Latest News

  

எங்கே போகிறது தமிழகம்?

க. ரகுநாதன்


நமது நாட்டின் அரசியல்வாதிகள் இரு வகைப்படுவர். தமது அரசியல் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோர் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக அரசியலில் ஈடுபடுவோர். இதில் பெரும்பாலானோர் அரசியலில் வளர்வதற்காகச் செயல்படுகின்றனர். வெகு சிலரே வளர்ச்சிக்கான அரசியலில் ஈடுபடுகின்றனர் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
 தமிழக சட்டப்பேரவைத் தேர்லில் போட்டா போட்டியாக வெளிவந்துள்ள தேர்தல் அறிக்கைகளைப் பார்க்கும்போது நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அரசியல்வாதிகளின் சொற்ப எண்ணிக்கையும் குறைந்து வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

வறுமையை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம், நல்லாட்சி தருவோம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, இலவசக் கல்வி, மருத்துவ சிகிச்சை அளிப்போம், அடிப்படைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவோம் என்பதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது "அவுட் ஆஃப் ஃபேஷ'னாகிவிட்டது.
 இதையெல்லாம் இதுவரை எந்த அரசும் நிறைவேற்றியதும் இல்லை, இனி செய்யப்போவதும் இல்லை என்று வாக்காளர்கள் உணர்ந்து கொண்டதாலோ என்னவோ தங்களது வாக்குகளை இலவசங்களுக்கு அளிக்கத் தயாராகி வருகின்றனர். ..

இந்தியாவை வல்லரசாக்கும் வகையில் அரசியல்வாதிகள் அனைவரும் வளர்ச்சிக்கான அரசியலில் ஈடுபட வேண்டும். அதுதான் இந்நாட்டுக்கு இப்போதைய தேவை என்று அறிவுறுத்திய அப்துல் கலாமை அளித்த தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை தலைகீழாக உள்ளது.

 ÷பசுமைப்புரட்சியை உருவாக்கி உணவு தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வித்திட்ட சி.சுப்பிரமணியம், கல்விக் கண் திறந்த காமராஜ், எதிர்கால இந்தியாவின்மீது குழந்தைகள் மனதில் நம்பிக்கையை விதைத்த அப்துல் கலாம் போன்றோரை நாட்டுக்கு வழங்கிய தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை இன்று இலவசங்கள் எனும் இருளால் சூழப்பட்டுள்ளது.

 இலவச அரிசியை வாங்கி, இலவச வெட்கிரைண்டரில் அரைத்து, இலவச காஸ் அடுப்பில் இட்லியாக்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கான்கிரீட் வீட்டில் உட்கார்ந்து, இலவச மின் விசிறியை சுழலவிட்டபடி சாப்பிட்டு, இலவச டி.வி.யில் படம் பார்த்து மகிழ்ந்தால் வாழ்வு சுகமாகத்தானே இருக்கும். அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் வரும் பல்வேறு இலவச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கவே இருக்கிறது இலவச காப்பீட்டுத் திட்டம். வயதாகி ஓய்ந்துபோனால் ஊர் சென்றுவர இலவச பஸ் வசதியும், மாதாமாதம் இலவசமாகப் பணமும் தருவார்கள். மக்களைப் பெறப்போகும் கர்ப்பிணிகளுக்கு அரசாங்கமே ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளித் தரப்போகிறது. அதுவும் பெண் குழந்தையாயின் அவள் வளர்ந்த பின் திருமணம் செய்யத் தங்கத் தாலியும் பணமும் கிடைக்கப்போகிறது. நல்ல வேளை மாப்பிள்ளையும் தேடிக் கொடுக்கப்படும் என்று கூறவில்லை!

எனவே குடும்பத்துக்காகவோ, எதிர்காலத்துக்காகவோ, நாட்டுக்காகவோ எதற்காக உழைக்க வேண்டும்? அதனால் இந்த நாடும் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற நிலைமைக்கு மக்கள் வந்து விட்டார்கள் போலிருக்கிறது; அல்லது அந்த நிலையை இருபெரும் கட்சிகளும் உருவாக்கிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.

தமிழனுக்குத் தன்மானம் முக்கியம். சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என்ற முழக்கமெல்லாம் இன்று எங்கே போனதெனத் தெரியவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களின் சுயமரியாதைக்கும் விடப்பட்ட சவாலாக இருக்கின்றன இந்தத் தேர்தல் அறிக்கைகள்.

வாக்காளர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதைத்தான் அரசியல்வாதிகள் கொடுக்க முன் வருகிறார்கள். உழைத்துக் களைத்துச் சாப்பிட்டால்தான் உடலில் ஒட்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்; ஒரு பொருளைச் சும்மா கொடுத்தால்கூட வாங்கத் தயக்கம் காட்டுபவர்கள் எம் தமிழர்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழ். இலவசம் கிடைக்கவில்லை என வீதியில் போராடுகிறான் தமிழன்.

இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் இலவச டி.வி. தருகிறோம், இலவச அரிசி தருகிறோம் என்று தமிழகத்தைப் பின்பற்றி அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் எடுபடாமல் போனாலும்கூட தமிழ்நாட்டில் மட்டும் கைமேல் பலன் தருவது எதைக் காட்டுகிறது? இலவசங்களுக்குத் தமது வாழ்வையும், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வையும் விற்பதற்குத் தமிழர்கள் தலைப்பட்டுவிட்டனர் என்பதையே காட்டுகிறது.

தர்மம் போடுங்க சாமீ என்று யாரேனும் யாசிக்கும்போதுகூட மேலும் கீழும் ஒருமுறை பார்த்துவிட்டுக் 'கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது, உழைத்துச் சாப்பிட்டால் என்ன கேடு' என்று எண்ணாதவர்கள் நம்மில் எத்தனை பேர்?
50 பைசாவைத் தூக்கிப் போடும் ஒரு சில விநாடிகளுக்குள் எத்தனை சிந்தனைகள் நம்முள் ஓடுகின்றன.

இந்த நாடு ஏன் முன்னேறவில்லை என்றோ அல்லது ஏழை, பணக்காரன் இடைவெளி அதிகரித்துவிட்டது என்றோ நினைக்காதவர்கள் யாரேனும் உண்டா?

குறைந்தபட்சம் பிச்சைபோடும் நேரத்திலாவது, வறுமை என்று ஒழியும், எல்லோருக்கும் எல்லாமும் எப்போது கிடைக்கும் என்று நினைக்காத கல் நெஞ்சக்காரர்கள் நம் நாட்டில் குறைவுதானே?
 "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்ற சிந்தனையை அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் போலிருக்கிறது. அதனால்தான் இலவசங்களால் நிறைகிறது தமிழனின் வயிறு. அதைப் பார்த்து குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறது இதர இந்தியர்களின் வயிறு.

தகவல் : அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.