Latest News

  

தமிழகம்7 திட்டங்களுக்கு முதல் நாளில் உத்தரவு

சென்னை, மே 16: படித்த ஏழைப் பெண்களின் தாலிக்கு அரை சவரன் தங்கம்
இலவசமாக வழங்கும் திட்டம் உள்பட ஏழு திட்டங்களை செயல்படுத்துவதற்கான
உத்தரவுகளில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை மாலை கையெழுத்திட்டார்.

 காலையில் முதல்வர் பொறுப்பை ஏற்றதும் மாலையில் புனித ஜார்ஜ் கோட்டை
தலைமைச் செயலகத்துக்கு வந்து பணிகளைத் தொடங்கினார். முன்னதாக, செயலக
வளாகத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைமைச் செயலக...
சங்கத்தின் சார்பில் மலர் தூவி அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சாரங்கி, அவருக்கு மலர்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.

 இதன்பின், கோட்டையில் உள்ள தனது அறைக்குச் சென்று பணிகளைத் தொடங்கினார் ஜெயலலிதா.
 ஏழு உத்தரவுகளில் கையெழுத்து: அதிமுக தேர்தல் அறிக்கையில்
அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் அதற்கான
உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

 முதல் கட்டமாக ஏழு திட்டங்களை அமல்படுத்துவதற்கான உத்தரவுகளை அவர்
பிறப்பித்தார். இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக இப்போது ரூ.25 ஆயிரம்
வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன், மணப்பெண்ணுக்கு தாலி செய்ய அரை சவரன்
தங்கம் இலவசமாக வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.
இதைச் செயல்படுத்துவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டேன்.
 இளநிலைப் பட்டம், டிப்ளமோ பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை
ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும். மேலும், மணப்
பெண்ணின் தாலிக்கு அரை சவரன் தங்கம் இலவசமாக அளிக்கப்படும். முதியோர்,
மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்களுக்கு மாத
உதவித் தொகையாக இப்போது ரூ.500 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.1,000 ஆக
உயர்த்தி வழங்கப்படும். இதற்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டேன்.

 இலவச அரிசி திட்டம்: பொது விநியோகத் திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக
வழங்கப்படும்.

 அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35
கிலோ அரிசியை இலவசமாக அளிப்பதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டேன்.

தமிழகத்தில் கடலோர மீன் வளத்தைப் பாதுகாக்க வேண்டி ஒவ்வொரு ஆண்டும் 45
நாட்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படும். இந்தத் தடை காலத்தில்
மீனவர்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது, ரூ.2,000 ஆக
அதிகரிக்கப்படுகிறது.

 அரசுப் பணிபுரியும் தாய்மார்கள் தங்களது குழந்தையைப் பேணிப் பாதுகாக்க
மகப்பேறு கால சலுகையாக 6 மாத கால மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்.
 தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த "சிறப்புத்
திட்டங்கள் செயலாக்கத் துறை' என்ற பெயரில் தனித் துறை ஒன்று
தொடங்கப்படும். இதற்கான அனைத்து உத்தரவுகளிலும் கையெழுத்திட்டேன் என்று
ஜெயலலிதா கூறினார்.

 சிறப்புத் திட்டங்கள் துறை அமைச்சர்: சிறப்புத் திட்டங்கள் துறையின்
அமைச்சராக எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்) நியமிக்கப்பட்டுள்ளார்

தகவல் : அதிரை M  அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.