Latest News

  

காமக்கொடூரன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கோவை, ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் ரஞ்சித்குமார்;  இவருக்கு முஸ்கின் (11), ரித்திக் (9) ஆகிய குழந்தைகள் இருந்தனர். அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த முஸ்கினும், ரித்திக்கும் கடந்த 29ம்தேதி காலை வழக்கம்போல வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பினர்.  வழக்கமாக குழந்தைகளை அழைத்துச் செல்லும் கால் ‌டாக்ஸிக்கு பதிலாக வேறு ஒரு கால் டாக்சி வந்தது. அதனை ஓட்டிய டிரைவர் இதற்கு முன்பு முஸ்கினையும், ரித்திக்கையும் பள்ளிக்கு அழைத்து சென்ற டிரைவர் என்பதால் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு அழைத்து செல்லத்தான் கால்டாக்ஸி வந்திருப்பதாக எண்ணி அதில் ஏறினார்கள். ஆனால் அந்த வேன் பள்ளிக்கு செல்லாமல் வேறு பாதையில் சென்றது.

குழந்தைகள் இருவரையும் கடத்தி, தந்தை ரஞ்சித்குமாரிடம் பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்துடன் கால்டாக்ஸி டிரைவர் அவர்களை கடத்திச் சென்றான். போகிற வழியில் துணையாக தனது நண்பனையும் அழைத்துக் கொண்ட அந்த டிரைவர், சிறுமி முஸ்கினை நண்பனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரமும் செய்துள்ளான். பின்னர் போலீசில் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்த அவர்கள், குழந்தைகளை கொடூரமான முறையில் தண்ணீரில் தள்ளி விட்டு கொலை செய்துள்ளனர்.

கோவை நகரையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இக்கொடூரத்தை அரங்கேற்றிய அரக்க கொலையாளிகளான ‌கால்டாக்ஸி டிரைவர் மோகன்ராஜி என்ற மோகனகிருஷ்ணன்  (33), அவனது நண்பன் மனோகரன் (23) ஆகியோரை போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒன்றுமே அறியாத குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளிகள் என கேள்விப்பட்டதும், சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகளே, அவர்களை அடிக்க பாய்ந்த சம்பவமும் நடந்துள்ளது.

சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்து ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளி மோகன்ராஜையும், அவனது நண்பனையும் விசாரணை இன்றி தூக்கில் போட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் குற்றவாளிகளை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், சம்பவம் குறித்து விசாரித்ததுடன், போலீஸ் காவலில் செல்ல சம்மதமா? என குற்றவாளிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ‌போலீசுடன் செல்ல சம்மதம் ‌தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.

கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணி அளவில் போலீசார் குற்றவாளிகள் இருவரையும் விசாரனைக்காக அழைத்து சென்றனர். வெள்ளளூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே சென்றபோது, ‌கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியையேப் பிடுங்கி, போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான். அவன் சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகியோர் காயம் அடைந்தனர்.

குற்றவாளி தப்பி ஓடுவதை பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மோகன்ராஜை நோக்கி சுட்டதில் மோகன்ராஜின் தலையிலும், மார்பிலும் குண்டு பாய்ந்து, குற்றவாளி மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தான்.   மோகன்ராஜ் சுட்டதில் காயமடைந்த போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மோகன்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான மனோகரன் ‌போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ் கஸ்டடியில் இருக்கின்றான். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகள் இருவரும் தனித்தனி வாகனத்தில் போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 comment:

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.