எஸ். முத்துக்குமார்
நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்குப் பொதுமக்களிடையே வரவேற்புக் கிடைத்துள்ளது.
ஊரில் திருவிழா என்றதும் காதைச் செவிடாக்கும் ஒலிபெருக்கிகள், கலைக் கூத்துகள், புதிய ஆடைகள், செலவுக்குப் பணம், விருந்து என்று விழா முடியும் வரையில் ஒரே ஜாலிதான்.
திருவிழா முடிந்த பின்னர், ஊரில் திருவிழா நடந்ததற்கான சுவடே இல்லாமல் அமைதியாகக் காட்சியளிக்கும். அதனால்தான் தேர்தலையும் திருவிழா என்று அழைத்தார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் களை கட்டும் ஊர், நகர்ப்புறங்களில், கட்சிக்கொரு தேர்தல் அலுவலகம் (பூத்) அமைத்து கட்சியினர் குடியேறுவர். பூத்தே கதியென்றாகி விடுபவர்களுக்கு டீ, காபி, சாப்பாடு என்று அனைத்தும் இலவசம். கூடவே கைச் செலவுக்குப் பணமும்.
திருவிழாவுக்கு காப்பு கட்டிய சில நாள்களில் திருவிழா தொடங்குவதுபோல, ஒலிபெருக்கி வைத்து தங்களின் கட்சிக் கொள்கைகளை அலற விடுவர். பக்கத்தில் மருத்துவமனையோ, பள்ளியோ, அமைதியைக் காக்க வேண்டிய இடங்களோ, வழிபாட்டுத் தலங்களோ இருப்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை...
இதை எடுத்துக் கூறினாலும் பயனில்லை. விடிய, விடிய அலறும் ஒலிபெருக்கிகள், தேர்தல் முடிந்தவுடன்தான் தங்களது அலறலை நிறுத்தும். அதுவரை வாக்காளர்களைத் தேடி வரும் கட்சியினர் உங்கள் பகுதியில் என்ன குறை, இதை தலைவர் சட்டப்பேரவைக்குச் சென்றதும் முடித்துவிடுவார் என்றும், நம்ம ஊரில் டி.வி. இல்லாத வீடே இல்லை என்ற நிலை ஏற்படும் என்றும் மின் பற்றாக்குறை ஏற்படாது என்றும் கூறுவர். ஆனால், வாக்குப்பதிவு முடிந்தவுடன் திருவிழாவில் கூடிய கூட்டம் கலைவது போலக் கலைந்துவிடுவர். வெற்றி பெற்றவரைச் சந்திக்கச் சென்றால், அதன் பிறகு நடப்பது தனிக் கதை.
இவ்வாறு மக்களின் வரிப் பணம் திருவிழாவுக்காகச் செலவிடப்படுவது தடுக்கப்படாதா, பொதுமக்களின் நலனைப் பற்றிச் சிந்திக்கும் அமைப்புகள் தோன்றாதா என்ற ஏக்கம் இருந்தபோது தேர்தல் என்றால் திருவிழா அல்ல, தேர்தல் ஆணையம் திருவிழாவை நடத்தி வைத்து விரயம் ஏற்படுத்தும் அமைப்புமல்ல என்பதை உணர்த்தினார் அப்போதைய தேர்தல் ஆணையர் டி.என். சேஷன்.
அதன் பின்னர் வந்த தேர்தல் ஆணையர்களும் தங்களின் பணியைச் சரிவரச் செய்ததோடு, தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு, அதை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தத் தொடங்கினர். அதன் விளைவு, தற்போதைய தலைமுறையிலேயே தெரிய வந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நடத்தை விதிகள் கடுமையானவை எனக் கூறப்பட்டாலும், பெரும்பாலான பொதுமக்களால் அவை மிகவும் விரும்பி வரவேற்கப்பட்டுள்ளன.
ஒலி மாசு ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளின் அளவை அதிகரிக்கக் கூடாது என்பதில் தொடங்கி, வேட்பாளர்களின் ஒவ்வொரு அசைவையும் தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்துகிறது.
வாகன ஊர்வலங்கள் நடத்தி பலத்தை நிரூபிக்கிறேன் எனக் கூறி நாட்டின் வளத்தை வீணாக்கக் கூடாது. தேர்வெழுதும் மாணவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகத் தேர்வு மையங்களிலிருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் கூடாது. வீட்டு உரிமையாளரை மதிக்காமல், அவர் வீட்டிலேயே கட்சிச் சின்னங்களை வரைந்து பயமுறுத்துவது, தலைவரை வரவேற்கிறேன் எனக் கூறி லட்சங்களை விரயமாக்கி, தோரணங்கள், பந்தல்கள், மேடைகள் அமைத்து கூட்டம் சேர்க்கப் பணத்தைச் செலவழிப்பது போன்ற தடாலடிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
வழக்கமான திருவிழாவைக் கண்டவர்கள் இந்தத் தேர்தல் ஏன் களையிழந்துவிட்டது என்கின்றனர். சாதாரணமாக நடைபெற வேண்டிய ஒரு நிகழ்வைத் திருவிழாவாக மாற்றியதே நாம்தானே.
அதை நமக்கு தற்போது உணர்த்த வருவதுதான் தேர்தல் ஆணையம். ஓர் இடத்தில் கட்சியின் சின்னம் வரையப்பட்டிருந்தால், அக் கட்சி சார்பில் அத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் செலவுக் கணக்கில் வரவு வைப்பது, ஆலோசனைக் கூட்டங்களில் கூடும் தொண்டர்களுக்கு உணவளித்தால், அதையும் செலவுக் கணக்கில் சேர்ப்பது என்று கிடுக்கிப்பிடியை அதிகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்பால் வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே இதற்கு வெற்றி கிடைக்கும்.
தன்னிடம் பணமோ, அன்பளிப்புகளோ கொடுக்க வருவோர் குறித்த தகவல்களைத் தேர்தல் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். அல்லது அந்த வகையான பொருள்களை வாங்க மறுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் முக்கியமான பணியில் 75 சத வெற்றி கிடைக்கும்.
தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு மட்டுமான ஆணையமாக இல்லாமல் அனைத்து நாள்களிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்குமானால், தேவையில்லாமல் சாலைகள் குண்டும், குழியுமாக மாறுவது தடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும். வீண் பகட்டுக்கான வெடிச் சத்தங்கள் குறையும்.
ஜனநாயக நாட்டில் மக்கள்தான் மன்னர்கள் என்பதை உணர்த்தி வரும் தேர்தல் ஆணையத்தின் பணிகள் தொடரட்டும். மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டிய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கடைப்பிடித்து நம்மை நாமே முன்னேற்ற வேண்டும்
தகவல் M. அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment