விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி. இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். இவருடைய தந்தை நகைக் கடை உரிமையாளர். சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர்.10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்ததுடன், இந்தியில் பி.ஏ., முடித்து உள்ளார்.
பட்டப் படிப்புகளை வெற்றிகரமாக மேற்கொள்ள சுஜிதாவுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வந்த அவருடைய தாய், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதவும் ஊக்கமளித்துள்ளார். இதனால் இந்திய குடிமைப் பணிகளில் ஆர்வம் ஏற்பட்டு, பயிற்சிக்காக சுஜிதா சென்னை வந்துள்ளார். இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, நுங்கம்பாக்கம் எக்ஸெல் பயிற்சி நிலையத்தில், தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
முதன்மைத் தேர்வுக்காக மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி மேற்கொண்டு, அதிலும் இப்போது தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியானதில், பார்வையற்ற பெண் சுஜிதா முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்....
தனது முயற்சி குறித்து சுஜிதா கூறியதாவது:
இந்திய ஆட்சி பணித் துறைக்கான ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி.
எனது தாய் அடிக்கடி, உன்னால் இந்த உலகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், இந்த உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் வகையில் சாதனை புரிய வேண்டும் என்று கூறியதுடன், செய்தித் தாள்களைப் படித்து காட்டுவது உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினார். நிச்சயம் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன். தாயின் தொடர் ஊக்குவிப்பே என்னுடைய தொடர் வெற்றிக்கு காரணம். பார்வையில்லாதது ஒரு குறையே இல்லை என்று அவரது தாய் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். தாய் தான் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கும் ஊக்கமளித்தார்.
பார்வையற்றவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆடியோ பாடங்கள் தொடர்பாக வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் தீவிர பயிற்சி மேற்கொண்டேன். ஆர்வமும், தன்னம்பிக்கையும் இருந்தால் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை பயிற்சிகளை மேற்கொண்டேன். நேர்முகத் தேர்விலும் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.
விழிகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து பீடு நடை போட்டு இன்று உச்சத்தை எட்டியுள்ள சுஜிதாவின், இந்த சாதனை, சாமானியமானதல்ல, மற்றவர்களையும் சாதிக்கத் தூண்டும் மிகப் பெரிய உந்து கோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளையில் பயிற்சி பெற்றுத் தேர்வு எழுதிய 135 மாணவ-மாணவியரில் 68 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை நடத்திவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவச கல்வியகத்தின் மூலமாக, கடந்த 4 ஆண்டுகளில் பயிற்சி பெற்ற 87 மாணவ, மாணவியர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, மத்திய அரசுப் பணியிலும், பணி பயிற்சியிலும் உள்ளனர்.
நேர்முகத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், இதில் ஐ.ஏ.எஸ். மாதிரி நேர்முகத் தேர்வுகள், ஆளுமைக்கான வகுப்புகள், டெல்லிக்கு அழைத்துச் சென்று அங்கு நடத்தப்படும் என்றும், அதற்கான பயணம், தங்குமிட வசதி, உணவு, பயிற்சி அனைத்தும் அறக்கட்டளையின் சார்பாக இலவசமாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் வெளி மாணவ-மாணவியரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், மாணவ, மாணவியர் தக்க சான்றிதழ்களுடன் மையத்தில் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை நாளை (04.03.2011) முதல் பதிவு செய்துக் கொள்ளலாம் என்றும் பயிற்சி மையத்தின் இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்கள் அறிய 044-2435 8373 அல்லது செல்பேசி எண் 98401 06162 தொடர்பு கொள்ளலாம் என்றும் மனிதநேய அறக்கட்டளை அறிவித்துள்ளது.
நன்றி அதிரை முஜிப்.காம்
தகவல் அதிரை அல்மாஸ்
No comments:
Post a Comment