Latest News

  

கசியும் ரகசியங்கள் காட்டும் உண்மைகள்!

ஜனகன் வி. பாலு

தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்காகவும், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏல ஊழல் விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைப்பதற்காகவும், கூச்சலும் குழப்பமும் செய்து நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள் வசம் புளியங்கொம்பாகக் கிடைத்திருக்கிறது, "விக்கிலீக்ஸி'ன் "லட்டு மேட்டர்'.
 இந்தியாவில் அதிகம் பாமர மக்களின் கவன வட்டத்துக்குள் நுழையாத இந்த "விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் மகாத்மியம், 2ஜியின் ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் இழப்பு "லெவலுக்கு' சாமானியர்களின் செவிப்பாறையில் மோதி, கடந்த சில நாள்களாகப் படாதபாடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

 "விக்கிலீக்ஸ்' ஓர் இணையதள ஊடகம். "சன் ஷைன்' பிரஸ் என்ற அச்சக ஊடக நிறுவனம் இந்த அமைப்பை அறிமுகம் செய்தது.
 2007-ம் ஆண்டு முதல் தனது பிரச்னைக்குரிய, சர்ச்சைக்குரிய, அசாதாரணமான, துணிச்சலான பணியை ஆரம்பித்தது...

ஊடக முன் அனுபவமும் அசாதாரணமான துணிச்சலும், சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய சாமர்த்தியமும் உடைய 39 வயதுடைய ஆஸ்திரேலியா நாட்டுப் பிரஜையான ஜூலியன் அசாஞ்சே இந்த விக்கிலிங்ஸின் மூளை, விதை, அஸ்திவாரம், ரிஷி மூலம்... என எல்லாம்.
 சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், விதி 19-ல் "ஒவ்வொரு மனிதனுக்கும் தனது அபிப்பிராயத்தையும் கருத்துகளையும் பதிவு செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும்' என்று ஒரு வாசகம் இருக்கிறது.

 அமெரிக்க நாடு "வடிவம்' பெற காரணமாக இருந்த, ஜனநாயகத்துக்கு மிகச் சரியான விளக்கம் கூறிய தாமஸ் ஜாஃபர்சன், சுதந்திரம் பேணிக் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் "கண்துஞ்சா காவல் அவசியம்' எனக் குறிப்பிட்டார்.

 மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு கோட்பாடுகளையும் குறிக்கோளாகக் கொண்டு கடை திறந்தது விக்கிலீக்ஸ். லாபநோக்கு இல்லாத ஊடக அமைப்பு என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, நாட்டு மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய, தேவையான, அவசியமான தகவல்களை அரசு அமைப்புகள் மூடி மறைக்க எடுக்கும் முயற்சியை முறியடிக்கப் பணிபுரியலாம், வாருங்கள் என தன்னலமில்லாத ஊடக ஆர்வலர்களை அழைத்தார்கள். ஊதியத்தைப் பெரிதாகக் கருதாத சாகச ஊடகத்தினர், நேசக்கரம் நீட்டினர்.

 ரகசியச் செய்திகளை ரகசியமாக, கசியவிடுபவர்கள் யார் எனக் கண்டுபிடிக்க முடியாத வகையில் தகவல்கள் விக்கிலீக்ஸின் "எலக்ட்ரானிக் டிராப் பாக்ஸ்' பெட்டியில் நிரம்பத் தொடங்கின.
 உலகைக் கலக்கிய முதல் செய்தி "பென்டகனி'லிருந்து வந்தது. அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய பாதுகாப்பான பகுதி பென்டகன். அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்காவின் ரகசியக் கோட்டை.

வியத்நாம் யுத்தத்தில் பணிபுரிந்த டேனியல் எல்ஸ் பெர்க் என்பவர் வசம் ஓர் ஆவணக்கட்டு கிடைத்தது. அமெரிக்க அரசு வியத்நாமில் நடத்திய அழிவுவேட்டையைப் பற்றி தம் நாட்டு மக்களுக்கு (ஏன், உலக மக்களுக்கும்தான்) மறைந்த பல அக்கிரமங்களை அட்டூழியங்களை - அக்குவேறாக - பிட்டுப்பிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார், இந்த டேனியல். அமெரிக்க அரசு மூச்சுவிடக்கூட மறந்து விக்கிலிங்ஸில் பார்வையைப் பதித்தது.

 இராக்கில் புஷ் நடத்திய கசாப்புக் கடைப் பணியை விடியோ ஆதாரத்துடன் வீதிக்குக் கொண்டுவந்து வெள்ளித்திரையில் ஒளியுடன் காட்டிற்று விக்கிலீக்ஸ்.
 ஒபாமா என்னதான் மென்மை அணுகுமுறை அதிபராயிருந்தபோதிலும், அமெரிக்க ராணுவத்தினரின் அராஜகப் போக்கைச் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் திக்குமுக்காடித் திணறித்தான் போனார். உபயம், விக்கிலீக்ஸ்.

 இலங்கை அதிபர் ஈழ விடுதலைத் தமிழ்ப் போராளிகளை கொடிய ராட்சஸனின் வெறித்தனத்தோடு குத்திக் குதறிய கொடுமையை, முள்வேலி முகாமிலிருந்து காட்சிப்படுத்திய சாகசத்தை நிகழ்த்திக் காட்ட ஒரு விக்கிலீக்ஸின் துணிச்சல் மட்டும் இல்லாதிருந்தால், இங்கு பழ. நெடுமாறனுக்கும், வைகோவுக்கும், சீமானுக்கும் வேறு சிறந்த ஆதாரம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
 விக்கிலீக்ஸின் சாகசத்தைச் சொல்ல மேலே இரண்டொரு உதாரணங்கள்தான் சொல்லப்பட்டுள்ளன. இதற்கு மேலும் நிறைய உள்ளன.

நமது இந்தியாவிலிருந்து நீரா ராடியாவைத் தோற்கடிக்கும் பல அபூர்வ, அதிசயத் தகவல்களின் பெட்டகமாக விக்கிலீக்ஸ் திகழ்வதை, அருண் ஜேட்லியும், சுஷ்மா ஸ்வராஜும், கம்யூனிஸ்ட் காரத்தும், சீதாராம் யெச்சூரியும் தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருப்பதை ஆங்கில மின்னணு ஊடகங்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

 ஓர் அரசிடம் பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியங்கள் இருக்கும்; இருக்கலாம்; இருக்கவேண்டும். ஆனால், அவை அனைத்தும் தேச நலன் கருதியதாக இருக்க வேண்டும்.
 ஓர் அரசின் தவறான, சுயநலம் கலந்த பாமர மக்களைப் போக்குக்காட்டி ஏமாற்றும் ஆவணங்களை மறைக்க, திருட்டுத்தனமாக ஒளித்து வைக்க ஒரு ஜனநாயக அமைப்பு துணை போகக்கூடாது.
 மணிசங்கர அய்யரை, பெட்ரோலிய அமைச்சர் பதவியிலிருந்து தூக்குமாறு தனது சொந்த நலன் கருதி அமெரிக்கா கூறும் அறிவுரை(ஆலோசனை)யை நம் பிரதமர் ஏற்கிறார்.
 காரணம், நமக்கு அப்பொழுது தெரியவில்லை. இப்பொழுது விக்கிலீக்ஸ் மூலம் தெரிய வருகிறது. இதுபோன்ற விஷயங்களில் அமெரிக்கத் தலையீடு, குறுக்கீடு ஏன்?

தகவல் : அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.