Latest News

  

இறந்த கழுதையின் பிணத்தை தின்பதை விட கேடானது!

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபையில் 'மாயிஸ்' என்ற தோழர் வந்து, தான் ஒரு பெண்ணுடன் தவறான முறையில் நடந்து கொண்டதாகச் சொன்னார். அவரின் சொல்லை நபிகள் (ஸல்) அவர்கள் புறக்கணித்தவர்களாக இருந்தார்கள். எனவே அவர் மீண்டும் மீண்டும் சொன்னார். நான்கு தடவை சொல்லி முடித்தார். அப்பொழுதும் பெருமானார் அவர்கள் எதுவும் பேசவில்லை.

ஐந்தாவது முறை அவர் சொல்லும்போது அவரிடம் 'நீர் அவளுடன் உடலுறவு கொண்டீரா?' என்று கேட்டார்கள். 'ஆம்!' என்றார்கள் மாஈஸ் அவர்கள். 'உன்னில் நின்றும் 'அது' அவளின் நின்றும் 'அதிலே' மறையுமளவுக்கு நடந்தீரா?' என்று மீண்டும் வினவினார்கள்.

மறுபடியும் 'ஆம்!' என்றார்கள் மாஈஸ்.

அப்பொழுதும் மாஈஸ் அவர்களை  குற்றவாளி என்று ஒப்ப பெருமானார் (ஸல்அவர்களுக்கு மனம் வரவில்லை. மேலும் தொடர்ந்து பல கேள்விகள் கேட்டார்கள். 'சுர்மா புட்டியிலே சுர்மா குச்சி மறைவது போலவும், கிணற்றுக்குள்ளே கயிறு மறைவது போலவும் மறைந்ததா?' என்றும் கேட்டார்கள்.

'ஆம்!' என்றே மறுபடியும் தக்வா நிறைந்த அந்த ஸஹாபி கூறினார்.

'விபச்சாரம் என்றால் என்னவென்று தெரியுமா?' என்று கேட்டவுடன், அவர் விஷயத்தை படு பயங்கரமாக வெளிப்படுத்த விரும்பியவராக, 'ஆம்! ஓர் ஆண்மகன் தன் மனைவியுடன் 'ஹலாலாக' நடந்து கொள்வானே அதே காரியத்தை அப்பெண்ணுடன் நான் 'ஹராமாக' நடத்தி விட்டேன்' என்றார்கள்.

'இவ்வாறு சொல்வதன் மூலம் உமது நோக்கம் யாது?' என்று இறுதியாகக் கேட்டார்கள். '(இக்குற்றத்திற்கான தண்டனையை நிறைவேற்றுவதன் வாயிலாக) என்னை தூய்மைப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்' என இறையச்சம் நிரம்பி நின்ற அந்த  ஸஹாபி  பதிலளித்தார்கள்.

தாம் செய்த குற்றத்தை தாமே மனமுவந்து விண்ணப்பித்து, தண்டனையை ஏற்றுக்கொள்ள முன்வந்து விட்ட பிறகு வேறு வழியின்றி அவருக்கு விபச்சாரத்திற்குரிய தண்டனையை நிறைவேற்ற அண்ணலார் அவர்கள் ஆணையிட்டார்கள். அதன்படி நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தோழர் இருவர் பேசிக் கொண்டிருப்பது நபி (ஸல்) அவர்களின் செவிகளில் விழுகிறது. ஒருவர் சொல்கிறார், 'பார்த்தீரா அவரை! அல்லாஹ்வே அவரது குற்றத்தை மறைத்து விட்டான். (வேறு யாரும் அவர் செய்ததை காணவில்லை) எனினும் அவர் மனம் விடவில்லை. தாம் நடந்து கொண்டதை பகிரங்கமாக எடுத்துக் கூறியதால் இப்போது நாயை அடிப்பது போல அடித்து சாகடிக்கப்பட்டார்' என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றும் பேசாமல் மவுனமாக இருந்து விட்டார்கள்.
சற்று நேரம் சென்றது. வழியில் ஒரு கழுதை செத்துப் போய் அதன் வயிறு ஊதிய வண்ணம் காலைத் தூக்கிக் கொண்டு பார்ப்பதற்கே அவலட்சணமாகக் காட்சியளித்தது.

அதைக்கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இன்னாரும் இன்னாரும் எங்கே? என்று சற்று முன் பேசிக் கொண்டிருந்த அவ்விருவரையும் அழைத்தார்கள். இருவரும் அருகில் வந்தவுடன், ''நீங்கள் இருவரும் அந்தப் பள்ளத்தில் இறங்கி அந்த கழுதையின் பிணத்தின் மாமிசத்தைத் திண்ணுங்கள்!'' என்றார்கள். அதை கேட்டு அதிர்ந்து போன அவ்விருவரும், ''நாயகமேஇதை யாராவது சாப்பிடுவார்களா?' என்று பதறிப்போய் கேட்டார்கள்.

அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்கள் அமைதியாக அவர்களிடம், ''நீங்களிருவரும் சற்று முன்னர் உங்களின் சகோதரரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தது, அந்த கழுதையின் பிணத்தை திண்பதை விடவும் மிகக் கொடியதாகும்.

எனது ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது அணையாக இப்பொழுது அவர் (விபச்சாரம் செய்ததற்குப் பரிகாரமாக கொல்லப்பட்டவர்) சுவனத்தின் ஆறுகளில் மூழ்கி ஆனந்தித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தியை இமாம் அபூதாவூது (ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். (நூல்: மிஷ்காத் - பக்கம் 316)

சகோதர சகோதரிகளே!

விபச்சாரத்திற்குரிய தண்டனை பெற்றவர் உலகின் கண்களுக்கு கேவலமாகவும், இழிவாகவும் காட்சியளிக்கலாம். ஆனால், அவர் தவறிலிருந்து தூய்மை பெற்று விடுகின்றார். மரணத்திற்குப்பின் சுவர்க்கவாசியாகி விடுகிறார் என்பது இங்கே ஒரு முக்கியமான விஷயமாகும்.

அடுத்து, ஒருவரைப்பற்றி இழிவாகப் பேசுவது கழுதையின் அழுகிப்போன பிணத்தை திண்பதைவிட கேடுகெட்டதாகும். இதை நாம் புரிந்து திருந்துவோமா? ''புறம்பேசுவது என்றால் என்னவென்று அறிவீர்களா?'' என்று முஹம்மது (ஸல்) அவர்கள் வினவ, தோழர்கள் ''அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று கூறினார்கள்.

உன் சகோதரன் அருகில் இல்லாதபோது அவன் கேள்விப்பட்டால் வருந்தக்கூடிய செய்திகளைப் பேசுவதுதான் ''புறம் என்பது'' எனப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

நாயகமே! (ஸல்) நான் அவரிடம் இருப்பதைத்தானே பேசுகிறேன். அதுவும் புறம் ஆகுமா? என ஒருவர் அடுத்துக் கேட்க, ''ஆம்! அவரிடம் உள்ளதைக் கூறினால் தான் புறம். இல்லாததைக் கூறினால் அது அவதூறு எனும் பெரும் குற்றமாகிவிடும்'' என்று நபி (ஸல்அவர்கள் விளக்கினார்கள்.

கழுதையின் பிணத்தைவிட மோசமான உணவைத் திண்ணுவதற்கு எவரேனும் விரும்புவோமா என்ன! எனவே இனியாவது தவ்பா செய்து, புறம் மற்றும் அவதூறு பேசுவதை நிறுத்திக் கொள்வோம். நமது நாவைப் பேணுவோம்! நல்வழி நடப்போம். அல்லாஹ் அருள்புரிவானாக, ஆமீன்.

-மவ்லவி லியாகத் அலீ மன்பஈ, பேட்டை.
நன்றி நீடுர்.இன்போ

 

1 comment:

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.