மு. சுப்பையா
நமது நாட்டில் ஊழல், சர்வாதிகாரப் போக்கு, இயற்கை வளங்களைச் சுரண்டுதல் போன்றவை இப்போது முக்கியப் பிரச்னைகளாக உருவெடுத்துள்ளன. நீதிமன்றக் கண்டனங்கள், ஊடகங்களின் விமர்சனங்கள், விசாரணை அமைப்புகள் போன்றவற்றை நமது அரசியல்வாதிகள் கண்டுகொள்வதில்லை.
"இதெல்லாம் சகஜம்'. இந்த அவலங்களையெல்லாம் மாற்றும் சக்தி நமக்கு இல்லை என்ற மனப்பான்மைக்கு பொதுமக்களும் வந்துவிட்டனர். நிலைமை கைமீறிப் போவதைக் கண்டு சான்றோர்கள் திகைத்துப்போய் உள்ளனர்.
ராணுவ ஆட்சிதான் இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்று கருதக்கூடியவர்களும் நம்மிடையே உள்ளனர். ஆனால், இந்தப் பிரச்னைகளுக்கான நிரந்தரத் தீர்வைப் பற்றி யோசிக்கக்கூடியவர்கள் ஒரு சிலரே...
ராணுவ ஆட்சியோ அல்லது சர்வாதிகார ஆட்சியோ இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கப்போவதில்லை. இப்போதைய ஜனநாயக அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்வதன் மூலமே ஊழலையும், முறைகேடுகளையும் ஒழிக்க முடியும்.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலிடம், ஜனநாயக ஆட்சியிலும் பல குறைபாடுகள் இருப்பது பற்றி ஒருவர் சுட்டிக்காட்டினாராம். இதைவிட ஒரு சிறந்த முறை கண்டுபிடிக்கப்படும்வரை இந்த ஜனநாயக முறை இருப்பதே சிறந்தது என அவரிடம் சர்ச்சில் கூறினாராம்.
நாட்டின் நிர்வாக அமைப்பில் கீழிருந்து மேலே செல்லச் செல்ல அதிகாரம் குறைந்து கொண்டே வர வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் சிந்தனைதான் இப்போது நிலவிவரும் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வாக அமையும்.
நிர்வாக அமைப்பில் இப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில், நமது நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களை பல சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும்.
ஏற்கெனவே மொழிவாரியாக உருவாக்கப்பட்ட மாநிலங்களை, நிர்வாக வசதிக்காக பல சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மக்களிடையே இருக்கும் பிராந்திய மனப்பான்மை ஒழிந்து தேசப்பற்று வலுப்படும்.
மேலும், தங்கள் இனத்துக்கென்று தனிமாநிலம் வேண்டும் என்று ஒரு சில மாநிலங்களில் எழுந்திருக்கும் கோரிக்கைகளும் அடங்கிவிடும். மொழிக்கு என்று தனி மாநிலம் இல்லாத சூழ்நிலை உருவாகும்போது, இனத்துக்கென்று தனி மாநிலத்தை யாரும் கேட்கப் போவதில்லை.
சிறிய மாநிலங்கள் உருவாக்கப்படும்போது, வானளாவிய அதிகாரங்கள் அரசியல் தலைவர்களிடம் குவிந்து கிடப்பது தடுக்கப்படும். பிரம்மாண்ட நிலப்பரப்பையும், பல கோடி மக்களையும் ஆள்வதற்காகத்தான் நாம் இருக்கிறோம் என்ற எண்ணம் அரசியல்வாதிகளிடம் இருந்து அகலும். மக்கள் சேவைக்காகத்தான் இந்தப் பதவிகள், அதிகாரங்கள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன என்ற நிதர்சன உண்மை அவர்களுக்குப் புரியும்.
சிறிய மாநிலங்களை உருவாக்கினால் எளிதாக நிர்வாகம் செய்ய முடியும். தலைவர்களிடம் மக்கள் எளிதில் நெருங்கிச் சென்று தங்கள் குறைகளைத் தெரிவிக்க முடியும். வரம்பில்லா அதிகாரம், ஆயிரக்கணக்கான அதிகாரிகள் படை போன்ற அம்சங்கள் சிறிய மாநிலங்களில் இருக்காது. இதனால் ஊழல், முறைகேடுகள், இயற்கை வளங்களைச் சுரண்டுதல் போன்றவை நடைபெறும் வாய்ப்புகள் பெரும்பாலும் குறையும். தலைவர்களும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு பொறுப்புடன் பணியாற்றுவார்கள்.
சிறிய மாநிலங்களில், மகோன்னதமான இடத்திலிருந்து மக்கள் பிரதிநிதிகள் என்ற யதார்த்தமான நிலைக்கு நமது அரசியல்வாதிகள் வந்து விடுவார்கள். அந்நிலையில், தங்கள் வாரிசுகளை அரசியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடமிருந்து மறையும். வாரிசுகளும் அவர்களுக்கு விருப்பமுள்ள வேறு துறைகளுக்குச் சென்று விடுவார்கள்.
அதேநேரத்தில், நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற விருப்பம் உள்ள நல்லவர்கள் அதிகாரத்துக்கு வர வழி ஏற்படும். சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பெரிய அளவில் ஊழல், முறைகேடுகள், கலவரங்கள், போலி என்கவுண்டர்கள் நடைபெறுவதில்லை என்பது கண்கூடு.
இந்த நிர்வாகச் சீர்திருத்தங்களைப் படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும். முதல்கட்டமாக, மத்திய அரசிடம் அதிக அதிகாரங்களைக் கேட்கும் மாநில அரசுகள், தங்களுடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி மாற்றத்தைத் தொடங்கி வைக்க வேண்டும்.
மாநில அரசுகள் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவோம்
தகவல் : அதிரை M. அலமாஸ்
No comments:
Post a Comment