளில் பொதுச் சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டன. இவையன்றி, கோவையிலிருந்து சிறப்பு அழைப்பாளராக வந்த மனோதத்துவ அறிஞர் டாக்டர் முகைதீன் அவர்களைக் கொண்டு Students Psychology பயிற்சி வகுப்பு நடந்ததும் குறிப்பிடத் தக்கவையாகும்.





இப்பயிற்சி முகாமின்போது, மாணவ மாணவியரின் ஒழுக்க விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அன்றாட வழக்கங்களை வணக்கங்களாக மாற்றும் (உணவுண்பது, தண்ணீர் குடிப்பது போன்ற) ஒழுக்கப் பயிற்சிகளை அளித்து, அவர்களை இஸ்லாமிய அச்சில் வார்த்தெடுக்கப்பட்டது.



நடத்தப்பட்ட பாடங்களில் தேர்வுகளும் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவ மாணவியரின் திறமைகளையும், அவர்கள் எந்த அளவுக்கு இப்பயிற்சி முகாமினால் பயன் பெற்றுள்ளனர் என்பதையும் அறிந்து, அவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்க வாய்ப்புண்டாயிற்று. முன்னதாக நாம் அறிவிப்புச் செய்த எல்லாப் பாடங்களிலும் பயிற்சிகள் நடந்தது எமக்கு மன நிறைவைத் தருகின்றது.



இப்பயிற்சி முகாமில் குறிப்பிடத் தக்க இன்னொரு அம்சமும் உண்டு. நமதூரின் தூரமான தெருக்களிலிருந்து மாணவ மாணவியரைப் பாதுகாப்புடன் அழைத்து வருவதற்கும், அவர்களை மீண்டும் கொண்டுபோய் விடுவதற்கும் வாகன ஏற்பாடு மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டது. இதில் ஏ.எல்.எம். பள்ளி நிர்வாகத்தின் பங்களிப்பு பாராட்டத் தக்கது. அவர்களின் பள்ளி வாகனம் (பஸ்) ஒவ்வொரு நாளும் ஆறு 'ட்ரிப்' அடித்து, எவ்விதப் பின்னடைவும் ஏற்படாமல் போக்கு வரத்து நடைபெற உதவிற்று. இது தவிர, இரண்டு தனியார் 'டெம்போ'க்களும் போக்குவரத்துப் பணியில் ஏற்பாடு செய்யப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.



இப்பயிற்சி முகாமின் முத்தாய்ப்பாக நிறைவு நாளான 20/05/11 அன்று ஏ.எல்.எம். வளாகம் விழாக் கோலம் பூண்டது. திரளான பெற்றோர்கள் (குறிப்பாகத் தாய்மார்கள்) மகிழ்ச்சியோடு கூடித் தம பிள்ளைகளின் திறமைகளைக் காணும் ஆர்வத்தில் திளைத்திருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மாலை சுமார் ஐந்து மணியளவில், 'அதிரை அறிஞர்', 'தமிழ்மாமணி', புலவர் அஹ்மது பஷீர் ஹாஜியாரின் தலைமையில் பள்ளி வளாகத்தில் பொதுக் கூட்டம் தொடங்கிற்று. அதிரை அஹ்மதின் AIM, ALM முதலான பங்களிப்பாளர்கள் பற்றிய அறிமுகவுரையைத் தொடர்ந்து, தலைவரின் அறிவார்ந்த உரை நிகழ்ந்தது.



அதனைத் தொடர்ந்து, சிறுவர் சிறுமியரின் அரங்கு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. விழாவின் தொடக்கத்தில் கிராஅத் ஓதிய மாணவன் செய்யது புகாரியைத் தொடர்ந்து, தொடக்கமாக ஏ.எல்.எம். ஆரம்ப வகுப்பு மாணவியான சிறுமி ஆயிஷா ஜமாலுத்தீனின் அசத்தலான மூலமும் மொழிபெயர்ப்பும் கொண்ட ஹதீஸ் ஒப்புவித்தல் நிகழ்ச்சி, அனைவரின் பாராட்டையும் பெற்றது. பத்து ஹதீஸ்களைப் பச்சிளங் குழந்தையின் வாய்மொழியாகக் கேட்ட மேடைப் பேச்சாளர்களும் பெற்றோரும் பார்த்துக் கேட்டு மகிழ்ந்தனர்.



அடுத்தொரு தமிழ்ப் பாடல். இது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வைப் பற்றியது. இதனை, மாணவிகள் ஃபாத்திமா ஷஹாபுத்தீன் (மேலத்தெரு), தாஹிரா முஹம்மது அமீன் (பிலால் நகர்), ஃபாயிஜா சாகுல் ஹமீத் (தரகர் தெரு) ஆகியோர் அழகுறப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.



இதனையடுத்து, அஹ்மது ரிழா புர்ஹான் நூருத்தீன் (கடல்கரைத் தெரு) மாணவன், 'தர்மம்' என்ற தலைப்பில் சொற்பொழிவொன்றை நிகழ்த்தினான்.



'எது சிறந்த கல்வி?' என்ற தலைப்பில், ஃபாத்திமா அன்சாரி (புதுத்தெரு) என்ற (Modern Girl) மாணவியை மையமாக வைத்து, இல்ஹாம் நிஜாமுத்தீன் (நடுத்தெரு), ஃபாத்திமா ஷிஹாபுத்தீன் ஆகிய இருவரும் தீன்-துன்யா தழுவிய கல்வியை வலியுறுத்தி, ஓர் உரையாடலை நிகழ்த்தினர்.



ஆண்-பெண்கள் ஆடை ஒழுக்க முறைகளை விளக்கி, ஃபவ்ஜான் அலி (s/o. Babar Ali) என்ற தரகர் தெரு மாணவன் அடுத்து ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினான்.



அடுத்தொரு அசத்தலான அரபிப் பாட்டை இஸ்ரத் ஃபாத்திமா ஜாகிர் ஹுசைன் (கீழத்தெரு), இல்ஹாம் நிஜாமுத்தீன் (நடுத்தெரு) ஆகிய இருவரும் பாடி இன்புறச் செய்தனர்.



செய்யது புகாரி (கீழத்தெரு), முஹம்மத் தாலிப் (சி.எம்.பி. லைன்), அப்துல் பாசித் (ஹாஜா நகர்) ஆகிய மாணவர்கள் மூவரும் இணைந்த 'இதுதான் உலகம்' எனும் உரையாடல் அடுத்து நிகழ்ந்தது.



'உண்மையால் ஏற்படும் பயன்கள்' என்னும் தலைப்பில் நூருல் அஃப்ரீன் சிக்கந்தர் என்ற மேலத்தெரு மாணவி தரமான உரையொன்றை நிகழ்த்தினார்.



கோடை விடுமுறையின்போது ஊட்டிக்கு 'டூர்' போன மாணவியை மையமாக வைத்து, பயிற்சி முகாமின் பயன்களை அவளுக்கு எடுத்துக் கூறும் விதத்தில், 'பயிற்சி முகாமின் பயன்கள்' என்ற தலைப்பில், பெனாசிர் பேகம் நஜிபுதீன் (தரகர் தெரு), அல்சுமையா ஷேக் பரீத் (தரகர் தெரு), ஹாலிதா ஜாகிர் ஹுசைன் (கீழத்தெரு) ஆகிய மாணவிகளின் உள்ளத்தைத் தொடும் உரையாடல் ஒன்று அடுத்து இடம் பெற்றது.



இறுதியாக, 'மார்க்கக் கல்வியின் அவசியம்' பற்றி கடல்கரைத் தெரு மாணவன் லுத்ஃபுல்லாஹ் ஆற்றிய உரை முத்தாய்ப்பாக அமைந்தது.



மரிபுத் தொழுகைக்கான இடைவேளைக்குப் பின் கூட்டம் மீண்டும் தொடங்கிற்று. இதில் ஆரம்பமாக, மாணவ மாணவியரின் மேடை நிகழ்ச்சிகளால் உந்துதல் பெற்ற புலவர் பஷீர் ஹாஜியார் அவர்கள் மிகச் சிறந்த பாராட்டுரை ஒன்றை நிகழ்த்தினார்கள்.



இதனையடுத்து, சென்னையிலிருந்து வந்திருந்த 'இளம்பிறை' பத்திரிகைப் பிரதிநிதி சகோ. ரிஸ்வான் அவர்கள் எஸ்.ஐ.ஓ. பற்றியும் மாணவ மாணவியருக்கான மாதப் பத்திரிகையான 'இளம்பிறை' பற்றியும் அறிமுகம் செய்து சிற்றுரை ஒன்றை நிகழ்த்தினார்.



பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு முன்னர், சகோ. அன்சாரி ஃபிர்தவ்சியின் சிறப்புச் சொற்பொழிவு, கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் அமைந்தது.



சிறப்பு நிகழ்ச்சியான 'பரிசளிப்பு' பின்னர் தொடங்கிற்று. பரிடளிப்புப் பட்டியல் மிக நீண்டது. அதனால், சுருக்கமாக அதன் பிரிவுகளை மட்டும் தருகின்றோம்:



•பயிற்சி முகாமில் விடுப்பின்றித் தொடர்ந்து வந்த அறுபத்து மூவருக்குப் பரிசுகள்.



•குர்ஆன் சூரா போட்டியில் வெற்றி பெற்ற பதினான்கு பேர் தரமான பரிசுகளைப் பெற்றனர்.



•ஹதீஸ் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்ற பதினாறு மாணவ மாணவியர் பரிசுகளைப் பெற்றனர்.



•துஆக்கள் மனனம் பிரிவில் இருபத்தொரு மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுப் பரிசு பெற்றனர்.



•இஸ்லாமிய அடிப்படைகள் கொள்கையான 'அகீதா' போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்ற பதினேழு பேர் பரிசுகளைப் பெற்றனர்.



•பேச்சுப் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்ற ஆறு பேர் தரமான பரிசுகளைப் பெற்றனர்.



•Spoken English பிரிவில் சேர்ந்து வெற்றி பெற்ற சிறிய வகுப்பு மாணவர்கள் எட்டு பேர் பரிசு பெற்றனர்.



•'சீரத்துன்நபி' போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற ஆறு பேர் பரிசில்களைப் பெற்றனர்.



•'தாஜ்வீதுல் குர்ஆன்' பிரிவில் உயர் வகுப்பு மாணவியர் மூன்று பேர் தரமான பரிகள் பெற்றனர்.



•தமிழ்க் கட்டுரைப் போட்டியிலும் உயர் வகுப்பு மாணவிகள் மூவர் தரமான பரிசுகளைப் பெற்றனர்.



•மேடை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மிகச் சிறப்பாகத தம் திறமைகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் சமமான பரிசுகளும் வழங்கப்பட்டது.



நிறைவாக, நன்றி நவிலலுடன் விழா சிறப்பாக முடிவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்!
தகவல் & புகைப்பட உதவி: S.M. அப்துல் காதர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.