மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸýக்கு
வாக்களித்திருப்பதன் மூலம், ஆட்சி மாற்றத்தின் மூலம் காட்சி மாற்றம்
ஏற்பட்டு விடாதா என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் மேற்கு
வங்க வாக்காளர்கள்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கூட்டணியினரின் ஆட்சி 1977-ல் அமைத்ததே
எதிர்பாராத ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். அவசரநிலைச் சட்டமும்
நெருக்கடி நிலைமையும் மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் கோபத்தையும்
காங்கிரஸýக்குச் சம்பாதித்துக் கொடுத்திருந்த நேரம் அது. 1977 பொதுத்
தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் ஜனதா கட்சியுடன் தேர்தல் கூட்டணி
அமைத்துப் போட்டியிட வேண்டும் என்றுதான் விரும்பினார்கள். அப்படி ஒரு...
கூட்டணி அமையாமல் போனால், வாக்குச்சிதறல் ஏற்பட்டு அது காங்கிரஸ்
கட்சிக்குச் சாதகமாகிவிடக் கூடும் என்று பயந்தனர்.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தலில்,
ஜனதாக் கட்சிக் கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகள் கோரிய இடங்கள் 120
மட்டுமே. ஜனதாக் கட்சி அதற்கு உடன்பட்டிருந்தால் ஒருவேளை ஜனதாக்
கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி மேற்கு வங்கத்தில் 1977-ல்
அமைந்திருக்கக் கூடும். ஆனால், இடதுசாரிக் கட்சிகளுக்கு 120 இடங்கள்
ஒதுக்குவதுகூட அதிகம் என்று ஜனதாக் கட்சித் தலைவர்கள் கருதியதால்,
இடதுசாரிகள் தனி அணி அமைத்து ஜோதிபாசு தலைமையில் போட்டியிட்டனர்.
1977 தேர்தல் முடிவுகள் காங்கிரஸýக்கு மட்டுமல்ல, ஜனதாக் கட்சிக்கும்
மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 20 இடங்களில் மட்டுமே காங்கிரஸýம், 29
இடங்களில் ஜனதாக் கட்சியும் வெற்றிபெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர,
இடதுசாரிக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
1977-ல் ஜோதிபாசு தலைமையில் ஆட்சியில் அமர்ந்த இடதுசாரிக் கூட்டணி, 34
ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறது.
அதுவும் 56 வயதான மம்தா பானர்ஜி என்கிற பெண்மணியிடம், ஜோதிபாசு, பிரமோத்
தாஸ்குப்தா, ஹரேகிருஷ்ண கோனார், பினாய் சௌதரி, சித்தா பாசு, திரிதீப்
சௌத்தரி, இந்திரஜித் குப்தா, பூபேஷ் குப்தா, கீதா முகர்ஜி போன்ற
மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக், புரட்சிகர
சோஷலிஸ்ட் கட்சித் தலைவர்களால் உருவாக்கப்பட்டு கட்டிக் காக்கப்பட்ட
கோட்டை தகர்க்கப்பட்டிருக்கிறது.
இடதுசாரிக் கூட்டணியின் வெற்றிக்கு எதெல்லாம் அன்று காரணிகளாக இருந்தனவோ
அவையெல்லாம் அந்தக் கூட்டணியின் வீழ்ச்சிக்கும் காரணிகளாக
அமைந்திருப்பதுதான் வேடிக்கை. இடதுசாரிக் கூட்டணியின் செல்வாக்குக்கு
மிகப்பெரிய காரணமாக இருந்தவை முதலில் நிலச்சீர்திருத்தம். இரண்டாவதாக,
பஞ்சாயத்து அமைப்புகள்.
பெரு நிலச்சுவான்தார்களின் கைகளில் இருந்த விளைநிலங்களை, "உழுபவனுக்கே
நிலம்' என்கிற சட்டத்தின் மூலம் பகிர்ந்தளித்து, கிராமப்புற விவசாயிகளின்
வாழ்வில் இடதுசாரிக் கூட்டணி அரசு ஆரம்ப காலங்களில் ஒளியேற்றியது.
நாளாவட்டத்தில், சிறு சிறு விவசாயிகளால் முறையாக விவசாயம் செய்ய
முடியாமலும், விவசாயம் லாபகரமாக இல்லாமல் போனதால் அவர்கள் வாழவும்
முடியாமல் விவசாயத்தைக் கைவிடவும் முடியாமல் போனது. அது முப்பது
ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரிக் கூட்டணியின்மீதான வெறுப்புக்குக்
காரணமாகி இருக்கிறது.
இடதுசாரிக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றபோது இந்தியாவின் மொத்த தொழில்
உற்பத்தியில் 10% மேற்கு வங்கத்தின் பங்காக இருந்ததுபோக, இப்போது 34
ஆண்டுகளுக்குப் பிறகு அது 5%-க்கும் குறைவாகி இருக்கிறது. இந்த நிலைமையை
மாற்ற விரும்பிய முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா,
சிங்கூரிலும், நந்திகிராமிலும் தொழிற்சாலைகள் அமைக்க நிலங்களைக்
கையகப்படுத்த முயற்சித்தபோது, விவசாயிகள் வெகுண்டெழுந்தனர். எந்த
விவசாயிகளுக்கு நிலச்சீர்திருத்தத்தின் மூலம் இடதுசாரிக் கூட்டணி மரியாதை
தேடிக் கொடுத்ததோ, அதே விவசாயிகள் இப்போது இடதுசாரிகளுக்கு எதிராக
வாக்களித்திருக்கும் அவலம் அரங்கேறி இருக்கிறது.
பஞ்சாயத்துகளை இடதுசாரிக் கூட்டணி அரசு வலுப்படுத்தியது. அதிகாரப்
பகிர்ந்தளிப்பு நிஜமாகவே மேற்கு வங்கத்தில் உறுதி செய்யப்பட்டது. முதல்
பத்து ஆண்டுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் முறையாக, ஏன், சிறப்பாகவே
செயல்பட்டன. அதற்குப் பிறகுதான் சோதனைக்காலம் தொடங்கியது.
உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி அமைச்சரவைவரை மார்க்சிஸ்ட் கட்சியின்
இரும்புப் பிடி இறுகியது. போதாக்குறைக்கு, நிர்வாகம், காவல்துறை என்று
எல்லா தளங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி அனுதாபிகளும் நியமிக்கப்பட்டபோது,
சாதாரண பொதுஜனம் எரிச்சலடைந்தனர். ரேஷன் கடையிலிருந்து, காவல்
நிலையத்திலிருந்து எங்கு பார்த்தாலும் கட்சித் தொண்டர்களின் பிடியில்
எனும்போது, அவர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்கவோ, பொதுமக்களின்
குறைகளுக்குத் தீர்வு காணவோ யாருமில்லாத நிலைமை.
இப்படிப்பட்ட சூழலில்தான், இடதுசாரிக் கூட்டணியைப் பதவியிலிருந்து
இறக்குவதுதான் தனது ஒரே குறிக்கோள் என்று மம்தா பானர்ஜி கிளம்பியபோது,
மக்கள் மாற்றத்துக்கு ஆதரவாக வாக்களித்து அவரை ஆட்சிக் கட்டில் அமர்த்தி
இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் ஏழாவது முதல்வராகப் பதவி ஏற்க
இருக்கும் மம்தா பானர்ஜியை எதிர்நோக்கும் சவால்கள் ஏராளம். புத்ததேவ்
பட்டாச்சார்யா தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசைக் கண்ணை மூடிக்கொண்டு
எதிர்ப்பது என்பதைத் தனது அரசியல் வியூகமாக்கித் தேர்தலில் வெற்றியும்
பெற்று ஆட்சியையும் கைப்பற்றி இருக்கிறார் அவர். இடதுசாரிகளுக்கு
ஏற்பட்டதுபோலவே, அவருக்கு வெற்றி தேடித் தந்த அதே காரணிகள்
வருங்காலத்தில் அவருக்குச் சவாலாகவும் மாறக்கூடும்.
சிங்கூரிலும், நந்திகிராமிலும் போராட்டம் நடத்திய மம்தா பானர்ஜியை
நம்பித் தொழிலதிபர்கள் மேற்கு வங்கத்துக்கு வர முற்படுவார்களா? அப்படியே
வந்தாலும் மம்தாவால் விவசாயிகளை நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை
ஏற்றுக்கொள்ள வைக்க முடியுமா? மாவோயிஸ்ட்டுகளுடனான அவரது தொடர்பு,
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட மம்தாவுக்குத் தடையாக இருக்காதா? இப்படிப்பட்ட
சூழலில் மம்தா பானர்ஜி எப்படி மேற்கு வங்கத்தில் பொருளாதார வளர்ச்சியை
உறுதிப்படுத்தப் போகிறார்?
இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றி விட்டார், சரி. இனிமேல்தான்
மம்தா பானர்ஜிக்குத் தலைவலியே தொடங்கப் போகிறது
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment