மதுரை:"" சரியான திட்டமிடல் இருந்தால், தமிழ்மொழியில் படித்து, தேர்வெழுதி ஐ.ஏ.எஸ்., ஆகலாம்,'' என தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் முதலாவது கருத்தரங்கில், மனிதநேய ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய இணை இயக்குனர் ராஜராஜன் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:பிளஸ் 2 முடித்த உடனே எதிர்காலம் குறித்த திட்டமிடல் இருக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என நினைத்தால், பொது அறிவுக்காக பத்திரிகைகளை தவறாமல் படிக்க வேண்டும். பொழுதுபோக்காக பக்கங்களை புரட்டாமல், ஒவ்வொரு தகவலையும் பகுத்து ஆராய வேண்டும்.
சிவில் சர்வீஸ் தேர்வில் முதல்நிலை, முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகள் உள்ளன. முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் விருப்பப்பாடம் என்ற தேர்வுகள் நடத்தப்படும். விருப்பப் பாடப் பிரிவில், பிடித்தமான பாடத்திட்டத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம்.ஆங்கிலம் படித்தவர்கள் தான் ஐ.ஏ.எஸ்., ஆகவேண்டும் என்பதில்லை. தமிழிலும் படித்து தேர்வெழுதலாம், வெற்றி பெறலாம். வெறுமனே தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைக்காமல், ஐ.ஏ.எஸ்., தேர்விலேயே அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று நினைத்தால் தான் இலக்கை அடையமுடியும்....
எந்த ஒரு பதவியை அடைய வேண்டுமானாலும், அதற்கேற்ப நமது எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுடன் கலந்துரையாடினால், முழுமையான விளக்கம் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக ஐ.ஏ.எஸ்., ஆவதுடன் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும், என்றார்
21 வயதில் மாதம் அரை லட்சம் ரூபாய் சம்பளம் தரும் சி.ஏ., படிப்புகள் : ஆடிட்டர் ஜி.
சேகர் தகவல்
மதுரை : "" பிளஸ் 2 முடித்து, நான்காண்டுகள் சி.ஏ., படித்தால், 21வயதில் மாதம் 60ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம்,'' என தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், ஆடிட்டர் ஜி.சேகர் தெரிவித்தார். சி.ஏ., / ஏ.சி.எஸ்.,/ ஐ.சி.டபிள்யூ படிப்புகள் குறித்து ஆடிட்டர் ஜி. சேகர் பேசியதாவது: பத்தாண்டுகளுக்கு முன் கல்லூரி முடித்தவர்கள் மட்டுமே சி.ஏ., படிக்க முடிந்தது. தற்போது பிளஸ் 2 முடித்த உடனேயே சி.ஏ., நுழைவுத் தேர்வு எழுதலாம். இதில் ஏழு பாடங்கள் இருக்கும். மார்ச் 31க்குள் பதிவு செய்ய வேண்டும். அனைத்தும் கொள்குறி வகை வினாக்களாக இருக்கும். ஜூன் 19ல் தேர்வு நடக்கும். 200 மதிப்பெண்கள். தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறையும். இதில் தேர்ச்சி பெற்றால் சி.ஏ., படிக்கலாம்.
சி.ஏ., படிப்புக்கென தனியாக கல்லூரி கிடையாது. வீட்டிலிருந்து தான் படிக்க வேண்டும். படிக்கும் போது, ஆடிட்டரிடம் உதவியாளராக சேர்ந்து மாதம் 3000 ரூபாயிலிருந்து உதவித்தொகை பெறலாம். சி.ஏ., முடித்த உடனேயே பி.எச்டி., படிப்பில் சேரலாம். மற்ற படிப்புகளுக்கு இந்த சலுகை கிடையாது. தேர்ச்சி பெற்ற பின், நிறுவனங்கள் வீடு தேடி வந்து வேலை வாய்ப்பை வழங்கும். வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் தனியாக பயிற்சி செய்யலாம். இந்தியாவில் சி.ஏ., படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவை. தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment