Latest News

  

2ஜி ஸ்பெக்ட்ரம்: கனிமொழி மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.


அதே நேரத்தில் இன்றைய குற்றப் பத்திரிக்கையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மற்றும் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது...

குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.

இந் நிலையில் சிபிஐ இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி, சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், இன்றைய குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை. கனிமொழி, சரத் குமாரின் பெயர்களே இடம் பெற்றன.

கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான கனிமொழி, 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான குற்றச் சதியில் இணைந்து செயல்பட்டதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா, நீரா ராடியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், குற்றப் பத்திரிக்கையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத் குமார் ரெட்டி ஆகியோருக்கு முறையே 20, 60 மற்றும் 20 சதவீத பங்குகள் உள்ளன.

சிபிஐ இன்று தாக்கல் செய்த துணைக் குற்றப் பத்திரிகையிலும் ஆ.ராசாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலையில் ஒதுக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ கூறியுள்ளது.

கனிமொழி, சரத் குமார் தவிர சினியுக் மற்றும் குசேகாவ் நிறுவனம் மற்றும் இந்த நிறுவனங்களின் பங்குதாரரான ஷாகித் உசேன் பல்வாவின் தம்பியின் பெயரும் இடம்பெற்றுள்ளது

தகவல் : அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.