கடந்த டிசம்பர் மாதம் 25ஆம்தேதி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஏவிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தோல்வி அடைந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது.
இத்தோல்விக்கான காரணத்தைக் கண்டறி இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆய்வு தொடர்பாக எதிர்கால திட்டங்கள் குறித்து ஆராய இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு குழுக்களும் இந்த மாத இறுதிக்குள் ஆய்வறிக்கையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு குழுக்களை சேர்ந்தவர்களும் தங்கள் ஆய்வை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், முதல் கட்ட ஆய்வில் ஜி.எஸ்.எல்.வி. தோல்விக்கான காரணங்கள் தெரிய தொடங்கியுள்ளன. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் முழு இயக்கம் செயல்பாட்டை கிரையோ ஜெனிக் என்ஜின்தான் செய்தது.
இந்த என்ஜின் ரஷியாவில் தயாரிக்கப்பட்டதாகும். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் உச்சி தலைப்பகுதியில் இது வைக்கப்பட்டிருந்தது. கிரையோஜெனிக் என்ஜினின் அடிப்பாகத்தில் 10 இணைப்புகள் உண்டு. இந்த இணைப்புகள் மூலம்தான் கம்ப்யூட்டரில் இருந்து வெளியாகும் உத்தரவுகள் செயல்படுத்தப்படும். எரிபொருள் பகுதிகள் ஒவ்வொன்றாக இயங்கவும் அவை தனித்தனியாக பிரியவும் இந்த இணைப்புகள்தான் உதவுகின்றன.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட்ட 292 வினாடிகளுக்குப் பிறகே கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர் மூலம் இந்த உத்தரவுகள் வரத் தொடங்க வேண்டும். ஆனால் கடந்த 25ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட்ட 47.8வது வினாடியே 10 இணைப்புகளும் உத்தரவுகளை பெற்று ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுவிட்டதால், ராக்கெட்டின் அடுத்தடுத்த இயக்கம் நின்று போனது. 10 இணைப்புகளும் துண்டிக்கப்பட்ட மறு வினாடியே ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டு பாதை மாறியது. இதைத் தொடர்ந்து 53.8-வது வினாடி ராக்கெட் வெடிக்க வைத்து தகர்க்கப்பட்டது என்று முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment